டிசம்பர் 5 முதல் அயோத்தி வழக்கு விசாரணை

நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு அயோத்தி இறுதிகட்ட விசாரணை டிசம்பர் 5 முதல் தொடங்குகிறது.
டிசம்பர் 5 முதல் அயோத்தி வழக்கு விசாரணை

அயோத்தி வழக்கு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தற்போது இறுதிகட்ட விசாரணையை எட்டியுள்ளது. இந்நிலையில், நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு தற்போது இவ்வழக்கு தொடர்பாக விசாரித்து வருகிறது.

இதில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்களின் மொழிபெயர்ப்பை 12 வாரங்களுக்குள் விரைந்து முடிக்க வேண்டும். நீதிபதிகள் அஷோக் பூஷண், அப்துல் நசீர் ஆகியோர் 10 வாரங்களுக்குள் தங்கள் தரப்பு பணிகளை முடிக்க வேண்டும். இதற்கு மேலும் இவ்வழக்கை ஒத்திவைக்க எந்தக் காரணமும் இருக்கக்கூடாது என உத்திரப்பிரதேச அரசுக்கு உத்தரவிட்டனர்.

உத்திரப்பிரதேச அரசின் மூத்த வழக்கறிஞர் வைத்தியநாதன் மற்றும் இதர தரப்புகளின் வழக்கறிஞர்களான கபில் சிபல் மற்றும் ராஜீவ் தாவன் ஆகியோர் இந்த வழக்கு தொடர்பாக விரைந்து விசாரணை மேற்கொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

முன்னதாக, அயோத்தி ராமஜென்ம பூமியிலிருந்து சிறிது தூரத்தில் இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் பகுதியில் மசூதி அமைத்துக்கொள்வதாக ஷியா வக்ஃபு வாரியம் செவ்வாய்கிழமை தெரிவித்தது.

அயோத்தியில் பாபர் மசூதி இடிப்பு வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதில், மசூதி மற்றும் கோயிலுக்கு சொந்தமான இடங்களை சரியாக பகிர்ந்துகொள்ளும்படி அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் 3 பேர் கொண்ட நீதிபதிகளின் அமர்வு தீர்ப்பளித்திருந்தது.

இதையடுத்து, அந்த இடத்தில் ராமர் கோயில் இருந்ததாகவும், எனவே அங்கு மீண்டும் ராமர் கோயில் தான் அமைக்க வேண்டும் என மாநிலங்களவை உறுப்பினரும், பாஜக தலைவர்களில் ஒருவருமான சுப்ரமணியன் சுவாமி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

இதுதொடர்பான வழக்கு விசாரணை கடந்த சில வருடங்களாகவே நடக்கிறது. மேலும், இந்த வழக்கு தொடர்பான தீர்ப்பை விரைவில் அறிவிக்கும்படி இருதரப்பும் கோரிக்கை வைத்தது. 

இந்நிலையில், 30 பக்கங்கள் கொண்ட மனு ஒன்றை ஷியா வக்ஃபு வாரியம் உச்ச நீதிமன்றத்தில் செவ்வாய்கிழமை தாக்கல் செய்தது. அதில், ராமர் கோயில் இருந்ததாகக் கூறப்படும் இடத்தில் இருந்து சிறிய தொலைவில் இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கின்றனர். எனவே அப்பகுதியில் மசூதி அமைத்துக்கொள்ள சம்மதம் என தெரிவித்திருந்தது. இதற்கு சுப்ரமணியன் சுவாமி வரவேற்றுப் பேசினார்.

கடந்த 2010-ம் ஆண்டு முதல் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள அந்த சர்ச்சைக்குரிய 2.7 ஏக்கர் நிலம் தொடர்பான வழக்கின் தீர்ப்பு விரைவில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே அயோத்தி விவகாரத்தில் விரைவில் முடிவு தெரியும் என்று கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com