காஷ்மீர், உத்தரகண்ட் மாநிலங்களுக்குள் படைகளை அனுப்புவோம்: இந்தியாவுக்கு சீனா மீண்டும் மிரட்டல்

ஜம்மு-காஷ்மீர் மற்றும் உத்தரகண்ட் மாநிலங்களுக்குள் படைகளை அனுப்புவோம் என்று இந்தியாவுக்கு சீனா மீண்டும் மிரட்டல் விடுத்துள்ளது.

ஜம்மு-காஷ்மீர் மற்றும் உத்தரகண்ட் மாநிலங்களுக்குள் படைகளை அனுப்புவோம் என்று இந்தியாவுக்கு சீனா மீண்டும் மிரட்டல் விடுத்துள்ளது.
சீன அரசின் அனைத்து பத்திரிகையாளர்கள் சங்கம் விடுத்த அழைப்பையேற்று, பெய்ஜிங்குக்கு இந்திய பத்திரிகையாளர்கள் குழு சென்றுள்ளது. இந்த குழுவை, சீன வெளியுறவு அமைச்சகத்தில் பிராந்திய மற்றும் கடல் எல்லை விவகாரங்களை கையாளும் துறையில் துணை இயக்குநர் ஜெனரலாக இருக்கும் வாங் வெங்லி செவ்வாய்க்கிழமை சந்தித்தார். அப்போது அவர்களிடம், சிக்கிம் எல்லையில் இருக்கும் டோக்லாம் பகுதியில் இந்தியா மற்றும் சீன ராணுவங்களுக்கு இடையே கடந்த 2 மாதத்துக்கும் மேலாக நிலவும் மோதல் போக்கு குறித்து அவர் கூறியதாவது:
எங்கள் பகுதிக்குள் இந்திய ராணுவ வீரர் ஒருவர் ஒருநாள் தங்கி இருந்தாலும் கூட, அது எங்கள் நாட்டு இறையாண்மை, பிராந்திய ஒருமைப்பாட்டுக்கு எதிரான நடவடிக்கையாகும். இந்நிலையில், இந்தியாவுடன் சீனா பேச்சுவார்த்தை நடத்துவது என்பது சாத்தியமில்லாத ஒன்றாகும். அப்படி பேச்சுவார்த்தையை நடத்தினால், எங்கள் நாட்டு மக்கள், சீன அரசை கையாலாகாத அரசாக கருதுவார்கள்.
எல்லையில் தற்போது ஏற்பட்டுள்ள பிரச்னைக்கு, இந்திய ராணுவ வீரர்கள் திரும்பப் பெறப்படுவது ஒன்றே தீர்வை தரும். அதுவரையிலும், இருநாட்டுக்கும் இடையே பேச்சுவார்த்தைக்கு சாத்தியமில்லை. டோக்லாம் பகுதி, சீனாவுக்குச் சொந்தமானதாகும். அந்தப் பகுதியிலேயே சீனா சாலையை அமைக்கிறது. இந்நிலையில், பூடான், சீனா, இந்தியா ஆகிய நாடுகளுக்கு பொதுவான இடம் என்று தெரிவித்து, டோக்லாமுக்குள் இந்திய படைகள் குவிக்கப்பட்டுள்ளன. 3 நாடுகளுக்கும் பொதுவான பகுதி என்ற காரணத்தை இந்தியா தெரிவிப்பதை ஏற்க முடியாது.
இதேபோல், இந்தியாவுக்கும் 3 நாடுகளுக்கு பொதுவான பல இடங்கள் இருக்கின்றன. அதில், உத்தரகண்ட் மாநிலத்தின் கலாபானி, இந்தியா, நேபாளம், சீனா நாடுகளுக்கு பொதுவான இடமாகும். அந்தப் பகுதிக்குள்ளும், இந்தியா-பாகிஸ்தானுக்கு இடையேயான பகுதியான காஷ்மீருக்குள்ளும் சீனா தனது படைகளை அனுப்பினால், இந்தியா என்ன செய்யும்? என்றார் அவர்.
இந்தியாவுக்கு எதிராக சிறிய அளவிலான போருக்கு சீனா தயாராகிறதா? என்று அவரிடம் கேட்கப்பட்டது. அதற்கு வாங் வெங்லி பதிலளிக்கையில், 'இந்தியா தவறான பாதையில் தொடர்ந்து சென்றால், எங்களது உரிமைகளை காக்க சர்வதேச சட்டத்துக்கு உட்பட்டு எந்த நடவடிக்கையையும் எடுப்போம்' என்றார்.
சீன அரசுக்குச் சொந்தமான பத்திரிகைகளில்தான், காஷ்மீர் தொடர்பாக இதுவரை கருத்துகள் வெளியிடப்பட்டு வந்தன. இந்நிலையில், முதல்முறையாக சீன அரசு அதிகாரி ஒருவரும் கருத்து வெளியிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com