எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் அமித் ஷா

குஜாரத்திலிருந்து மாநிலங்களவை எம்.பி.யாகத் தேர்வு செய்யப்பட்டதை அடுத்து, தனது எம்எல்ஏ பதவியை பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா ராஜிநாமா செய்தார்.
எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் அமித் ஷா

குஜாரத்திலிருந்து மாநிலங்களவை எம்.பி.யாகத் தேர்வு செய்யப்பட்டதை அடுத்து, தனது எம்எல்ஏ பதவியை பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா ராஜிநாமா செய்தார்.
குஜராத்திலிருந்து 5 முறை எம்எல்ஏவாகத் தேர்வு செய்யப்பட்ட அமித் ஷா, அந்த மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக செவ்வாய்க்கிழமை தேர்வு செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து, எம்எல்ஏ பதவியை அவர் ராஜிநாமா செய்தார். ராஜிநாமா கடிதத்தை குஜராத் சட்டப் பேரவைத் தலைவர் ரமண்லால் வோராவிடம் அவர் புதன்கிழமை அளித்தார்.
முன்னதாக, சட்டப் பேரவையில் அவர் உரை நிகழ்த்தினார்.
அப்போது, அவர் கூறியதாவது: கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு சாதாரண கட்சித் தொண்டனாக எனது வாழ்க்கையைத் தொடங்கினேன். எதுவும் வேண்டும் என்று நான் ஒருபோதும் சண்டையிட்டது கிடையாது. மாறாக, எனக்கு கிடைத்ததை விட்டுக் கொடுக்கிறேன். பாஜகவின் தகர்க்க முடியாத கோட்டையான குஜராத்தை சேர்ந்தவன் என்பதில் பெருமை கொள்கிறேன்.
நர்மதை நதி மீது சர்தார் சரோவர் அணை கட்டும் திட்டத்துக்கு காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு தெரிவித்தது. இதன்மூலம், அக்கட்சி குஜராத்துக்கு எதிரானது என்று தன்னை நிரூபித்தது.
இதர பிற்படுத்தப்பட்டோர் (ஓபிசி) நல ஆணைய மசோதாவை மாநிலங்களவையில் தாக்கல் செய்யவிடமால் அக்கட்சி எதிர்த்தது.
இந்த ஆண்டு இறுதியில் குஜராத்தில் சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. பிரசாரங்களில் காங்கிரஸ் கட்சி சம்பந்தப்பட்ட இந்த 2 விவகாரங்களையும் மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். வரும் தேர்தலில் அக்கட்சியின் பலம் சட்டப் பேரவையில் பாதியாகக் குறையும் (தற்போது காங்கிரஸ் வசம் 51 எம்எல்ஏக்கள் உள்ளனர்) என்றார் அமித் ஷா.
சட்டப் பேரவையில் அந்த மாநில முதல்வர் விஜய் ரூபானி, துணை முதல்வர் நிதின் படேல் உள்ளிட்டோரும் இருந்தனர்.
முன்னதாக, அமித் ஷாவின் பேச்சை புறக்கணிக்கும் வகையில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அனைவரும் சட்டப் பேரவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர். இதனிடையே, குஜராத்தில் பாஜக தலைமை அலுவலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் பேசிய அமித் ஷா, மாநிலத்தில் எதிர்வரும் சட்டப் பேரவைத் தேர்தலில் 150 இடங்களைக் கைப்பற்ற வேண்டும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com