சீன எல்லையில் கூடுதலாக படையைக் குவித்தது இந்தியா

சிக்கிம், அருணாசலப் பிரதேச மாநிலத்தையொட்டிய சீன எல்லையில் கூடுதலாக இந்திய ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.

சிக்கிம், அருணாசலப் பிரதேச மாநிலத்தையொட்டிய சீன எல்லையில் கூடுதலாக இந்திய ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.
டோகாலாம் விவகாரத்தில் சீனா, இந்தியாவை தொடர்ந்து கடுமையாக விமர்சித்து வருகிறது. பேச்சு நடத்த தயார் என்று இந்தியா அறிவித்த நிலையிலும், முதலில் படைகளை வாபஸ் பெற வேண்டும் என்றும், இல்லையென்றால் மோசமான விளைவுகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்றும் சீனா அச்சுறுத்தி வருகிறது. இந்நிலையில், அந்நாட்டு எல்லைக்கு கூடுதலாக வீரர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
முக்கியமாக, சிக்கிம், அருணாசலப் பிரதேச மாநிலத்தையொட்டிய 1,400 கி.மீ. தொலைவு சீன எல்லையின் முக்கிய நிலைகளுக்கு, அதிக அளவில் ராணுவ வீரர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். டோகாலாம் விவகாரத்தில் சீனாவின் தவறான நிலைப்பாட்டுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சீன எல்லையில் வீரர்கள் முழுஅளவில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டுமென்று வலியுறுத்தப்பட்டுள்ளது என்று மத்திய அரசு உயரதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
எனினும், எத்தனை வீரர்கள் சீன எல்லைக்கு கூடுதலாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் என்பதை அதிகாரிகள் தெரிவிக்கவில்லை. இது முக்கிய ராணுவ நடவடிக்கை என்பதால் அதனை வெளிப்படையாகத் தெரிவிக்க முடியாது என்று அந்த அதிகாரிகள் தெரிவித்தனர். கடல் மட்டத்தில் இருந்து 9,000 அடி உயரத்தில் உள்ள எல்லைப் பகுதி வரை ராணுவ வீரர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர்.
எனினும், இப்போது பிரச்னையின் மையமாக உள்ள டோகாலாம் எல்லைக்கு கூடுதலாக படைகள் அனுப்பப்படவில்லை. அங்கு கடந்த 2 மாதங்களுக்கு மேலாக 350 இந்திய வீரர்கள் மட்டுமே நிலை நிறுத்தப்பட்டுள்ளனர்.
எல்லையில் இப்போது நிலவி வரும் கடும் குளிரை சமாளிக்கும் வகையில் சுமார் 45,000 வீரர்கள் வரை தயார்படுத்தப்பட்டுள்ளனர். ஆனால், அவர்கள் அனைவரும் எல்லைக்கு அனுப்பி வைக்கப்பட மாட்டார்கள் என்று பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
சிக்கிம் மாநிலத்தில் இந்தியா, பூடான், திபெத் ஆகிய மூன்று நாடுகளின் எல்லையில் டோகாலாம் பகுதி உள்ளது. இதில் பெரும் பகுதி இந்தியக் கட்டுப்பாட்டிலும், சிறிய பகுதி பூடான் கட்டுப்பாட்டிலும் உள்ளது. தங்கள் பகுதியை இந்திய ராணுவம் பாதுகாக்க, பூடான் ஏற்கெனவே இந்தியாவுடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
திபெத்தை ஏற்கெனவே ஆக்கிரமித்து தங்கள் நாட்டின் பகுதியாக அறிவித்துவிட்ட சீனா, டோகாலாம் பகுதிக்குள் அங்கு அத்துமீறி நுழைந்து சாலை அமைப்பது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள தொடர்ந்து முயற்சித்து வருகிறது.
அப்பகுதிக்குள் கடந்த ஜூன் 16-ஆம் தேதி அத்துமீறி நுழைந்த சீன ராணுவத்தினரை முன்னேறவிடாமல் இந்திய ராணுவம் தடுத்து விட்டது. கூடுதலாக இந்திய வீரர்கள் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.
இதனால், கடும் ஆத்திரமடைந்த சீனா, இந்தியாவுக்கு எதிராகத் தொடர்ந்து போர் மிரட்டல் விடுத்து வருகிறது. டோகாலாம் விவகாரம் குறித்து பேச்சு நடத்தத் தயார் என்று இந்தியா அறிவித்துவிட்டபோதிலும், எல்லையில் குவிக்கப்பட்டுள்ள படைகளை இந்தியா வாபஸ் பெற்றால் மட்டுமே அடுத் நடவடிக்கை குறித்து யோசிப்போம் என்று சீனா கூறிவருகிறது. இதனால், எல்லையில் கடந்த 3 மாதங்களாகப் பதற்றம் நீடித்து வருகிறது.
இந்திய-சீன அதிகாரிகள் பேச்சு
இந்திய-சீன ராணுவ அதிகாரிகள் வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசினர். சிக்கிம் மாநிலம் நாதுலா பகுதியில் வைத்து இந்த சந்திப்பு நடைபெற்றது. இருநாட்டு எல்லையில் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் இந்தப் பேச்சு முக்கியத்துவம் பெற்றுள்ளது.
எல்லையில் ஏற்படும் சிறிய பிரச்னைகளை நீக்கி, அமைதியை ஏற்படுத்தும் வகையில் ராணுவ அதிகாரிகள் நிலையில் இதுபோன்ற பேச்சு நடத்துவது இந்தியாவும், சீனாவும் வழக்கமாகக் கொண்டுள்ளன. எல்லையில் 5 இடங்களில் இதுபோன்ற பேச்சு நடைபெறுவது வழக்கமாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com