வெங்கய்ய நாயுடுவுக்கு மாநிலங்களவையில் தமிழக எம்பிக்கள் வாழ்த்து

நாட்டின் 13-ஆவது குடியரசுத் துணைத் தலைவராக பதவியேற்று முதல் முறையாக மாநிலங்களவைக்கு தலைமை ஏற்று
வெங்கய்ய நாயுடுவுக்கு மாநிலங்களவையில் தமிழக எம்பிக்கள் வாழ்த்து

நாட்டின் 13-ஆவது குடியரசுத் துணைத் தலைவராக பதவியேற்று முதல் முறையாக மாநிலங்களவைக்கு தலைமை ஏற்று வெள்ளிக்கிழமை அவையை வழிநடத்திய எம்.வெங்கய்ய நாயுடுவை தமிழக கட்சிகளின் உறுப்பினர்கள் வாழ்த்திப் பேசினர்.
ஏ.நவநீதகிருஷ்ணன் (அதிமுக): மாநிலங்களவையில் இது தொடர்பான வரவேற்பு உரையில் அதிமுக குழுத் தலைவர் ஏ.நவநீதகிருஷ்ணன் பேசியது: அவைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எம்.வெங்கய்ய நாயுடு ஒரு ஜென்டில்மேன். அவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அன்புக்குரியவர் என்பது தெரிந்த உண்மை. அவரது ஆசிகள் வெங்கய்ய நாயுடுக்கு எப்போதும் இருக்கும். ஒரு வெற்றிகரமான தலைவராக அவர் செயல்படுவார் . அவையின் அனைத்து உறுப்பினர்களையும் பாசத்தால் இணைப்பார் என்று நம்புகிறேன் என்றார்.
டி.ராஜா (இந்திய கம்யூனிஸ்ட்): இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் டி.ராஜா பேசியதாவது: அரசியலமைப்பின் இரண்டாவது மிகப்பெரிய பதவியான குடியரசுத் துணைத் தலைவர் பதவியையும், மாநிலங்களவையின் அவைத் தலைவர் பதவியையும் வகிக்கும் வெங்கய்ய நாயுடு, ஒரு விவசாயப் பின்னணியில் இருந்து இந்நிலைக்கு உயர்ந்திருப்பதாக பிரதமர் தனது உரையில் குறிப்பிட்டார். நானும் நிலமில்லாத ஒரு விவசாயத் தொழிலாளியின் மகன்தான்.
லட்சக்கணக்கான முகமில்லாத இந்தியர்கள்தான் இந்தியாவின் வரலாற்றை உருவாக்குகிறார்கள் என்று நான் கருதுவதுண்டு. அவர்கள்தான் நமது ஜனநாயகத்தின் பலம். நமது குடியரசு அரசியலமைப்பானது மதச்சார்பற்ற ஜனநாயக மதிப்பீடுகளை உறுதிப்படுத்துகிறது.
நமக்கு நாடாளுமன்ற ஜனநாயக அமைப்பு முறை, பலகட்சி அமைப்பு முறை உள்ளது. அவை மத்திய, மாநில உறவுகளை உறுதிப்படுத்துகிறது. கூட்டாட்சி முறையையும் நமது நாட்டில் உறுதிப்படுத்துகிறது. மாநிலங்களவை உண்மையிலேயே கூட்டாட்சி ஆளுகையின் அடையாளமாகவும், கூட்டாட்சித் தத்துவத்தின் அடையாளமாகவும் திகழ்ந்து வருகிறது. நீங்கள் மிகுந்த அனுபவசாலி. அதனால், அனைத்துக் கட்சியினரின் குரல், அவையில் ஒலிக்க இடம் தர வேண்டும். மாற்றுக் கருத்துகளும் பாராட்டப்பட வேண்டும். அதை நீங்கள் செய்வீர்கள் என நம்புகிறேன் என்றார்.
தமிழில் வாழ்த்த விரும்பிய திருச்சி சிவா!
தலைவர் பதவி நாற்காலியில் அமர்ந்து மாநிலங்களவையை முதல் முறையாக வழிடத்திய எம்.வெங்கய்ய நாயுடுவை திமுக உறுப்பினர் திருச்சி சிவா தமிழில் வரவேற்க விரும்புவதாகத் தெரிவித்தார். இதற்கு வெங்கய்ய நாயுடுவும் அனுமதித்தார். அப்போது, தனது உரையைத் தமிழில் தொடங்கிய போது சில உறுப்பினர்கள் உரை மொழிமாற்றம் இல்லை என்றும் ஆங்கிலத்தில் பேசுமாறும் கேட்டுக் கொண்டனர். அப்போது, சிவாவின் தமிழ் ஆர்வத்தை உணர்ந்த வெங்கய்ய நாயுடு அவரைத் தமிழிலும், ஆங்கிலுத்திலும் கலந்து பேசுமாறும், தன்னால் தமிழில் புரிந்து கொள்ள முடியும் என்றும் கூறினார்.
எனினும், பிற உறுப்பினர்களின் நலன் கருதி தனது உரையை ஆங்கிலத்தில் திருச்சி சிவா தொடர்ந்தார். அவர் பேசியது:
மாநிலங்களவை உறுப்பினராக இருக்கும் ஓர் உறுப்பினர் மாநிலங்களவைத் தலைவராக வருவது குறித்து பெருமை அடைகிறோம். நீங்கள் மற்றவர்களால் உயர்த்தப்படாமல் படிப்படியாக நீங்கள் அமைத்த ஏணிப்படிகளால் இந்த உயர்ந்த இடத்தை அடைந்திருக்கிறீர்கள். ஒரு கிராமத்தின் அடிமட்டத் தொண்டராக உங்கள் பணியைத் தொடங்கி அரசியலமைப்பின் உயர்ந்த பதவியை அடைந்திருக்கிறீர்கள். தற்போது நீங்கள் அரசியலமைப்பின் பாதுகாவலராகவும், அவையின் பாதுகாவலாரகவும் உள்ளீர்கள். கடந்த 20 ஆண்டுகளாக உங்களை எனக்கு நன்றாகத் தெரியும். பல்வேறு பதவி நிலைகளில் இருந்துள்ளீர்கள். மிகவும் எளிமையான நபர். உங்கள் அணுகுமுறை மிகவும் நேசிக்கத்தக்கது. எதிர்க்கட்சியினர் கூட உங்களிடம் வாஞ்சையுடன் பழக விரும்புவர். நீங்கள் அவையின் உறுப்பினர்களை பாரபட்சமற்ற வகையில் நோக்க வேண்டும். திருக்குறள் நெறியில் நின்று நடுநிலைமையுடன் அவையை வழிநடத்திச் செல்வீர்கள் என நம்புகிறோம் என்றார் திருச்சி சிவா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com