7 மாதங்களில் 70 காஷ்மீர் இளைஞர்கள் தீவிரவாத இயக்கத்தில் இணைந்தனர்

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் கடந்த 7 மாதங்களில் 70 இளைஞர்கள் தீவிரவாத இயக்கங்களில் இணைந்துள்ளனர் என்று பாதுகாப்புப் படையின் மூத்த அதிகாரி ஒருவர் கூறினார்.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் கடந்த 7 மாதங்களில் 70 இளைஞர்கள் தீவிரவாத இயக்கங்களில் இணைந்துள்ளனர் என்று பாதுகாப்புப் படையின் மூத்த அதிகாரி ஒருவர் கூறினார்.
இதுதொடர்பாக, அவர் ஞாயிற்றுக்கிழமை மேலும் கூறியதாவது:
பள்ளத்தாக்குப் பகுதியில் நிகழாண்டில் கடந்த 7 மாதங்களில் 70 காஷ்மீர் இளைஞர்கள், தீவிரவாத இயக்கங்களில் இணைந்துள்ளனர். இவர்களில் பெரும்பாலானவர்கள், தெற்கு காஷ்மீரில் உள்ள புல்வாமா, சோபியான், குல்காம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
கடந்த 2010-ஆம் ஆண்டில் 54 காஷ்மீர் இளைஞர்கள், தீவிரவாத இயக்கங்களில் இணைந்தனர். பின்னர், தீவிரவாத இயக்கங்களில் இளைஞர்கள் இணைவது படிப்படியாகக் குறைந்தது. பிறகு, 2014-ஆம் ஆண்டில் இருந்து மீண்டும் அதிகரிக்கத் தொடங்கிவிட்டது. கடந்த ஆண்டு மட்டும், 88 இளைஞர்கள், தீவிரவாத இயக்கங்களில் இணைந்தனர்.
இதில், புவியியல் அமைப்பின்படி, ஸ்ரீநகர், அனந்த்நாக், குல்காம், சோபியான், பட்காம் ஆகிய மாவட்டங்களின் மையப்பகுதியில் புல்வாமா மாவட்டம் அமைந்துள்ளது. மேலும், புல்வமா மாவட்டத்தில் அடர்ந்த காடுகளும், புதர்களும் இருப்பதால், பயங்கரவாதிகளின் புகலிடமாக
அந்த மாவட்டம் விளங்குகிறது.
என்கவுன்ட்டரில் கடந்த ஆண்டு கொல்லப்பட்ட பர்ஹான் வானி, லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் தலைவர் அபு துஜானா ஆகியோர், புல்வாமா மாவட்டத்தில் வளர்ந்தவர் ஆவர்.
நிகழாண்டில், தீவிரவாத இயக்கங்களில் இணைவதில் இருந்து 54 பேர் தடுத்து நிறுத்தப்பட்டனர். இதுதவிர, ஆயுதப்பயிற்சி பெறுவதற்காக, ஆக்கிரப்பு காஷ்மீருக்குச் செல்ல முயன்ற இருபதுக்கும் மேற்பட்டோர் பாதுகாப்புப் படையினரால் தடுக்கப்பட்டனர்.
கடந்த 7 மாதங்களில், காஷ்மீர் பள்ளத்தாக்குப் பகுதியில் பாதுகாப்புப் படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே நேரிட்ட துப்பாக்கிச் சண்டையில் 132 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். மேலும், இந்த காலகட்டத்தில், லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத இயக்கத்தைச் சேர்ந்த கமாண்டர்கள் 6 பேரும், ஹிஸ்புல் இயக்கத் தலைவர் ஒருவரும் கொல்லப்பட்டனர் என்றார் அந்த பாதுகாப்புப் படை அதிகாரி.
இதனிடையே, தீவிரவாத இயக்கங்களில் இணைவதற்காக, வீடுகளில் இருந்து வெளியேறிய காஷ்மீர் இளைஞர்களை மீட்டு, அவர்களை நல்வழிப்படுத்த காவல் துறையினர் முயற்சி செய்ய வேண்டும் என்று ஜம்மு-காஷ்மீர் முதல்வர் மெஹபூபா முஃப்தி கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com