அவை நடவடிக்கைகளில் இடையூறு விளைவிக்கக் கூடாது: மாநிலங்களவைத் தலைவராக பதவியேற்றபின் வெங்கய்ய நாயுடு பேச்சு

நாடாளுமன்ற அவை அலுவல்களில் இடையூறுகள் விளைவிக்கக் கூடாது என்று மாநிலங்களவை புதியத் தலைவர் வெங்கய்ய நாயுடு கேட்டுக் கொண்டார்.
அவை நடவடிக்கைகளில் இடையூறு விளைவிக்கக் கூடாது: மாநிலங்களவைத் தலைவராக பதவியேற்றபின் வெங்கய்ய நாயுடு பேச்சு

நாடாளுமன்ற அவை அலுவல்களில் இடையூறுகள் விளைவிக்கக் கூடாது என்று மாநிலங்களவை புதியத் தலைவர் வெங்கய்ய நாயுடு கேட்டுக் கொண்டார்.
நாட்டின் 15-ஆவது குடியரசு துணைத் தலைவர் என்ற முறையில், மாநிலங்களவைக்கும் வெங்கய்ய நாயுடு தலைவராவார். இதையடுத்து, மாநிலங்களவைத் தலைவராக அவர் வெள்ளிக்கிழமை பதவி ஏற்றுக் கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:
அவையில் இருக்கும் உறுப்பினர்கள் அனைவரும் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம்; ஆனால் யாரும் எதிரிகள் கிடையாது. இதை எப்போதும் நமது மனதில் கொண்டு, ஒற்றுமையாகப் பணிபுரிய வேண்டும். உறுப்பினர்கள் அனைவரும் தத்தமது கொள்கைகள், சித்தாந்தங்கள் அடிப்படையில் நாட்டை வலிமைப்படுத்த ஒற்றுமையுடன் பணியாற்ற வேண்டும். சாதாரண விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த நான், முக்கியமான பதவிக்கு வந்திருப்பது நாட்டு மக்களுக்கு மீண்டும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
சாதாரண குடும்ப பின்னணியில் இருந்து நான் வந்துள்ளேன். குடும்ப அரசியலின் ஆதரவு எதுவும் எனக்கு கிடையாது. சிறிய வயதிலேயே பெற்றோரை நான் இழந்துவிட்டேன். அவர்களின் முகங்கள் கூட எனது ஞாபகத்தில் இல்லை. ஆனால், தற்போது நான் குறிப்பிட்ட அரசியல் கட்சிக்கு அப்பாற்பட்டு, அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் சொந்தக்காரனாவேன்.
மாநிலங்களவை உறுப்பினர்கள் அனைவருக்கும் முக்கிய விவகாரங்கள் குறித்து பேசுவதற்கு வாய்ப்பு அளிக்கப்படும். அந்த உறுப்பினர், பெரிய கட்சியைச் சேர்ந்தவரா? சிறிய கட்சியைச் சேர்ந்தவரா? என்று வேறுபாடு காட்டப்பட மாட்டாது.
முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை நான் சந்தித்தேன். அவர் என்னிடம், அவையில் விவாதம், ஆலோசனை நடத்த வேண்டும், முடிவு எடுக்கப்பட வேண்டும் என்றும், அதே நேரத்தில் இடையூறு தவிர்க்கப்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். எனது நாடாளுமன்ற வாழ்க்கையில் மிகவும் சிறப்பான காலமாக, எதிர்க்கட்சியாக எங்கள் கட்சி இருந்தபோது, பல்வேறு முக்கிய விவகாரங்களை நான் எழுப்பியதையே கருதுகிறேன். அந்த நேரத்தில், கடுமையான குற்றச்சாட்டுகளை நான் முன்வைத்த போதிலும், எனக்கான எல்லைகளை ஒருபோதும் தாண்டியதில்லை.
ஊடகத்தினர் சுதந்திரமாகச் செயல்படலாம். ஆனால், மாநிலங்களவைத் தலைவர் என்ற முறையில், ஊடகத்தினர் அவையில் நடக்கும் ஆக்கப்பூர்வமான விவாதங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதே எனது விருப்பமாகும் என்றார் வெங்கய்ய நாயுடு.
மாநிலங்களவை துணைத் தலைவர் என்ற முறையில் வெங்கய்ய நாயுடு முதல்முறையாக உரையாடியதை அவையில் இருந்து பிரதமர் நரேந்திர மோடி, மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி, எதிர்க்கட்சித் தலைவர் குலாம் நபி ஆஸாத் உள்ளிட்டோர் கேட்டனர்.
முன்னதாக, அருண் ஜேட்லி பேசியபோது, வெங்கய்ய நாயுடு அரசியல் தொண்டராக இருந்து, குடியரசு துணைத் தலைவர் பதவிக்கு வந்தது வரையிலான அவரது அரசியல் வாழ்க்கையை நினைவுகூர்ந்தார். மேலும் அவர் கூறுகையில், 'ஒருகாலத்தில் எதிர்க்கட்சியினர் அனைவரும் சிறையில் அடைக்கப்பட்டு, அரசியலமைப்புச் சட்டத் திருத்தங்கள் அனைத்தும் கொண்டு வரப்பட்டன. அது மோசமான நினைவுகளாகும். இருப்பினும், அது நமக்கு படிப்பினையை அளித்துள்ளது. மத்தியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 2014ஆம் ஆண்டில் ஆட்சிக்கு வந்தபிறகு, மசோதாக்கள் எதுவும் பிரச்னைக்கு இடையே நிறைவேற்றப்பட்டதில்லை. ஆனால், முன்பு இந்த நடைமுறை இல்லை. குறிப்பாக, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுகளின் 2 ஆட்சிக்காலத்திலும் 21 மசோதாக்கள், அமளிக்கிடையேதான் நிறைவேற்றப்பட்டன' என்றார்.
இதேபோல், மாநிலங்களவையைச் சேர்ந்த பெரும்பாலான உறுப்பினர்களும், வெங்கய்ய நாயுடுவை வாழ்த்திப் பேசினர். அப்போது வெங்கய்ய நாயுடுவிடம், அமளிக்கிடையே மசோதாவை அவையில் நிறைவேற்றுவதில்லை என்ற நடைமுறையை தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும் என்று அவர்கள் கேட்டுக் கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com