குஜராத் சட்டப் பேரவைத் தேர்தல் வெற்றியே அடுத்த இலக்கு

குஜராத் சட்டப் பேரவைத் தேர்தல் வெற்றியே அடுத்த இலக்காக நிர்ணயிக்கப்பட்டிருப்பதாக காங்கிரஸ் மூத்த தலைவரும், மாநிலங்களவைக்கான தேர்தலில் வெற்றி பெற்றவருமான அகமது படேல்
குஜராத் சட்டப் பேரவைத் தேர்தல் வெற்றியே அடுத்த இலக்கு

குஜராத் சட்டப் பேரவைத் தேர்தல் வெற்றியே அடுத்த இலக்காக நிர்ணயிக்கப்பட்டிருப்பதாக காங்கிரஸ் மூத்த தலைவரும், மாநிலங்களவைக்கான தேர்தலில் வெற்றி பெற்றவருமான அகமது படேல் தெரிவித்தார்.
குஜராத்தில் இருந்து மாநிலங்களவைக்கு நடைபெற்ற தேர்தலில், காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்ட அகமது படேல் பெரும் குழப்பத்துக்கு மத்தியில் வெற்றி பெற்றார். இந்நிலையில், தேர்தலில் தனக்கு ஆதரவளித்த எம்எல்ஏக்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு காந்திநகரில் அகமது படேல் ஏற்பாடு செய்திருந்தார். அதன்படி, காந்திநகரில் புதன்கிழமை அந்நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் அவர் பேசியதாவது:
மாநிலங்களவைத் தேர்தல் மிகவும் கடினமாக இருந்தது. இதுபோன்ற தேர்தலை என் வாழ்நாளில் சந்தித்ததில்லை. என்னை ஆதரித்த கட்சித் தலைவர்கள், தொண்டர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
எனது வெற்றிக்குப் பிறகு, காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் நம்பிக்கை அதிகரித்துள்ளது. இந்த வெற்றியைத் தொடர்ந்து, குஜராத் சட்டப் பேரவைத் தேர்தலில் 125 இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெற வேண்டும் என்ற இலக்கை நிர்ணயித்துள்ளோம். 2017ஆம் ஆண்டு தேர்தல்களில் வெற்றி பெறுவதுதான் எங்களது அடுத்த இலக்காகும் என்றார் அகமது படேல்.
காங்கிரஸில் இருந்து அண்மையில் விலகிய மூத்த தலைவர் சங்கர்சிங் வகேலா குறித்து அகமது படேலிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் பதிலளிக்க மறுத்து விட்டார்.
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட காங்கிரஸ் கட்சியின் மாநில நிர்வாகிகள் அனைவரும், அகமது படேலின் வெற்றியை பாராட்டி பேசினர். அகமது படேலின் வெற்றியை, காங்கிரஸ் தொண்டர்கள் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.
இதனிடையே, குஜராத் மாநில காங்கிரஸ் தலைவர் பரத்சிங் சோலங்கி கூறுகையில், 'தேர்தலில் கட்சி மாறி வாக்களித்த எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com