கேரளத்தில் அரசியல் படுகொலைகள்: மார்க்சிஸ்ட் மீது ஜேட்லி கடும் குற்றச்சாட்டு

கேரளத்தில் அரசியல் எதிரிகளைக் கொலை செய்வதற்கு, ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது தொண்டர்களைப் பயன்படுத்திக் கொள்வதாக மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி குற்றம்சாட்டினார்.
திருவனந்தபுரத்தில் படுகொலை செய்யப்பட்ட ஆர்எஸ்எஸ் தொண்டர் ராஜேஷின் குடும்பத்தினரை ஞாயிற்றுக்கிழமை சந்தித்த மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி.
திருவனந்தபுரத்தில் படுகொலை செய்யப்பட்ட ஆர்எஸ்எஸ் தொண்டர் ராஜேஷின் குடும்பத்தினரை ஞாயிற்றுக்கிழமை சந்தித்த மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி.

கேரளத்தில் அரசியல் எதிரிகளைக் கொலை செய்வதற்கு, ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது தொண்டர்களைப் பயன்படுத்திக் கொள்வதாக மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி குற்றம்சாட்டினார்.
கேரளத்தில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் தொண்டரான ராஜேஷை திருவனந்தபுரம் அருகே ரவுடிக் கும்பலைச் சேர்ந்தவர்கள் கடந்த மாதம் 29-ஆம் தேதி அடித்துக் கொலை செய்தனர். அவரது குடும்பத்தினரைச் சந்திப்பதற்காக மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவர்களில் ஒருவருமான அருண் ஜேட்லி ஞாயிற்றுக்கிழமை திருவனந்தபுரம் வந்தார்.
அங்கு அவர் ராஜேஷின் இல்லத்துக்குச் சென்று அவரது குடும்பத்தாரைச் சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது கேரள மாநில பாஜக தலைவர் கும்மணம் ராஜசேகரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர். அதேபோல், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தொண்டர்களால் நிகழ்த்தப்பட்டதாகக் கூறப்படும் தாக்குதலில் காயமடைந்த மற்றொரு ஆர்எஸ்எஸ் தொண்டர் ஜெயப்பிரகாஷின் குடும்பத்தாரையும் ஜேட்லி சந்தித்தார். அதைத் தொடர்ந்து ராஜேஷுக்கு இரங்கல் தெரிவிக்கும் கூட்டம் நடைபெற்றது. அதில் ஜேட்லி பேசியதாவது:
தொண்டர் ராஜேஷ் கொடூரமான முறையில் தாக்கிக் கொலை செய்யப்பட்டார். அவரது உடலில் 70 முதல் 80 காயங்கள் வரை உள்ளன. நமது எதிரி நாடு கூட இதைச் செய்யாது. எதிர் அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்களே இதில் சம்பந்தப்பட்டுள்ளன.
ராஜேஷுக்கு இரங்கல் தெரிவிப்பதற்காக நாம் இங்கு திரண்டுள்ளோம். அவரது தியாகம் நம்மோடு இருப்பதோடு, ஒவ்வொரு தொண்டருக்கு அது ஊக்கமளிக்கும். அவரது குடும்பத்தாரைக் கவனித்துக் கொள்ள நாம் தற்போது கடமைப்பட்டுள்ளோம்.
இயற்கையின் கொடையால் இந்த மாநிலம் ஆசிர்வதிக்கப்பட்டுள்ளது. எனினும், மாநிலத்தை நாட்டிலேயே மிகவும் செழிப்பானதாக மாற்றுவது எப்படி? என்பது எந்த ஓர் அரசுக்கும் ஒரு சவாலாகவே இருக்கும். ஆனால், இந்த மாநிலத்தில் அரசியல் படுகொலைகள் தொடர்கதையாகி விட்டது. அரசியல் எதிரிகளைக் கொலை செய்வதற்கும், வன்முறைச் சூழலை உருவாக்குவதற்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது தொண்டர்களைப் பயன்படுத்திக் கொள்கிறது. இந்த விவகாரத்தில் அக்கட்சி சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
கேரளத்தில் கடந்த மாதம் ராஜேஷ் கொலை செய்யப்பட்டதோடு, அண்மையில் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சேர்ந்தவர்களின் வீடுகள் மீதும் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. மாநிலத்தில் வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்துள்ளதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிதான் காரணம். இதுபோன்ற சம்பவங்களைத் தடுப்பதற்கு இடதுசாரி ஜனநாயக முன்னணி அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
எனினும், வன்முறை மூலம் ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவையும் ஒடுக்கி விட முடியாது. மாறாக, கடுமையாகப் பணியாற்றுவதற்கான நமது தொண்டர்களின் மன உறுதி மேலும் அதிகரிக்கும்.
நமது இயக்கமும், கட்சியும் இதுபோன்ற பல்வேறு வகையிலான தாக்குதல்களை பல தலைமுறைகளாக சந்தித்தபோதிலும், உயிர்ப்போடு இயங்கி வருவதை, வன்முறையைத் தூண்டுவோர் நினைவில் கொள்ள வேண்டும். இதுபோன்ற வன்முறையால் நமது சித்தாந்தத்தை ஒடுக்கவும் முடியாது; நமது தொண்டர்களை அச்சுறுத்தவும் முடியாது.
நாட்டின் மற்ற பகுதிகளில் நடைபெறும் வன்முறைச் சம்பவங்களுக்கு எதிராகக் கருத்து கூறுவோர், கேரளத்தில் தொடர்ச்சியாக நடைபெற்று வரும் வன்முறைச் சம்பவங்கள் குறித்து எந்தக் கருத்தும் கூறாமல் மெனளம் சாதிப்பது ஏன்?
கேரளத்தில் இடதுசாரிகள் ஆட்சிக்கு வரும்போதெல்லாம் வன்முறை அதிகரித்து விடுகிறது. வன்முறையில் ஈடுபடுபவர்களைச் சட்டத்தின் முன் நிறுத்துவது ஆட்சியாளர்களின் கடமை என்றார் ஜேட்லி.

பாஜக மீது மார்க்சிஸ்ட் தாக்கு

அருண் ஜேட்லியின் குற்றச்சாட்டுகளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கேரள மாநிலச் செயலர் கொடியேறி பாலகிருஷ்ணன் மறுத்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், "கேரளத்துக்கு அமித் ஷா கடந்த ஜூன் மாதத்தில் வருகை தந்த பிறகுதான் அரசியல் வன்முறைகள் அதிகரித்தன. வன்முறையில் ஈடுபடுவதன் மூலம் அமித் ஷா திட்டத்தை பாஜக அமல்படுத்தி வருகிறது' என்றார்.
மேலும், ஜேட்லியின் குற்றச்சாட்டுகளை மறுக்கும் வகையில் திருவனந்தபுரம் ஆளுநர் மாளிகை முன்பு சத்தியாக்கிரகப் போராட்டத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஞாயிற்றுக்கிழமை நடத்தியது. அதில், ஆர்எஸ்எஸ் அமைப்பினரால் கொல்லப்பட்டதாகக் குற்றம்சாட்டப்படும் மார்க்சிஸ்ட் தொண்டர்கள் 21 பேரின் உறவினர்களும் பங்கேற்றனர். மாநிலத்தில் அரசியல் வன்முறை தொடர்பாக பாஜக பொய்ப் பிரசாரத்தில் ஈடுபடுவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் குற்றம்சாட்டினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com