பாகிஸ்தான் எல்லையில்.. இவற்றுடனும் போராடும் பிஎஸ்எஃப் வீரர்கள்

இந்திய - பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் பிஎஸ்எஃப் வீரர்கள் பயங்கரவாதிகளுடன் மட்டும் அல்ல, விஷப் பாம்புகள், தேள், மோசமான விஷப்பூச்சிகளுடம் தினம் தினம் போராடும் நிலை உள்ளது.
பாகிஸ்தான் எல்லையில்.. இவற்றுடனும் போராடும் பிஎஸ்எஃப் வீரர்கள்


ஜெய்சல்மேர்: இந்திய - பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் பிஎஸ்எஃப் வீரர்கள் பயங்கரவாதிகளுடன் மட்டும் அல்ல, விஷப் பாம்புகள், தேள், மோசமான விஷப்பூச்சிகளுடம் தினம் தினம் போராடும் நிலை உள்ளது.

மனித நடமாட்டம் இல்லாத மலை மற்றும் காட்டுப் பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள் பயங்கரவாதிகளை விட, இதுபோன்ற பாம்புகள், பல்லி, சிறியது முதல் பெரிய விஷப் பூச்சிகள் போன்றவற்றால்தான் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்.

இவற்றையெல்லாம் விட, முள்ளம்பன்றிகளும், நரிகளும் கூட அவர்களுக்கு அதிக தொந்தரவுகளைக் கொடுக்கின்றன.

பகல் நேரங்களில், பூமிக்குள் பெரிய பெரிய துளையிட்டு அதில் வசிக்கும் மேற்கண்ட உயிரினங்கள், இரவு நேரங்களில் இரை தேடி மேலே வரும்போதுதான் பிரச்னையே ஆரம்பம்.

பாலைவன பூமியான ராஜஸ்தானில் பிஎஸ்எஃப் படை வீரர்களுக்கு கால நிலையால் பல்வேறு சவால்கள் காத்திருக்கும் நிலையில், இரவு நேரங்களில் இந்த பூச்சிகளால் மிகப்பெரிய அச்சுறுத்தல் ஏற்படுகிறது.

பாகிஸ்தான் நாட்டில் இருந்து ஊடுருவும் பயங்கரவாதிகளைக் காட்டிலும் பிஎஸ்எஃப் வீரர்களுக்கு மிக மோசமான எதிரிகளாக இவைதான் துன்புறுத்தல்களை செய்கின்றன.

இது குறித்து வீரர் ஒருவர் கூறுகையில், பாம்புகள் மற்றும் பல வகையான தேள்கள் இங்கு உள்ளன. அவை பெரும்பாலும் மணல் நிறத்திலேயே இருப்பதால் அவற்றுக்கு வெகு அருகில் செல்லும் வரை கண்டுபிடிக்க முடியாது. ஒரே ஒரு விஷயம்தான், அதிர்ஷ்டமா அல்லது துரதிருஷ்மா என்பதுதான் என்றார்.

இங்குள்ள பலரையும் பாம்புகள் கடித்துள்ளன. என்னை தேள் கடித்து அதற்காக ஊசிப் போட்டுக் கொண்டேன். பலரும், கண் இமைக்கும் நேரத்தில் பாம்புக் கடியில் இருந்து தப்பிய அனுபவங்களும் உள்ளன என்கிறார் இந்தியா - பகிஸ்தான் எல்லைப் பகுதியான ஜெய்சல்மேரில் பணியாற்றும் மற்றொரு வீரர்.

பாம்பு மற்றும் தேள் கடிக்கு, சக்தி வாய்ந்த மருந்துகளும், மருத்துவ வசதியும் எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்களுக்கு இங்கு வைக்கப்பட்டுள்ளது. எனவே, விஷக் கடிக்கு உள்ளாகும் வீரர்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், சிறிய விஷத்தன்மை அதிகம் கொண்ட பாம்பு அல்லது தேள், வீரர்களின் ஷுக்களுக்குள் புகுந்து கொள்ளும் சம்பவங்களும் நடந்துள்ளன. சிலரை கடித்தும் உள்ளது. அதனால், அடிக்கடி நாங்களே எங்களை சோதித்துக் கொள்வோம் என்கிறார் வீரர் ஒருவர்.

அதுமட்டுமல்லாமல், நாங்கள் பணியில் இருக்கும் போது முள்ளம்பன்றிகளும், நரிகளும் எங்களைத் தாக்கும் அபாயமும் உள்ளது என்கிறார்கள்.

எல்லையில் பாதுகாப்புப் பணியில் இருக்கும் வீரர்களுக்கு, அடிப்படை வசதிகளும், காலநிலையும் பெரும் சவாலாக இருக்கும் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. ஆனால், சில மோசமான பகுதிகளில் பணியாற்றும் வீரர்களுக்கு பாம்பு, தேள், பூச்சிகளும் கூட பிரச்னையே. 

நாம் இந்திய எல்லைக்குள் மிகச் சுதந்தரமாக, மகிழ்ச்சியாக அனைத்து விஷயங்களையும் அனுபவித்துக் கொண்டிருக்கும் அதே நேரத்தில், நமக்காகவும், நமது எல்லையைக் காக்கவும் பாதுகாப்புப் படை வீரர்கள் இதுபோன்ற எண்ணற்ற எதிரிகளுடன் போராடிக் கொண்டிருக்கிறார்கள் என்பதை நினைத்துப் பார்க்க வேண்டியது அவசியம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com