ஆதார் குறைபாடுகளுக்காக அரசு நலத் திட்டங்களை மறுப்பது விதிமீறல்: யுஐடிஏஐ

'ஆதார் அட்டை இல்லை என்பதற்காகவோ அல்லது ஆதார் அடையாளத்தை பதியும்போது ஏற்படும் குறைபாடுகளுக்காகவோ, அரசு நலத்திட்டங்களை நாட்டு மக்களுக்கு மறுப்பது விதிமீறல் ஆகும்; இந்த
ஆதார் குறைபாடுகளுக்காக அரசு நலத் திட்டங்களை மறுப்பது விதிமீறல்: யுஐடிஏஐ

'ஆதார் அட்டை இல்லை என்பதற்காகவோ அல்லது ஆதார் அடையாளத்தை பதியும்போது ஏற்படும் குறைபாடுகளுக்காகவோ, அரசு நலத்திட்டங்களை நாட்டு மக்களுக்கு மறுப்பது விதிமீறல் ஆகும்; இந்த விதிமீறலில் ஈடுபடுவோர் தண்டிக்கப்பட வேண்டும்'' என்று இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (யுஐடிஏஐ) தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த ஆணையத்தின் தலைமைச் செயலதிகாரி அஜய் பூஷண் பாண்டே வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: நாட்டில் உள்ள மொத்த மக்கள் தொகையில், 116 கோடி பேருக்கு ஆதார் எண்கள் இதுவரை வழங்கப்பட்டுள்ளன. அதாவது, வயது முதிர்ந்த 99 சதவீதம் பேர் இத்திட்டத்தின்கீழ் கொண்டு வரப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், ஆதாரில் இருக்கும் குறைபாடுகளைச் சுட்டிக்காட்டி, நாட்டு மக்களுக்கு நலத் திட்டங்கள் வழங்குவதை மறுக்கக் கூடாது. அவ்வாறு மறுக்கப்படுவது விதிமீறல் ஆகும். இந்த விதிமீறல்களில் ஈடுபடுவோர் தண்டிக்கப்படுவர். அதேபோல், அரசு நலத்திட்டங்களுக்கு ஒருவரிடம் இருந்து ஆதாரை பெறுவது சம்பந்தப்பட்ட அமைப்பின் பொறுப்பு என்றும், தனிநபர் ஆதார் எண்ணை அளிக்கும் வரையிலும் நலத் திட்டங்களை தொடர்ந்து அவருக்கு அளிக்க வேண்டும் என்றும் சட்ட விதிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆதார் என்பது, மக்களுக்கு அதிகாரமளிக்க பயன்படுத்தப்படும் தொழில்நுட்பமாகும். இது, மக்களுக்கு நலத் திட்டங்களை மறுப்பதற்கோ அல்லது நலத் திட்டங்களில் இருந்து மக்களின் பெயர்களை நீக்குவதற்கோ பயன்படும் தொழில்நுட்பம் கிடையாது.
ஆதார் அடையாள அட்டை இல்லை என்பதற்காகவோ, ஆதார் அடையாளத்தை (விரல் ரேகை) இயந்திரத்தின் மூலம் பதியும்போது, ரேகைகள் பதிவாவதில் பிரச்னை நிலவினாலோ, தனிநபர்கள் கவலை கொள்ளத் தேவையில்லை. அதுபோன்ற சூழ்நிலையில், ஆதார் நகலை அளித்து, இயந்திரம் சரி செய்யப்படும் வரையில் அரசுத் திட்டங்களை அந்த நபர்கள் பெற முடியும்.
ஆதாரை அடிப்படையாகக் கொண்டு, நலத் திட்டங்கள் மறுக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. அதுபோன்ற தகவல்களை வெளியிடுவோர், தீய எண்ணத்துடனேயே அதைச் செய்கின்றனர் என்று அந்த அறிவிப்பில் பாண்டே குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு மக்கள் அனைவருக்கும் 12 எண்களைக் கொண்ட பிரத்யேக அடையாள எண்ணை வழங்கும் பணியை இந்திய தனித்துவ அடையாள ஆணையம் மேற்கொண்டுள்ளது. இது மத்திய அரசின் கட்டுப்பாட்டின்கீழ் செயல்படும் ஆணையம் ஆகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com