தில்லியில் இன்று சோனியா தலைமையில் 18 எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம்

மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசுக்கு நெருக்கடி அளிப்பதற்கான உத்தியை வகுப்பதற்காக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் தலைமையில் 18 எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக்
தில்லியில் இன்று சோனியா தலைமையில் 18 எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம்

மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசுக்கு நெருக்கடி அளிப்பதற்கான உத்தியை வகுப்பதற்காக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் தலைமையில் 18 எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் தில்லியில் வெள்ளிக்கிழமை (ஆக. 11) நடைபெற உள்ளது.
நாடாளுமன்றத்தின் மழைக் காலக் கூட்டத்தொடர் வெள்ளிக்கிழமை முடிவடைகிறது. இந்த நேரத்தில் பல்வேறு விவகாரங்களை முன்வைத்து மத்திய அரசுக்கு நெருக்கடி அளிப்பது தொடர்பாக ஆலோசிக்க எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன. அதன்படி, நாடாளுமன்ற நூலகத்தில் ஆலோசனைக் கூட்டம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் தலைமையில் நடைபெற உள்ள இக்கூட்டத்தில் பங்கேற்க வருமாறு ஐக்கிய ஜனதா தளத்தின் மூத்த தலைவர் சரத் யாதவ் உள்ளிட்ட 18 எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களுக்கு சோனியா சார்பில் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் குலாம் நபி ஆஸாத் அழைப்பிதழ் அனுப்பியுள்ளார்.
இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர்களைத் தவிர, திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி, சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ், மார்க்சிஸ்ட் பொதுச் செயலர் சீதாராம் யெச்சூரி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எனினும், சரத் யாதவ் தற்போது பாட்னாவில் இருப்பதால் அவருக்குப் பதிலாக அலி அன்வர் அன்சாரி இந்தக் கூட்டத்தில் பங்கேற்பார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. காங்கிரஸ், இடதுசாரிகள் ஆகியவற்றைத் தவிர, திரிணமூல் காங்கிரஸ், ஆர்ஜேடி, ஐக்கிய ஜனதா தளம், தேசியவாத காங்கிரஸ், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, திமுக, தேசிய மாநாட்டுக் கட்சி, சமாஜவாதி, பகுஜன் சமாஜ், ராஷ்ட்ரீய லோக்தளம், மதச்சார்பற்ற ஜனதா தளம், கேரள காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் ஆலோசனைக் கூட்டத்துக்கு வருவார்கள் என்று கூறப்படுகிறது.
பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்கவும், அரசை ஒற்றுமையுடன் எதிர்கொள்ள தங்களுக்குள் நல்ல ஒருங்கிணைப்பைப் பராமரிக்கவும் மாதத்துக்கு ஒரு முறை சந்திப்பது என்று இந்த 18 எதிர்க்கட்சிகளும் ஏற்கெனவே முடிவு செய்தன.
இதனிடையே, தில்லிக்கு வியாழக்கிழமை வந்த திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அகமது படேலை சந்தித்துப் பேசினார். அதன் பின் அவர் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்தார். இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று அவரது திரிணமூல் காங்கிரஸ் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com