எளியோர் அரியணையேறுவதே ஜனநாயகத்துக்குப் புகழ்: பிரதமர் மோடி

எளிமையான குடும்பப் பின்னணியில் இருந்து வந்தவர்கள், நாட்டின் உயரிய பொறுப்புகளில் அமர்வதுதான் ஜனநாயகத்துக்கு கிடைக்கப் பெறும் புகழ் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
எளியோர் அரியணையேறுவதே ஜனநாயகத்துக்குப் புகழ்: பிரதமர் மோடி

எளிமையான குடும்பப் பின்னணியில் இருந்து வந்தவர்கள், நாட்டின் உயரிய பொறுப்புகளில் அமர்வதுதான் ஜனநாயகத்துக்கு கிடைக்கப் பெறும் புகழ் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
குடியரசுத் தலைவராக ராம்நாத் கோவிந்தும், துணைத் தலைவராக வெங்கய்ய நாயுடுவும் பொறுப்பேற்றதைக் குறிக்கும் வகையில் இக்கருத்தை பிரதமர் கூறியுள்ளார்.
அண்மையில் நடைபெற்ற குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் வாகை சூடிய வெங்கய்ய நாயுடு, வெள்ளிக்கிழமை பதவியேற்றுக் கொண்டார். அதன் பிறகு பதவியேற்ற பிறகு மாநிலங்களவைத் தலைவர் பொறுப்பை ஏற்க அவைக்கு வந்த அவரை பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் உள்ளிட்டோர் வரவேற்றனர். இதைத்தொடர்ந்து, மாநிலங்களவையில் இதுகுறித்து மோடி பேசியதாவது:
நாட்டின் பெருமைமிக்க உயரிய பொறுப்புகளை வெங்கய்ய நாயுடு ஏற்றுக் கொண்டுள்ளார். அத்தகைய சிறப்பு வாய்ந்த இந்த நாளுக்கு வரலாற்று முக்கியத்துவமும் உண்டு. ஆங்கிலேயர்களின் ஆட்சியை எதிர்த்து தீவிரமாக விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்த 19 வயது புரட்சியாளன் குதிராம் போஸை, பிரிட்டீஷ் அரசு தூக்கிலிட்டதும் இதே நாளில்தான். அந்தச் சம்பவம், விடுதலைப் போராட்டத்துக்கான தியாகத்தையும், பெற்ற சுதந்திரத்தைப் பேணிக் காப்பதில் நமக்குள்ள கடமையையும் என்றென்றைக்கும் நினைவுபடுத்திக் கொண்டே இருக்கும்.
வெங்கய்ய நாயுடுவைப் பொருத்தவரை மிகச் சாதாரணமான குடும்பத்தில் பிறந்தவர். விவசாயியின் மகனான அவர், ஜனதா கட்சித் தலைவர் ஜெய்பிரகாஷ் நாராயணனின் மாணவப் போராட்டத்தால் ஈர்க்கப்பட்டவர். அதன் பிறகு பல்வேறு அரசியல் போராட்டங்களைக் கடந்து இன்று குடியரசுத் துணைத் தலைவர் அரியணையில் அமர்ந்துள்ளார்.
சாமானியர்கள் மற்றும் விவசாயிகளின் துயரங்களில் வெங்கய்ய நாயுடுவுக்கு எப்போதுமே அதிக அக்கறை உண்டு. அதுதொடர்பான விவரங்கள் அனைத்தையுமே அவர் அறிந்து வைத்திருப்பார். நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சராகப் பொறுப்பு வகித்தபோதும் கூட ஊரகப் பகுதிகளில் நிலவும் பிரச்னைகள் குறித்த விவரங்களில் அதிக நாட்டம் செலுத்துவார். அதற்கு காரணம், தனது வாழ்வின் பெரும்பகுதியை ஏழை, எளிய மக்களுடனேயே அவர் கழித்தார் என்பதுதான். தற்போது நாட்டின் உயரிய பதவிகள் அனைத்திலும் எளிமையான குடும்பப் பின்னணியைக் கொண்டவர்களே அமர்ந்துள்ளனர். இவையே ஜனநாயகத்துக்கு அணிசேர்க்கும் புகழ்மாலைகள். இத்தகைய நிகழ்வுகளே நமது பண்பட்ட ஜனநாயகத்தின் பிரதிபலிப்புகள்.
வெங்கய்ய நாயுடு, மாநிலங்களவைக்கு புதியவர் அல்ல. பல முறை உறுப்பினராக இருந்துள்ளார். அவையின் நடவடிக்கைகளிலும், மரபுகளிலும் அவருக்கு மிகுந்த பரிச்சயம் உண்டு. எனவே, மாநிலங்களவைத் தலைவர் என்ற முறையில் அவர் சிறப்பாக அவையை நடத்துவார் என்ற நம்பிக்கை உள்ளது என்றார் பிரதமர் மோடி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com