குஜராத்தில் மாநிலங்களவைத் தேர்தல்: கட்சி மாறி வாக்களித்த 8 எம்எல்ஏக்கள் காங்கிரஸில் இருந்து நீக்கம்

குஜராத்தில் மாநிலங்களவைக்கு நடைபெற்ற தேர்தலில் கட்சி மாறி வாக்களித்த 8 காங்கிரஸ் எம்எல்ஏக்கள், அக்கட்சியிலிருந்து புதன்கிழமை நீக்கப்பட்டனர்.

குஜராத்தில் மாநிலங்களவைக்கு நடைபெற்ற தேர்தலில் கட்சி மாறி வாக்களித்த 8 காங்கிரஸ் எம்எல்ஏக்கள், அக்கட்சியிலிருந்து புதன்கிழமை நீக்கப்பட்டனர்.
குஜராத் மாநில காங்கிரஸ் மூத்த தலைவராக இருந்த சங்கர்சிங் வகேலா, அக்கட்சியில் இருந்து அண்மையில் விலகினார். எனினும், அவரது ஆதரவு மற்றும் அதிருப்தி காங்கிரஸ் எம்எல்ஏக்களான மகேந்திரசிங் (வகேலா மகன்), ராகவ்ஜி படேல், போலா கோஹில், தர்மேந்திர ஜடேஜா, ராவுல்ஜி, அமித் சௌதுரி, கரண் படேல் ஆகியோர் காங்கிரஸ் கட்சியில் தொடர்ந்து இருந்தனர். இந்நிலையில், மாநிலங்களவைக்கு செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தேர்தலில், பாஜகவுக்கு ஆதரவாக அவர்கள் வாக்களித்தனர். இதையடுத்து, வகேலா உள்பட 8 எம்எல்ஏக்களும் காங்கிரஸ் கட்சியில் இருந்து நீக்கி வைக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் குஜராத் மாநில மேலிடப் பொறுப்பாளர் அசோக் கெலாட் கூறியதாவது:
மாநிலங்களவைத் தேர்தலில் கட்சி மாறி வாக்களித்த 8 எம்எல்ஏக்கள், காங்கிரஸில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்; இதுபோல், எம்எல்ஏ பதவியிலிருந்து அண்மையில் ராஜிநாமா செய்த 6 எம்எல்ஏக்கள், காங்கிரஸில் இருந்து நீக்குவதற்கு நான் பரிந்துரை செய்துள்ளேன்.
காங்கிரஸ் கட்சியில் ஒழுங்கீனம் சகித்துக் கொள்ளப்பட மாட்டாது. காங்கிரஸில் இருந்து நீக்கம் செய்யப்பட்ட அனைவரும், கட்சி விரோத செயல்களில் ஈடுபட்டனர் என்றார் அவர்.
குஜராத் மாநில காங்கிரஸ் தலைவர் பரத்சிங் சோலங்கி கூறும்போது, கட்சி கொறடா உத்தரவை மீறியதற்காகவும், கட்சி மாறி வாக்களித்த காரணத்துக்காகவும் எம்எல்ஏக்கள் 8 பேரும், 6 ஆண்டுகளுக்கு கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், 'கட்சித் தாவல் தடை சட்டத்தின்கீழ் 8 பேர் மீதும் நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளோம். மாநிலங்களவைத் தேர்தலில் அகமது படேலை வெற்றி பெறச் செய்த எம்எல்ஏக்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தத் தேர்தலில் பாஜகவின் தீய திட்டங்கள் தோற்கடிக்கப்பட்டது போல, சட்டப் பேரவைத் தேர்தலிலும் பாஜகவைத் தோற்கடிப்போம்' என்றார்.
குஜராத் மாநில காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் மணிஷ் தோஷி கூறுகையில், 'கட்சி கொறடா உத்தரவை மீறி, தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக எம்எல்ஏக்கள் வாக்களித்தனர். இதனால் அவர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com