ம.பி.: சுதந்திரத் தினத்தைக் கொண்டாட மதரசாக்களுக்கு அறிவுறுத்தல்

நாட்டின் 71-ஆவது சுதந்திர தினத்தை சிறப்பாகக் கொண்டாடுமாறு மத்தியப் பிரதேசத்தில் அமைந்துள்ள (இஸ்லாமியப் பள்ளிகள்) மதரசாக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நாட்டின் 71-ஆவது சுதந்திர தினத்தை சிறப்பாகக் கொண்டாடுமாறு மத்தியப் பிரதேசத்தில் அமைந்துள்ள (இஸ்லாமியப் பள்ளிகள்) மதரசாக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பான சுற்றறிக்கையை சம்பந்தப்பட்டவர்களுக்கு மத்தியப் பிரதேச மதரசா வாரியம் அனுப்பியுள்ளது. அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

சுதந்திர தினத்தன்று மாநிலத்தில் உள்ள 4,750 பதிவு செய்யப்பட்ட மதரசா பள்ளிகளிலும் தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செலுத்த வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது. அதேபோன்று நாட்டுப் பற்றை பறைசாற்றும் வகையிலான கலை நிகழ்ச்சிகளையும் நடத்த வேண்டும் என கேட்டுக் கொள்ளப்படுகிறது. இந்தக் கொண்டாடங்களின் ஒரு பகுதியாக கொடி அணிவகுப்புகளையும் நடத்துமாறு வலியுறுத்தப்படுகிறது.
இந்த அறிவுறுத்தல்கள் அனைத்தையும் மதரசாக்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும். மேலும், சுதந்திர தின நிகழ்ச்சிகள் அனைத்தையும் புகைப்படம் எடுத்து மதரசா வாரியத்துக்கு மின்னஞ்சல் அனுப்ப வேண்டும்து என அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மத்தியப் பிரதேச மதரசா வாரிய தலைவர் சையது இமத் உத்தின், பிடிஐ செய்தியாளரிடம் கூறுகையில், "எங்களது தேசப்பற்றை வெளிக்காட்டும் விதமாக சுதந்திர தினத்தை விமரிசையாகக் கொண்டாடத் திட்டமிட்டோம்; அதன் அடிப்படையிலேயே இதுதொடர்பான அறிவுறுத்தல்கள் மதரசாக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது' என்றார்.
உத்தரப் பிரதேசத்தில் உள்ள மதரசாக்களுக்கு இதுபோன்ற உத்தரவை அந்த மாநில அரசு சில நாள்களுக்கு முன்பாக பிறப்பித்ததும், அது பல்வேறு சர்ச்சைகளுக்கு வித்திட்டதும் நினைவுகூரத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com