அரசியல் கட்சி தொடங்குகிறார் கன்னட நடிகர் உபேந்திரா!

புதிய அரசியல் கட்சியைத் தொடங்கப் போவதாக கன்னட நடிகர் உபேந்திரா சனிக்கிழமை அறிவித்துள்ளார்.
அரசியல் கட்சி தொடங்குகிறார் கன்னட நடிகர் உபேந்திரா!

புதிய அரசியல் கட்சியைத் தொடங்கப் போவதாக கன்னட நடிகர் உபேந்திரா சனிக்கிழமை அறிவித்துள்ளார்.

இதுகுறித்து பெங்களூரில் அவர் செய்தியாளர்களிடம் சனிக்கிழமை கூறியதாவது:
பிரச்னைகளுக்குத் தீர்வு காணும் திறன்கள் மற்றும் யோசனைகளைக் கொண்ட திறமையானவர்களுக்கு வாய்ப்பு வழங்கும் வகையில், புதிய அரசியல் கட்சியைத் தொடங்க நான் திட்டமிட்டுள்ளேன். நான் தொடங்க இருக்கும் அரசியல் கட்சியானது, மக்களின் தலைவராகவோ அல்லது மக்களின் சேவையாளராகவோ இருக்காது. ஆனால், மக்கள் தொண்டராக எனது கட்சி திகழும்.
எனது கட்சியில் யார் வேண்டுமானாலும் சேரலாம். இது ஒரு வெளிப்படையான அமைப்பு. ஆதலால், எனது கட்சியில் இணைவதுடன், உங்களது ஆலோசனைகளை எந்தவித தயக்கமும் இல்லாமலும், அரசியலுக்கு பணபலம், உடல்பலம், சாதி ஆதரவு வேண்டும் என்ற எண்ணங்கள் இல்லாமலும் பகிர்ந்து கொள்ளும்படி மக்களை கேட்டுக் கொள்கிறேன். புதியத் தொடக்கத்தை கொண்டு வருவதற்கு அனைத்து தரப்பு மக்களும் எனது கட்சியில் சேர வேண்டும்.
பல்வேறு அரசியல் கட்சிகளிடம் இருந்தும், அக்கட்சிகளில் சேரும்படி எனக்கு முன்பு அழைப்புகள் வந்தன. அக்கட்சிகளின் பெயர்களைத் தெரிவிக்க விரும்பவில்லை. நான் எந்த அரசியல் கட்சியையும் அல்லது யாரையும் குறை கூறவில்லை. அவர்கள் அனைவரும் குறிப்பிட்ட வளையத்துக்குள் இருக்கின்றனர். நான் அக்கட்சிகளில் ஏதேனும் ஒரு கட்சியில் சேர்ந்தால், நான் அவ்வாறு ஆகியிருப்பேன். ஆனால், அவ்வாறு ஆக விரும்பவில்லை.
நான் மேலும் ஒரு திரைப்படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளேன். அந்தத் திரைப்படம் முடிந்ததும், நான் எனது ஒட்டுமொத்த நேரம், சக்தியை கட்சிக்காகப் பயன்படுத்துவேன் என்றார் உபேந்திரா.
அதேநேரத்தில், அரசியல் கட்சியை எப்போது தொடங்குவீர்கள்?, மிக குறுகியக் காலத்தில் வேட்பாளர்களை எப்படி தேர்வு செய்வீர்கள்? என்பது போன்ற கேள்விகளுக்கு உபேந்திரா பதிலளிக்க மறுத்து விட்டார்.
கன்னட திரையுலக ரசிகர்களால் "ரியல் ஸ்டார்' என்று உபேந்திரா அழைக்கப்படுகிறார். வசன கர்த்தாவாக தனது திரையுலக வாழ்க்கையை தொடங்கிய உபேந்திரா, இதுவரையில் 50 திரைப்படங்களில் நடித்திருப்பதுடன், 10 திரைப்படங்களை இயக்கியும் உள்ளார்.
முன்னதாக, கர்நாடக சட்டப் பேரவைத் தேர்தலுக்கு முன்பாக, பாஜகவில் உபேந்திரா சேர திட்டமிட்டிருப்பதாக செய்திகள் வெளியாகி வந்தன.
இந்நிலையில், அரசியல் கட்சி தொடங்க இருக்கும் எண்ணத்தை உபேந்திரா வெள்ளிக்கிழமை சூசகமாக வெளிப்படுத்தியிருந்தார். இதுதொடர்பாக அவர் வெள்ளிக்கிழமை வெளியிட்ட குரல் பதிவில், "மாற்றங்களை ஏற்படுத்த யாராவது சிலர் பொறுப்பேற்க வேண்டும்; அந்தப் பொறுப்பை ஏற்க நான் தயாராக உள்ளேன்' எனத் தெரிவித்திருந்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com