பிகார் துணை முதல்வரை பதவி நீக்கம் செய்ய லாலு வலியுறுத்தல்

பிகாரில் ரூ. 600 கோடி மதிப்பிலான அரசுப் பணத்தை ஒரு தன்னார்வத் தொண்டு நிறுவனம் (என்ஜிஓ) முறைகேடான வழிகளில் பெற்ற விவகாரத்தில் துணை முதல்வர் சுஷில்குமார் மோடியை பதவிநீக்கம் செய்ய வேண்டும்
பிகார் துணை முதல்வரை பதவி நீக்கம் செய்ய லாலு வலியுறுத்தல்

பிகாரில் ரூ. 600 கோடி மதிப்பிலான அரசுப் பணத்தை ஒரு தன்னார்வத் தொண்டு நிறுவனம் (என்ஜிஓ) முறைகேடான வழிகளில் பெற்ற விவகாரத்தில் துணை முதல்வர் சுஷில்குமார் மோடியை பதவிநீக்கம் செய்ய வேண்டும் என்று ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சித் தலைவர் லாலு பிரசாத் வலியுறுத்தினார்.
பிகார் மாநிலம் பாகல்பூரைச் சேர்ந்த ஒரு தன்னார்வத் தொண்டு நிறுவனம் கோடிக்கணக்கிலான அரசுப் பணத்தை வங்கிகளில் இருந்து முறைகேடான வழியில் எடுத்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக அம்மாநில காவல்துறையின் பொருளாதாரக் குற்றப் பிரிவு விசாரித்து வருகிறது. இந்த விசாரணையில், மேற்கண்ட முறைகேட்டின் மூலம் இதுவரை ரூ.600 கோடிக்கும் அதிகமான அரசுப் பணம் எடுக்கப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளதாக காவல்துறை எஸ்.பி. மனோஜ் குமார் தெரிவித்தார்.
முன்னதாக, இந்த முறைகேட்டின் மூலம் ரூ.302.70 கோடி வரையிலான அரசுப் பணத்தை அந்த என்ஜிஓ பெற்றுள்ளதாக பிகார் தலைமைச் செயலாளர் அஞ்சனிகுமார் சிங் கடந்த 10ஆம் தேதி தெரிவித்திருந்தார். இத்தொகை மேலும் கூட வாய்ப்புள்ளதாகவும் அவர் கூறியிருந்தார்.
இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சித் தலைவர் லாலு பிரசாத், பாட்னாவில் செய்தியாளர்களிடம் சனிக்கிழமை கூறியதாவது:
சம்பந்தப்பட்ட என்ஜிஓ மூலம் மோசடி செய்யப்பட்ட பணத்தின் அளவு ரூ.1,000 கோடியை எட்டி விட்டது. இந்தப் பணம் மாநிலத்தை விட்டு வெளியே சென்றுள்ளதோடு, ரியல் எஸ்டேட் உள்ளிட்டவற்றில் முதலீடு செய்யப்பட்டுள்ளது.
இதில் கருப்புப் பண மோசடி நடைபெற்றிருக்க வாய்ப்புள்ளதையும் மறுக்க முடியாது. மேலும், இந்த மோசடியில் வங்களின் தொடர்பும் இருப்பதால் இந்த விவகாரத்தில் மாநில அரசு அமைப்பால் நேர்மையான வகையில் விசாரணை நடத்த இயலாது. எனவே, இந்த மோசடி குறித்து சிபிஐ விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று நாங்கள் கோருகிறோம்.
இது தொடர்பாக தலைமைத் தணிக்கை அமைப்பு சிறப்புத் தணிக்கையை மேற்கொள்ள வேண்டும். மேலும், அமலாக்கத்துறையும் இந்த மோசடி குறித்து விசாரிக்க வேண்டும்.
குறிப்பிட்ட என்ஜிஓ}வுடன் துணை முதல்வர் சுஷில்குமார் மோடிக்குத் தொடர்பு உள்ளது. எனவே, அவரை பதவியில் இருந்து நீக்க வேண்டும். பல ஆண்டுகளாக நிதி மற்றும் வணிக வரித்துறைகளை நிர்வகித்து வந்தார். அவரது அனுமதியின்றி எந்த வங்கிக் கணக்கிலும் பணம் செலுத்தப்பட்டிருக்க முடியாது. நிதிமோசடிகளைத் தடுக்க வேண்டியது அவரது கடமையாகும்.
சுமார் ரூ.1,000 கோடிக்கு மேல் மோசடி செய்துள்ள அந்த என்ஜிஓ}வுடன் முதல்வர் நிதீஷ்குமார், துணை முதல்வர் சுஷில்குமார் மோடி ஆகிய இருவருக்கும் தொடர்பு உள்ளது. இந்த விவகாரத்தை பிகார் பேரவையின் மழைக்காலக் கூட்டத்தொடரில் எங்கள் கட்சி எம்எல்ஏக்கள் எழுப்புவார்கள் என்றார் லாலு.
தனது கருத்துக்கு வலு சேர்க்கும் வகையில், குறிப்பிட்ட என்ஜிஓ}வின் நிறுவனருக்கு நிதீஷ்குமார் விருது வழங்கும் காட்சி அடங்கிய புகைப்படத்தை லாலு, செய்தியாளர்களிடம் காண்பித்தார்.
இந்நிலையில், லாலுவின் குற்றச்சாட்டை பிகாரில் ஆளும் ஐக்கிய ஜனதா தளம் கட்சி மறுத்துள்ளது. அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் நீரஜ்குமார் கூறுகையில், வெறுமனே குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் குற்றச்சாட்டுகள் கூறப்படக் கூடாது. மாறாக, உண்மைகளின் அடிப்படையில் அவை அமைந்திருக்க வேண்டும் என்றார்.
சுகாதாரத்துறை அமைச்சர் மீதும் குற்றச்சாட்டு: இதனிடையே, லாலு பிரசாத் செய்தியாளர்களிடம் பேசுகையில், "பிகார் மாநில சுகாதாரத் துறை அமைச்சரும், மாநில பாஜக மூத்த தலைவர்களில் ஒருவருமான மங்கள் பாண்டே, அரசு மருத்துவர்களை தனது சொந்த பயன்பாட்டுக்கு பயன்படுத்துகிறார். அவரது இல்லத்தில், 4 மருத்துவர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். அவசர சேவை வண்டியும் அங்கு நிறுத்தப்பட்டுள்ளது. அவரது சொந்தப் பயன்பாட்டுக்கு இதை அமைச்சர் செய்துள்ளார்' என்று குற்றம்சாட்டினார்.
அமைச்சர் மறுப்பு: எனினும், லாலுவின் குற்றச்சாட்டுகளை அமைச்சர் மங்கள் பாண்டே மறுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், "லாலு பிரசாத் பொய்யான தகவல்களைப் பரப்பி வருகிறார்' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com