அஸ்ஸாமில் வெள்ளம்: 11 லட்சம் பேர் பாதிப்பு

அஸ்ஸாம் மாநிலத்தில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு காரணமாக, 5 பேர் சனிக்கிழமை உயிரிழந்தனர். வெள்ளத்தால், 19 மாவட்டங்களில் 11 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அஸ்ஸாம் மாநிலத்தில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு காரணமாக, 5 பேர் சனிக்கிழமை உயிரிழந்தனர். வெள்ளத்தால், 19 மாவட்டங்களில் 11 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதுதொடர்பாக, மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
மாநிலத்தில் வெள்ளப் பெருக்கு காரணமாக, சனிக்கிழமை மட்டும் 5 பேர் உயிரிழந்தனர். இதனால், உயிரிழப்பு 8}ஆக அதிகரித்தது. இவர்களுடன் இந்த ஆண்டில் வெள்ளம் தொடர்பான சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 89}ஆக அதிகரித்துள்ளது.
அஸ்ஸாமின் தின்சுகியா, திப்ருகர், சிவசாகர், மஜுலி, ஜோர்ஹட், கோலாகட், துப்ரி, சிராங் உள்பட 19 மாவட்டங்களில், 11 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இவற்றில், அதிகபட்சமாக, துப்ரி மாவட்டத்தில் 1.92 லட்சம் பேரும், அதற்கு அடுத்தபடியாக, தேமாஜி மாவட்டத்தில் 1.51 லட்சம் பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,752 கிராமங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. ஒரு லட்சம் ஹெக்டேர் பாசனப் பயிர்கள் வெள்ளத்தால் சேதமடைந்துள்ளன. பல மாவட்டங்களில் ஆற்றங்கரைகள், சாலைகள், பாலங்கள் மற்றும் கட்டுமானங்கள் சேதமடைந்துவிட்டன. இந்நிலையில், 14 மாவட்டங்களில் 268 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. அந்த முகாம்களில், 63,797 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
ஜோர்ஹட், திப்ரூகர், சோனித்பூர், துப்ரி நகர் ஆகிய இடங்களில் பிரம்மபுத்திரா நதியில் அபாயக் கட்டத்தைத் தாண்டி வெள்ளம் பாய்ந்து கொண்டிருக்கிறது. இதேபோல், பர்ஹிதேஹிங் போன்ற மற்ற நதிகளிலும் அபாயக் கட்டத்தைத் தாண்டி வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திரிபுராவில் வெள்ளம்: இதேபோல், திரிபுரா மாநிலத்தில் இடைவிடாது பெய்து வரும் மழையால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு காரணமாக, மாநிலத்தின் 3 மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
மேற்கு திரிபுரா மாவட்டத்தில் 2,000 குடும்பங்கள், தங்களது வீடுகளை விட்டு வெளியேறி அரசு கட்டடங்களில் தஞ்சம் அடைந்துள்ளன. பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மாநில வருவாய்த் துறை அமைச்சர் பாதல் செüதரி, சனிக்கிழமை நேரில் சென்று பார்வையிட்டார். அப்போது, ஹெüரா நதியில், அபாயக் கட்டத்தை தாண்டி வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
சிபாய்ஜலா மாவட்டத்தில் வெள்ளம் காரணமாக, 2,500 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. அவர்களுக்காக, அரசு கட்டடங்களில் 60 நிவாரண முகாம்கள் திறக்கப்பட்டுள்ளன. அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகள் வழங்கப்பட்டிருப்பதாக மாவட்ட ஆட்சியர் பிரதீப் சக்ரவர்த்தி கூறினார்.
அகர்தலாவில் 116.55 மில்லி மீட்டர் அளவுக்கு மழைப் பதிவாகியுள்ளதாக, வானிலை ஆய்வு மையம் இயக்குநர் திலீப் ஷா கூறினார். அடுத்த 2 நாள்களுக்குப் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் அவர் கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com