அகமது படேல் வெற்றியின் பின்னணியில் சதி: வகேலா குற்றச்சாட்டு

குஜராத்திலிருந்து மாநிலங்களவை எம்.பி.யாக காங்கிரஸ் வேட்பாளர் அகமது படேல் வெற்றி பெற்றதன் பின்னணியில் நன்கு
அகமது படேல் வெற்றியின் பின்னணியில் சதி: வகேலா குற்றச்சாட்டு

குஜராத்திலிருந்து மாநிலங்களவை எம்.பி.யாக காங்கிரஸ் வேட்பாளர் அகமது படேல் வெற்றி பெற்றதன் பின்னணியில் நன்கு திட்டமிடப்பட்ட சதி உள்ளதாக அக்கட்சியில் இருந்து அண்மையில் விலகிய மூத்த தலைவர் சங்கர் சிங் வகேலா குற்றம்சாட்டியுள்ளார்.
குஜராத் மாநிலத்தில் 3 மாநிலங்களவை எம்.பி. பதவிகளுக்கு கடந்த செவ்வாய்க்கிழமை தேர்தல் நடைபெற்றது. இதில், பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா, மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி ஆகியோரின் வெற்றி உறுதியான நிலையில், மூன்றாவது இடத்துக்கு காங்கிரஸ் வேட்பாளர் அகமது படேல், பாஜக வேட்பாளர் பல்வந்த் சிங் இடையே போட்டி ஏற்பட்டது.
இதனிடையே, தேர்தலின்போது தங்களது வாக்குகளை வெளியே காண்பித்து விதிமீறலில் ஈடுபட்டதாக, 2 காங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏக்களின் வாக்குகள் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டன. இதையடுத்து, 44 வாக்குகளுடன் அகமது படேல் வெற்றி பெற்றவராக அறிவிக்கப்பட்டார்.
முன்னதாக, தங்களது கட்சி எம்எல்ஏக்களிடம் பாஜக குதிரை பேரத்தில் ஈடுபடக்கூடும் என்று கருதிய காங்கிரஸ், 44 எம்எல்ஏக்களை பெங்களூருக்கு அழைத்து சென்று தங்க வைத்திருந்தது. பின்னர், மாநிலங்களவை தேர்தலையொட்டி அவர்கள் மீண்டும் குஜராத் அழைத்து வரப்பட்டனர்.
இந்நிலையில், காங்கிரஸ் கட்சியில் இருந்து அண்மையில் விலகிய மூத்த தலைவர் சங்கர் சிங் வகேலா, காந்தி நகரில் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது:
மாநிலங்களவை எம்.பி.யாக அமகது படேல் வெற்றி பெற்றதன் பின்னணியில், காங்கிரஸ் தலைவர்களின் திட்டமிட்டப்பட்ட சதி உள்ளது. தேர்தலுக்கு முதல் நாள், இந்த சதி திட்டம் தீட்டப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட 2 எம்எல்ஏக்களும் சதித் திட்டத்துக்கு பயன்படுத்தப்பட்டுள்ளனர்.
இந்த விவகாரத்தில், தேர்தல் ஆணையத்திடம் முறையிடுவதற்கு தேவையான அனைத்து ஆவணங்களையும் முன்கூட்டியே காங்கிரஸ் தலைவர்கள் தயார் செய்துவிட்டனர். இந்த சதி திட்டம் மட்டும் இல்லையென்றால், அகமது படேல் வெற்றி பெற்றிருக்க முடியாது. 44 எம்எல்ஏக்களை பெங்களூருக்கு அழைத்துச் செல்லாமல் இருந்திருந்தால், அவர்களில் 25 பேர் பதவியை ராஜினாமா செய்திருப்பார்கள்.
மாநிலங்களவைத் தேர்தலில் 2 எம்எல்ஏக்களின் வாக்குகள் செல்லாது என்று அறிவித்த தேர்தல் ஆணையத்தின் முடிவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடருவோம். எனது எம்எல்ஏ பதவியை அடுத்த வாரம் ராஜிநாமா செய்யவிருக்கிறேன் என்றார் வகேலா.
முன்னதாக, மாநிலங்களவைத் தேர்தலில் கட்சி மாறி வாக்களித்த மூத்த தலைவர் வகேலா, அவரது மகன் மகேந்திர சிங் உள்ளிட்ட 8 எம்எல்ஏக்கள், காங்கிரஸில் இருந்து புதன்கிழமை நீக்கப்பட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com