உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக தீபக் மிஸ்ரா நியமனம்

உச்ச நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக மூத்த நீதிபதி தீபக் மிஸ்ரா செவ்வாய்க்கிழமை நியமிக்கப்பட்டுள்ளார்.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக தீபக் மிஸ்ரா நியமனம்

உச்ச நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக மூத்த நீதிபதி தீபக் மிஸ்ரா செவ்வாய்க்கிழமை நியமிக்கப்பட்டுள்ளார்.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக தற்போது பதவி வகித்து வரும் ஜே.எஸ். கேஹரின் பதவிக்காலம் வரும் 27-ஆம் தேதியுடன் நிறைவடையவுள்ளது. இதையடுத்து, சட்ட விதிகளின்படி உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக யாரை நியமிக்க வேண்டும் என்பது குறித்த பரிந்துரையை அளிக்கும்படி, கேஹரிடம் மத்திய சட்ட அமைச்சகம் கேட்டிருந்தது. அதன்படி, உச்ச நீதிமன்றத்தில் தனக்குப் பிறகு மிகவும் மூத்த நீதிபதியாக இருக்கும் தீபக் மிஸ்ராவின் பெயரை சட்ட அமைச்சகத்திடம் கேஹர் பரிந்துரைத்தார்.
இந்த பரிந்துரையை ஏற்று, உச்ச நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக தீபக் மிஸ்ராவை மத்திய அரசு செவ்வாய்க்கிழமை நியமித்தது. இதுதொடர்பாக மத்திய சட்ட அமைச்சகம் அதிகாரப்பூர்வ அறிவிக்கையை செவ்வாய்க்கிழமை மாலை வெளியிட்டது.
63 வயதாகும் தீபக் மிஸ்ரா, உச்ச நீதிமன்றத்தின் 45-ஆவது தலைமை நீதிபதியாக வரும் 28-ஆம் தேதி பதவியேற்கவுள்ளார். அந்தப் பதவியை அவர் தொடர்ந்து 13 மாதங்கள் வகிப்பார். அயோத்தி வழக்கு, காவேரி பிரச்னை, பிசிசிஐ சீர்திருத்தங்கள், பனாமா ஆவணங்கள் கசிவு உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் தொடர்பான வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்றன. இந்த வழக்குகளை விசாரிக்கும் அமர்வுகளில், தீபக் மிஸ்ராவும் இடம்பெற்றுள்ளார். இதனால், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக மிஸ்ரா பணிபுரியும் காலத்தில் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது.
முன்னதாக, கடந்த 1977-ஆம் ஆண்டில் வழக்குரைஞராக பதிவு செய்த தீபக் மிஸ்ரா, ஒடிஸா உயர் நீதிமன்றத்தில் பல்வேறு விவகாரம் தொடர்பான வழக்குகளில் திறம்பட வாதாடியுள்ளார். இதையடுத்து, ஒடிஸா உயர் நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதியாக 1996-ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டார். பின்னர், மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். இதையடுத்து, பாட்னா உயர் நீதிமன்றம், தில்லி உயர் நீதிமன்றம் ஆகியவற்றில் தலைமை நீதிபதியாக அவர் நியமிக்கப்பட்டார். பிறகு, தில்லி உயர் நீதிமன்றத்தில் இருந்து உச்ச நீதிமன்ற நீதிபதியாக தீபக் மிஸ்ரா கடந்த 2011-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் நியமிக்கப்பட்டார்.
நீதிபதியாக பணியாற்றிய காலத்தில், பல்வேறு முக்கிய தீர்ப்புகளை தீபக் மிஸ்ரா அளித்துள்ளார். அந்தத் தீர்ப்புகளில், மும்பைத் தொடர்குண்டுவெடிப்பு வழக்கில் யாகூப் மேமனுக்கும், பாலியல் பலாத்கார வழக்கில் 4 பேருக்கும் தூக்குத் தண்டனையை உறுதி செய்த தீர்ப்பும் அடங்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com