2022க்குள் புதிய இந்தியாவை உருவாக்க வாருங்கள்: மக்களுக்கு நரேந்திர மோடி அழைப்பு

வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் 75-வது ஆண்டு தொடர்பாக வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, 2022க்குள்
2022க்குள் புதிய இந்தியாவை உருவாக்க வாருங்கள்: மக்களுக்கு நரேந்திர மோடி அழைப்பு


புதுதில்லி: வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் 75-வது ஆண்டு தொடர்பாக வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, 2022க்குள் புதிய இந்தியாவை உருவாக்க வாருங்கள் என மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் ஆரம்பிக்கப்பட்டு 75 ஆண்டுகள் அனுசரிக்கப்படும் இந்நேரத்தில் அதில், பங்கேற்ற பெருமதிப்புக்குரியவர்களுக்கு தலை வணங்குகிறேன். ’சாதிப்போம்’ என்ற சபதத்துடன் நாம் அனைவரும் தோளோடுதோள் இணைந்து நமது சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பெருமைப்படும் வகையில் நாட்டை உயர்த்த நாம் பாடுபட வேண்டும் என பிரதமர் தனது டுவிட்டர் பக்க பதிவில் தெரிவித்துள்ளார்.

இதைத் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் பேசிய மோடி, 1942-இல் ஆங்கிலேயரிடமிருந்து விடுபட போராடியதாகவும், தற்போது வறுமை, பயங்கரவாதம், ஊழல், மத வாதம் உள்ளிட்டவற்றின் பிடியிலிருந்து இந்தியாவை விடுவிக்க போராடி வருவதாகவும் குறிப்பிட்ட மோடி, 2022 ஆம் ஆண்டுக்குள் நமது கனவான ‘புதிய இந்தியாவை, உருவாக்க இன்று உறுதி ஏற்போம்’ என அவர் குறிப்பிட்டுள்ளார்.

1947ல் இந்தியா பெற்ற சுதந்திரம் பிற நாடுகளிலும் காலனி ஆதிக்கத்தை முடிவுக்கு கொண்டு வர தூண்டுகோலாக அமைந்தது என்றும் கூறினார்.

மேலும், வெள்ளையனே வெளியேறு இயக்கம் இந்தியாவை வலிமை கொள்ளச் செய்தது என்றும், அதனை இளைஞர்கள் அறிந்து கொள்ள வேண்டும்.
இந்த இயக்கம் தோற்றுவிக்கப்பட்ட சமயத்தில், மகாத்மா காந்தியின் செய் அல்லது செத்து மடி என்ற கூற்றை மக்கள் பின்பற்றத் தொடங்கினர்.

இந்தியாவின் சுதந்திரம், உலகின் பிற நாடுகளிலும் காலனி ஆதிக்கத்தை முடிவுக்கு கொண்டு வர உதவியது. சுதந்திர போராட்டத்தில் பெண்களின் பங்கு போற்றுதலுக்கு உரியது.

தற்போதைய சூழலில் ஊழல், வறுமை, கல்வியறிவின்மை, ஊட்டச்சத்து குறைபாடு ஆகியவை நம் கண்முன் மிகப்பெரும் சவாலாக உள்ளது.

இதில் மாற்றத்தை கொண்டு வருவோம். 75வது சுதந்திர தின கொண்டாட்டத்தின் போது, 1942-47க்கு இடைப்பட்ட எழுச்சியை மீண்டும் உருவாக்க சபதம் ஏற்போம் என்று பிரதமர் மோடி வலியுறுத்தினார்.

8.8.1942 அன்று மும்பை நகரில் கூடிய அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி ’வெள்ளையனே வெளியேறு’ என்ற தீர்மானத்தை நிறைவேற்றியது.

அன்று மாலை மும்பையில் உள்ள கோவாலிய டேங்க் என்ற இடத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் மகாத்மா காந்தி, வன்முறை தவிர்த்து ஒத்துழையாமை செய்ததைப் போல, வெள்ளையனே வெளியேறு போராட்டமும் அமைதியான அறவழியில் நடைபெற வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.

எனினும், காந்தி உள்ளிட்ட தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். புனேவில் உள்ள ஆகா கான் அரண்மனையில் காந்தி சிறை வைக்கப்பட்டார். ஜவஹர்லால் நேரு உள்ளிட்ட தலைவர்கள் குஜராத்தில் உள்ள அகமது நகர் கோட்டையில் சிறை வைக்கப்பட்டனர்.

ஆகஸ்ட் 9 ஆம் தேதி காலை பம்பாய் மாநாட்டிற்கு 3 லட்சம் பேர் திரண்டனர். அமைதியாக நடந்த போராட்டத்தின் மீது தடியடி நடத்தப்பட்டது. பிறகு கண்ணீர்ப் புகை குண்டுகள் வீசப்பட்டன.

இந்தியாவின் அனைத்து நகரங்களிலும் அன்று தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். அமைதி வழியில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பிரிட்டிஷ் காவல்துறை தடியடி நடத்தியது. சில இடங்களில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டு பலர் உயிரிழந்தனர். இதனால் வெள்ளையர்களின் சர்வாதிகாரம் மற்றும் அடக்குமுறைக்கு எதிரான சுதந்திரப் போராட்டம் நாளுக்கு நாள் தீவிரம் அடைந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com