இந்திய - சீன எல்லைப் பிரச்னை தீவிரமானதல்ல: தலாய் லாமா கருத்து

இந்தியா - சீனா இடையேயான டோகா லா எல்லைப் பிரச்னையை மிகத் தீவிரமான ஒன்றாகக் கருத வேண்டியதில்லை என்று திபெத்திய ஆன்மிகத் தலைவர் தலாய் லாமா தெரிவித்துள்ளார்
இந்திய - சீன எல்லைப் பிரச்னை தீவிரமானதல்ல: தலாய் லாமா கருத்து

இந்தியா - சீனா இடையேயான டோகா லா எல்லைப் பிரச்னையை மிகத் தீவிரமான ஒன்றாகக் கருத வேண்டியதில்லை என்று திபெத்திய ஆன்மிகத் தலைவர் தலாய் லாமா தெரிவித்துள்ளார்.
இரு நாடுகளுக்கும் இடையேயான முரண்பாடுகளுக்கு பேச்சுவார்த்தைதான் தீர்வு என்று கூறிய அவர் அண்டை நாடுகள் பரஸ்பரம் பக்க பலமாக இருக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
சர்வதேச எல்லையான டோகா லா சர்ச்சையால் இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே போர்ச் சூழல் மூண்டுள்ள நிலையில் இத்தகைய கருத்தை தலாய் லாமா கூறியிருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது
இந்திய பத்திரிகை ஆசிரியர்கள் சங்கம் சார்பில் ராஜேந்திர மாத்தூர் நினைவு சொற்பொழிவு நிகழ்ச்சி தில்லியில் புதன்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்ற தலாய் லாமா, இந்திய - சீன விவகாரங்கள் குறித்து பேசியதாவது:
திபெத்திய பிரச்னைகள் மற்றும் கோரிக்கைகள் தொடர்பாக சீன அரசிடம் மீண்டும் பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்படுமா என்று கேள்விகள் எழுப்பப்படுகின்றன. நிகழாண்டு இறுதியில் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 19-ஆவது தேசிய மாநாடு நடைபெறவுள்ளது. அதில் அந்நாட்டுத் தரப்புக்கும், திபெத்திய தரப்புக்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெறக்கூடும். அதிலும், தீர்க்கமான முடிவு எட்டப்படும் என்பதை உறுதிபடக் கூற முடியாது.
இந்தியா - சீனா இடையே தற்போது நிலவி வரும் பதற்றமான சூழலை எடுத்துக் கொண்டால், அதனை மிகத் தீவிரமான பிரச்னையாகக் கருதத் தேவையில்லை. ஏனெனில், கடந்த கால வரலாற்றிலும் இத்தகைய நிகழ்வுகள் அரங்கேறியிருக்கின்றன.
கடந்த 1962-ஆம் ஆண்டு அருணாசலப் பிரதேச மாநிலம், போம்டில்லா பகுதிக்குள் நுழைந்து ஆக்கிரமித்த சீனப் படைகள் அதன் பிறகு அங்கிருந்து திரும்பிச் சென்றன என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
முந்தைய காலங்களில் ஏதேனும் இரு நாடுகளுக்கும் இடையே சண்டையோ அல்லது சர்ச்சையோ மூண்டால், ஏதேனும் ஒரு தரப்பு அதில் பின்னடைவைச் சந்தித்தே ஆக வேண்டும் என்ற நியதி இருந்தது. ஆனால், தற்போது நிலைமை அப்படியல்ல. இன்றைய நவீன உலகில் ஒவ்வொரு நாடும், பிற நாடுகளைச் சார்ந்திருக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே, எந்தப் பிரச்னைக்கும் பேச்சுவார்த்தை மட்டுமே தற்போது தீர்வாக அமையும்.
அந்த வகையில், இந்தியா - சீனா இடையேயான டோகா லா பிரச்னையையும் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க முடியும் என்றார் அவர்.
இதனிடையே, நிகழ்ச்சியில் சீனாவை மறைமுகமாக விமர்சித்த தலாய் லாமா, 'சுதந்திர இந்தியாவின் நலனுக்காக பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொள்வேன். அதேவேளையில், சுதந்திரமற்ற சூழல் நிலவும் இடத்தை (சீனா) நான் விரும்புவதில்லை' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com