கவுரவ போட்டியில் வெற்றி பெற்ற அகமது படேல் வரலாறு!

குஜராத்தில் நடைபெற்ற மாநிலங்களவைத் தேர்தலில் திடீர் திருப்பமாக நள்ளிரவுக்கு மேல் காங்கிரஸ் வேட்பாளர் அகமது படேல் வெற்றி பெற்றதாக
கவுரவ போட்டியில் வெற்றி பெற்ற அகமது படேல் வரலாறு!

குஜராத்தில் நடைபெற்ற மாநிலங்களவைத் தேர்தலில் திடீர் திருப்பமாக நள்ளிரவுக்கு மேல் காங்கிரஸ் வேட்பாளர் அகமது படேல் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 2 அதிருப்தி எம்எல்ஏக்கள் அளித்த வாக்குகளைச் செல்லாது என்று அறிவித்த தேர்தல் ஆணையம் வாக்குகளை எண்ண உத்தரவிட்டது. இதையடுத்து, அகமது படேல் 44 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

பாஜக சார்பில் போட்டியிட்ட பாஜக தலைவர் அமித் ஷா, மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி ஆகியோரும் வெற்றி பெற்றதாக தெரிவிக்கப்பட்டது.

குஜராத்தில் இருந்து மாநிலங்களவைக்கு உறுப்பினர்களாகத் தேர்வு செய்யப்பட்ட ஸ்மிருதி இரானி, அகமது படேல் உள்ளிட்ட 3 பேரின் பதவிக்காலம் நிறைவடைகிறது. இதையடுத்து, அந்த 3 இடங்களுக்கும் நேற்று செவ்வாய்க்கிழமை தேர்தல் நடத்தப்பட்டது. இந்தத் தேர்தலில், பாஜக சார்பில் அக்கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷா, ஸ்மிருதி இரானி, பாஜகவில் அண்மையில் இணைந்த காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ பல்வந்த் சிங் ராஜ்புத் ஆகியோரும், காங்கிரஸ் சார்பில் அகமது படேலும் போட்டியிட்டனர். இதில், அமித் ஷா, ஸ்மிருதி இரானி ஆகியோரின் வெற்றி உறுதி என்ற நிலையில், ராஜ்புத், அகமது படேல் ஆகிய இருவரில் யார் வெற்றி பெறுவார் என்ற எதிர்பார்ப்பு நிலவியது.

இந்தத் தேர்தலில், அண்மையில் ராஜிநாமா செய்த 6 காங்கிரஸ் எம்எல்ஏக்களைத் தவிர்த்து, 176 எம்எல்ஏக்களும் பங்கேற்று வாக்குகளைப் பதிவு செய்தனர். இதைத் தொடர்ந்து, மாலை 5 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்குவதாக இருந்தது. ஆனால் அவ்வாறு வாக்குகள் எண்ணப்படவில்லை.

காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ராகவ்ஜி பாய் படேல், போலா பாய் கோஹில் ஆகிய 2 பேர், வாக்குகளை அளித்ததும், அதை காங்கிரஸ் கட்சிப் பிரதிநிதியிடம் மட்டுமன்றி, பாஜகவினரிடமும் காண்பித்ததாகக் கூறப்படுகிறது. இவர்கள் 2 பேரும், காங்கிரஸில் இருந்து அண்மையில் விலகிய மூத்த தலைவர் சங்கர்சிங் வகேலாவின் ஆதரவு எம்எல்ஏக்கள் ஆவர்.

இதைத் தொடர்ந்து, விதிகளை மீறி தங்களது வாக்குகளை பிறரிடம் 2 பேரும் காண்பித்ததால், அவர்களது வாக்குகளைச் செல்லாது என அறிவிக்கக்கோரி தேர்தல் ஆணையத்திடம் காங்கிரஸ் கட்சி தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டது. காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ரன்தீப் சுர்ஜேவாலா, ஆர்பிஎன் சிங் ஆகியோர், தேர்தல் ஆணைய அதிகாரிகளை சந்தித்து, வாக்குப்பதிவின்போது எடுக்கப்பட்ட விடியோ ஆதாரத்தையும் வழங்கினர்.

