பாலியல் பலாத்கார வழக்கு: எம்எல்ஏ-வின் ஜாமீன் மனு தள்ளுபடி

பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் ஜாமீன் கோரி, கேரள காங்கிரஸ் எம்எல்ஏ எம். வின்சென்ட் தாக்கல் செய்த மனுவை திருவனந்தபுரம் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் ஜாமீன் கோரி, கேரள காங்கிரஸ் எம்எல்ஏ எம். வின்சென்ட் தாக்கல் செய்த மனுவை திருவனந்தபுரம் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
கேரள மாநிலம், கோவலம் சட்டப் பேரவை தொகுதி எம்எல்ஏவாக இருப்பவர் வின்சென்ட். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இவர் மீது 51 வயதான பெண் ஒருவரும், அவரது கணவரும் காவல்நிலையத்தில் கடந்த மாதம் 19-ஆம் தேதி புகார் அளித்தனர். அந்த புகாரில், பெண்ணுக்கு தொடர்ந்து தொலைபேசி அழைப்புகளை மேற்கொண்டு தொந்தரவு அளிப்பதாகவும், இதனால் மனமுடைந்து பெண் தற்கொலைக்கு முயன்றதாகவும் அவர்கள் குறிப்பிட்டிருந்தனர்.
இந்த புகாரின் அடிப்படையில், வின்சென்டுக்கு எதிராக பாலியல் பலாத்காரம், பெண்ணை பின்தொடர்தல், தற்கொலைக்கு தூண்டுதல் ஆகிய குற்றச்சாட்டுகளின்கீழ் போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும், அவரை கடந்த மாதம் 22-ஆம் தேதி போலீஸார் கைது செய்தனர்.
இந்த வழக்கு, அரசியல் உள்நோக்கத்துடனும், தன்னை அவமானப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்துடனும் தொடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்து, வழக்கில் ஜாமீன் கேட்டு, நயன்டினகரா நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் வின்சென்ட் மனு தொடுத்தார். ஆனால், அந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இதையடுத்து, திருவனந்தபுரம் மாவட்ட மற்றும் குற்றவியல் நீதிமன்றத்தில் வின்சென்ட் தரப்பில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு, திருவனந்தபுரம் நீதிமன்றத்தில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது அரசு தரப்பில், வின்சென்டுக்கு ஜாமீன் அளிக்க எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது. இதையேற்று, வின்சென்டின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com