வறுமை, ஊழலை ஒழிக்க சிறப்பு இயக்கம்: பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு

வறுமை, ஊழல், எழுத்தறிவின்மை ஆகியவற்றை அடுத்த 5 ஆண்டுகளில் முடிவுக்கு கொண்டுவருவதற்கு சிறப்பு இயக்கத்தைத் தொடங்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார்.
மக்களவையில் புதன்கிழமை உரையாற்றிய பிரதமர் மோடி.
மக்களவையில் புதன்கிழமை உரையாற்றிய பிரதமர் மோடி.

வறுமை, ஊழல், எழுத்தறிவின்மை ஆகியவற்றை அடுத்த 5 ஆண்டுகளில் முடிவுக்கு கொண்டுவருவதற்கு சிறப்பு இயக்கத்தைத் தொடங்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார்.
இந்தியாவில் ஆங்கிலேயர்களின் அடக்குமுறைக்கு எதிராக, 'வெள்ளையனே வெளியேறு' இயக்கம் தொடங்கப்பட்டதன் 75-ஆவது ஆண்டு தினத்தையொட்டி, பிரதமர் நரேந்திர மோடி, மக்களவையில் புதன்கிழமை உரையாற்றினார்.
அவர் பேசியதாவது: ஊழல், வறுமை, எழுத்தறிவின்மை, ஊட்டச்சத்து குறைபாடு ஆகியவை நாட்டின் பெரும் சவாலாக உள்ளன. இந்தச் சவால்களில் இருந்து, இந்தியா தற்போது விடுபட வேண்டியது அவசியமாகும். மேலும், ஆக்கப்பூர்வமான மாற்றத்தைக் கொண்டுவர வேண்டியுள்ளது.
நாட்டின் விடுதலைக்காக, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், லால் பகதூர் சாஸ்திரி, ஜெயப்பிரகாஷ் நாராயண், ராம் மனோகர் லோகியா, சந்திரசேகர் ஆஸாத், ராஜு குரு என வெவ்வேறு காலகட்டங்களில், பல்வேறு தலைவர்கள் போராடினர்.
ஆங்கிலேயர்களின் அடக்குமுறைக்கு எதிராக, கடந்த 1942-ஆம் ஆண்டு இதே நாளில் (ஆகஸ்ட் 9), வெள்ளையனே வெளியேறு இயக்கம் தொடங்கப்பட்டது. அப்போது, 'செய் அல்லது செத்து மடி' என்ற முழக்கத்துடன் மகாத்மா காந்தி அறைகூவல் விடுத்தார்.
காந்தி போன்ற மூத்த தலைவர்கள் சிறையில் அடைக்கப்பட்டபோது, அடுத்த தலைமுறைத் தலைவர்கள், வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை முன்னெடுத்துச் சென்றனர். அந்தப் போராட்டம், இளம் தலைவர்களை உருவாக்கியது. அவர்கள், மகாத்மா காந்திக்கு ஆதரவு அளித்தனர்.
இந்த நிலையில், நாட்டின் 75-ஆவது சுதந்திர தினம், வரும் 2022-ஆம் ஆண்டு வருகிறது. இன்னும் 5 ஆண்டுகளில் நாட்டில் வறுமை, ஊழல், எழுத்தறிவின்மை ஆகியவற்றை முடிவுக்கு கொண்டுவர சிறப்பு இயக்கம் ஒன்று தொடங்கப்பட வேண்டும். 1942-ஆம் ஆண்டு முதல் 1947-ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தைப்போன்று, அதே எழுச்சியுடன், நாம் செயல்பட்டாக வேண்டும்.
'செய்வோம், செய்து முடிப்போம்': 1942-ஆம் ஆண்டில், 'செய் அல்லது செத்து மடி' என்ற முழக்கத்துடன் போராட்டம் நடைபெற்றது. அதேபோல், 'செய்வோம், செய்து முடிப்போம்' என்ற முழக்கத்தை நாம் உறுதியேற்க வேண்டும். இந்திய விடுதலை, இந்தியாவுக்கு மட்டுமின்றி, உலகின் பிற பகுதிகளிலும் காலனியாதிக்கத்தை முடிவுக்கு கொண்டுவருவதற்கு வித்திட்டது. அதேபோல், மற்ற நாடுகளும் பின்பற்றும் வகையில், ஊழலுக்கு எதிராக, ஆக்கப்பூர்வமான மாற்றத்தைக் கொண்டுவர நாம் முயற்சி செய்தாக வேண்டும்.
1942-ஆம் ஆண்டில், இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு சர்வதேச அளவில் ஆதரவு இருந்தது. அதேபோல், தற்போது, இந்தியாவுக்கு சர்வதேச அளவில் ஆதரவு உள்ளது.
ஊழலை ஒழிக்கவும் ஏழைகளுக்கு அதிகாரம் வழங்கவும், இளைஞர்கள் சுயவேலைவாய்ப்பு பெறவும், பெண்கள் அதிகாரம் பெறுவதற்கான தடைகளை நீக்கவும், எழுத்தறிவின்மையை அகற்றவும் நாம் பாடுபட வேண்டும் என்று மோடி பேசினார்.
இதனிடையே, சுட்டுரையில் வெளியிட்ட பதிவில் வரும் 2022-ஆம் ஆண்டுக்குள் புதிய இந்தியாவை உருவாக்கிட மக்கள் பாடுபட வேண்டும் என்று பிரதமர் மோடி கேட்டுக் கொண்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com