இதையடுத்து, காங்கிரஸ் அளித்த விடியோ ஆதாரத்தின் மீது தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்தி, அதை ஏற்றுக் கொண்டது. தேர்தலின்போது விதியை மீறிய காரணத்துக்காக 2 எம்எல்ஏக்களின் வாக்குகளை செல்லாது என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இதைத் தொடர்ந்து, சுமார் 7 மணி நேர தாமதத்துக்குப் பிறகு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. 2 எம்எல்ஏக்களின் வாக்குகள் செல்லாதவைகளாக அறிவிக்கப்பட்டதை அடுத்து, அகமது படேல் 44 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

முன்னதாக, ஐக்கிய ஜனதா தளக் கட்சி எம்எல்ஏ சோட்டு வசவா, காங்கிரஸ் வேட்பாளர் அகமது படேலுக்கு வாக்களித்ததாகத் தெரிவித்தார். காங்கிரஸில் இருந்து அண்மையில் விலகிய மூத்த தலைவர் சங்கர்சிங் வகேலா, அகமது படேலுக்கு எதிராக வாக்களித்ததாகக் குறிப்பிட்டார்.

இதேபோல், வகேலா ஆதரவு காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 7 பேரும், கட்சி மாறி வாக்களித்ததாக காங்கிரஸ் மூத்த தலைவர் கெலாட் தெரிவித்தார்.

காங்கிரஸுக்கு வாக்களித்த பாஜக எம்எல்ஏ: பாஜக எம்எல்ஏ கோடாதியா என்பவர், கட்சி மாறி, காங்கிரஸுக்கு வாக்களித்ததாக தெரிவித்தார்.

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் பாஜவுக்கு தண்ணீர்காட்டிய அகமது படேல், தேசிய அளவில் விவாதிக்கப்படும் அளவிற்கு முக்கியத்துவம் பெறக் காரணம் என்ன? என பலதரப்பில் இருந்து கேள்விகள் துளைத்தெடுத்தது. தற்போது அவர் குறித்த அதிரடி தகவல்கள்.

காங்கிரஸ் கட்சியின் தற்போதைய நிலையில், சோனியா, ராகுலுக்கு அடுத்தபடியாக செல்வாக்கு மிக்க மனிதராக அறியப்படுபவர் அகமது படேல். இவர் 1949 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 21-இல் பிறந்தார்.

இவர் குஜராத்தில் இருந்து மாநிலங்களவைக்கு நடைபெற்ற தேர்தலில் 1977 - 1989, 1993 மற்றும் 2017-இல் 5 முறையும், 2001, 2004 மற்றும் 2009-இல் நடைபெற்ற மக்களவை தேர்தல் மூலம் மூன்று முறையும் நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

1976 ஆம் ஆண்டு குஜராத் மாநிலம் பாரூக் மாவட்ட உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அகமது பட்டேல், மத்திய, மாநில அரசியலில் படிப்படியாக வளர்ச்சியடைந்தார்.

நெருக்கடி நிலைக்கு அடுத்து வந்த மக்களவைத் தேர்தலில் இந்திரா காந்தி உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் தோல்வி அடைந்த போதும், காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு அகமது பட்டேல் வெற்றி பெற்றார்.

1985 ஆம் ஆண்டு முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியின் நம்பிக்கைக்குரியவர்கள் வட்டாரத்திற்குள் நுழைந்த அகமது படேல், அதன் பிறகு தேசிய அரசியலில் காங்கிரஸ் கட்சியின் நகர்வுகளை தீர்மானிக்கும் முக்கிய இடத்தைப் பிடித்தார்.

தற்போது காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் அரசியல் ஆலோசகர் அந்தஸ்தைப் பெற்றுள்ள அகமது படேல், 2004 மற்றும் 2014க்கு இடையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் இருந்த காலகட்டத்தில் கட்சிக்கும், ஆட்சிக்கும் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவராக இருந்து பாலமாக செயல்பட்ட படேல், காங்கிரஸ் கட்சியின் சக்தி வாய்ந்த இரண்டாம் நபர் என அழைக்கடுகிறார்.

1976 ஆம் ஆண்டு மெமுனா அஹமதுவை மணந்தார். இவர்களுக்கு ஒரு மகளும் ஒரு மகனும் உள்ளனர். குறைந்த சுயவிவரத்தை வைத்திருக்கும் படேல், ஊடகங்களுடன் மிகவும் அரிதாக தொடர்பு கொள்பவர். அரசியலோடு மட்டுமல்லாமல், நேரு மற்றும் காந்தி குடும்பத்திற்கும், செயற்பாடுகளுக்கும் நெருங்கிய தொடர்புடையவராக இருந்துள்ளார்.

கட்சிக்கு சோதனை ஏற்பட்ட காலத்தில் எல்லாம் சோர்ந்துவிடாமல், அதனை தீர்க்கும் பொறுப்பினை ஏற்று திறம்பட செயல்பட்ட அகமது படேல், தற்போது பெரும் அரசியல் பரபரப்புக்குள்ளான மாநிலங்களவைத் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்று 5 முறையாக வென்றுள்ளது அவரது அரசியல் வாழ்க்கையின் வாய்மையே சாதனையாகப் பார்க்கப்படுகிறது எனலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com