சிறுபான்மையினர் பாதுகாப்பின்றி இருப்பதாக கூறுவது அரசியல் பிரசாரம்

'நாட்டில் சிறுபான்மையினர் பாதுகாப்பின்றி இருப்பதாக கூறுவது அரசியல் பிரசாரம்' என்று துணை குடியரசுத் தலைவராகப் பதவியேற்கவிருக்கும் வெங்கய்ய நாயுடு வியாழக்கிழமை தெரிவித்தார்.
சிறுபான்மையினர் பாதுகாப்பின்றி இருப்பதாக கூறுவது அரசியல் பிரசாரம்

'நாட்டில் சிறுபான்மையினர் பாதுகாப்பின்றி இருப்பதாக கூறுவது அரசியல் பிரசாரம்' என்று துணை குடியரசுத் தலைவராகப் பதவியேற்கவிருக்கும் வெங்கய்ய நாயுடு வியாழக்கிழமை தெரிவித்தார்.
முன்னதாக, நாட்டிலுள்ள சிறுபான்மையினர் இடையே அமைதியின்மையும், பாதுகாப்பற்ற உணர்வும் நிலவி வருவதாக துணை குடியரசுத் தலைவர் பொறுப்பில் இருந்து ஓய்வு பெற்றுள்ள ஹமீது அன்சாரி புதன்கிழமை தெரிவித்திருந்தார். அதை நிராகரிக்கும் வகையில் மேற்கண்ட கருத்தை வெங்கய்ய நாயுடு கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் பிடிஐ செய்தியாளரிடம் வியாழக்கிழமை கூறியதாவது:
நாட்டிலுள்ள சிறுபான்மையினர் பாதுகாப்பின்றி இருப்பதாகச் சிலர் கூறுகின்றனர். அவ்வாறு கூறுவது, அரசியல் பிரசாரமே. உலகின் பல்வேறு நாடுகளையும் ஒப்பிடுகையில், இந்தியாவில் உள்ள சிறுபான்மையினர் பாதுகாப்பாகவே உள்ளனர். அவர்களுக்குரிய உரிமைகள் அளிக்கப்படுகின்றன.
நாட்டில் சகிப்பின்மை அதிகரித்து வருவதாக கூறுவதையும் ஏற்க முடியாது. இந்திய மக்கள்தான், உலக அளவில் மிகவும் சகிப்புத் தன்மை உடையவர்கள். மிக உயர்ந்த நமது நாகரீகமே, அதற்கு காரணமாகும். சகிப்புத் தன்மை இருப்பதால்தான், நமது ஜனநாயகம் வெற்றிகரமாக இருக்கிறது.
ஒரு குறிப்பிட்ட சமூகத்துக்கு மட்டுமே ஆதரவாகச் செயல்படாமல், அனைத்து சமூகத்துக்கும் நியாயமான வகையில் செயல்பட வேண்டும். அனைவரும் சமம் என்பதையே நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.
நமது நாட்டைப் பொருத்தவரை, சிறுபான்மையினருக்கு எந்த பாகுபாடும் காட்டப்படவில்லை என்பதை கடந்த கால வரலாறுகள் நிரூபித்துள்ளன. நமது அரசியலமைப்பின் உயர் பதவிகளை, சிறுபான்மையினர் அலங்கரித்துள்ளனர். வேற்றுமையில் ஒற்றுமை என்பதே இந்தியாவின் தனி அடையாளம். மதச்சார்பின்மை என்பது இந்தியாவின் ரத்தத்திலும் உணர்விலும் இரண்டற கலந்தது என்றார் வெங்கய்ய நாயுடு.
நாட்டில் சகிப்பின்மையால் நிகழ்ந்ததாக கூறப்படும் சம்பவங்கள் தொடர்பான கேள்விக்கு பதிலளித்து அவர் கூறியதாவது:
இந்தியா ஒரு பெரிய நாடு. இங்கு ஒரு சில விரும்பத்தகாத சம்பவங்கள் நிகழலாம். அதுபோன்ற சம்பவங்கள் கடும் கண்டனத்துக்குரியவை.
இந்திய குடிமக்கள் யார் மீதும் தாக்குதல் நடத்தப்படுவதை நியாயப்படுத்த முடியாது.
ஆனால், இதுபோன்ற சம்பவங்களை, மக்களிடையே பிரிவினையை தூண்டுவதற்கும், நாட்டின் நற்பெயரை கெடுப்பதற்கும், வாக்கு வங்கிக்காகவும் சில அரசியல்வாதிகள் பயன்படுத்துகின்றனர். அது, தவறானது என்றார் வெங்கய்ய நாயுடு.
விஹெச்பி சாடல்: இதனிடையே, சிறுபான்மையினர் இடையே அமைதியின்மை நிலவுவதாக கூறிய ஹமீது அன்சாரி மீது விஸ்வ ஹிந்து பரிஷத் (விஹெச்பி) அமைப்பு சாடியுள்ளது.
தனது இந்த கருத்தின் மூலம் துணை குடியரசுத் தலைவர் பதவியையும், ஹிந்து சமூகத்தையும் ஹமீது அன்சாரி அவமதித்துவிட்டார்; முகமது அலி ஜின்னாவின் வழியை அவர் பின்பற்றுகிறார் என்று அந்த அமைப்பு குற்றம்சாட்டியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com