உ.பி. அரசு மருத்துவமனையில் 2 நாள்களில் 30 குழந்தைகள் சாவு

உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் 2 நாள்களில் 30 குழந்தைகள் உயிரிழந்துவிட்டனர்.
கோரக்பூரில் 30 குழந்தைகள் உயிரிழந்த அரசு மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை தொடர்ந்து சிகிச்சை பெற்று வரும் சிறார்கள்.
கோரக்பூரில் 30 குழந்தைகள் உயிரிழந்த அரசு மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை தொடர்ந்து சிகிச்சை பெற்று வரும் சிறார்கள்.

உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் 2 நாள்களில் 30 குழந்தைகள் உயிரிழந்துவிட்டனர். மருத்துவமனையில் ஆக்சிஜன் சிலிண்டர்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டதால் இந்த துயரச் சம்பவம் நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது. எனினும், மருத்துவமனை தரப்பு இதனை மறுத்துள்ளது.
மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் தொகுதியான கோரக்பூரில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ள பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.
பாபா ராகவ் தாஸ் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஆக்சிஜன் சிலிண்டர்களை வழங்கி வந்த தனியார் நிறுவனத்துக்கு ரூ.67 லட்சம் வரை பணம் செலுத்தாமல் நிலுவை வைத்ததால், அந்த நிறுவனம் ஆக்சிஜன் சிலிண்டர்கள் வழங்குவதை நிறுத்திவிட்டது. இதனால், ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டு 30 குழந்தைகள் உயிரிழந்துவிட்டன.
இதில் 17 குழந்தைகள் பிறந்து சில நாள்களே ஆன பச்சிளம் குழந்தைகளாகும். மூளை பாதிப்பு சிகிச்சை பிரிவில் 5 குழந்தைகளும், பொதுப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த 8 குழந்தைகளும் உயிரிழந்துவிட்டன. திங்கள்கிழமை பிற்பகலில் இருந்து புதன்கிழமை பிற்பகல் வரை இந்த உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளன. இந்த மருத்துவமனை மாநிலத்தில் உள்ள பெரிய அரசு மருத்துவமனைகளில் ஒன்றாகும். கடந்த சில நாள்களுக்கு முன்பு முதல்வர் யோகி ஆதித்யநாத் இங்கு ஆய்வு மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
எனினும், ஆக்சிஜன் சிலிண்டர்கள் பற்றாக்குறையால் உயிரிழப்பு ஏற்பட்டது என்று கூறப்படுவதை மாநில சுகாதாரத் துறை அமைச்சர் சித்தார்த்நாத் சிங் மறுத்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், இந்த உயிரிழப்பு தொடர்பாக ஊடகங்கள் கூறுவது சரியான தகவல் அல்ல. விசாரணை அறிக்கை கிடைத்த பிறகுதான் குழந்தைகளின் உயிரிழப்புக்கான காரணத்தை உறுதிப்படுத்த முடியும்' என்றார்.
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் கூறுகையில், '30 குழந்தைகள் உயிரிழந்தது குறித்து உயர்நிலை விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. ஆக்சிஜன் இல்லாத காரணத்தால் குழந்தைகள் உயிரிழக்கவில்லை. மருத்துவமனையில் ஆக்சிஜன் சிலிண்டர் பற்றாக்குறை இல்லை என்றும், பக்கத்து மாவட்ட மருத்துவமனைகளில் இருந்து போதுமான அளவு ஆக்சிஜன் சிலிண்டர்கள் கொண்டுவரப்பட்டுள்ளது என்றும் மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது. 30 குழந்தைகளில் 7 குழந்தைகள் உடல்நிலை பாதிப்பு காரணமாகத்தான் உயிரிழந்தன என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது' என்றார்.
சோனியா வேதனை: இந்த சம்பவம் குறித்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, துணைத் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் அதிர்ச்சியும், வேதனையும் தெரிவித்துள்ளனர். இந்த உயிரிழப்புகளுக்கு காரணமானவர்கள் மீது மாநில அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
'முதல்வரின் சொந்த மாவட்டத்திலேயே இப்படியொரு நிலை உள்ளது என்றால், நிர்வாகத்தில் பாஜக அரசு எந்த அளவுக்கு அலட்சியமாக உள்ளது என்பதை எளிதில் அறிந்து கொள்ளலாம்' என்று சமாஜவாதி கட்சி விமர்சித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com