ஆதாருடன் 9.3 கோடி பான் அட்டைகள் இணைப்பு: வருமான வரித்துறை

ஆதாருடன் 9.3 கோடி பான் (நிரந்தர கணக்கு எண்) அட்டைகள் இணைக்கப்பட்டிருப்பதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.

ஆதாருடன் 9.3 கோடி பான் (நிரந்தர கணக்கு எண்) அட்டைகள் இணைக்கப்பட்டிருப்பதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தில்லியில் வருமான வரித்துறை மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:
நாடு முழுவதும் 30 கோடி பான் அட்டைகள் உள்ளன. வருமான வரி கணக்குத் தாக்கல் செய்வதற்கான கடைசி தேதியான கடந்த 5-ஆம் தேதி நிலவரப்படி, ஆதாருடன் 9.3 கோடி பான் அட்டைகள் வருமான வரித்துறையால் இணைக்கப்பட்டுள்ளன. கடந்த ஜூன் மாதம் மற்றும் ஜூலை மாதத்துக்கு இடைப்பட்ட காலத்தில் மட்டும் 3 கோடி அட்டைகள் ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ளன.
ஆதார், பான் ஆகிய 2 அட்டைகளையும் இணைப்பதற்கான காலக்கெடுவை வரும் 31-ஆம் தேதி வரை வருமான வரித்துறை நீட்டித்துள்ளது. இதனால், வரும் காலத்தில் மேலும் பலர் தங்களது ஆதார், பான் விவரங்களை இணைப்பார்கள் என்பதால், இந்த எண்ணிக்கை உயரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
காலக்கெடு நிறைவடையும் கடைசி நாளான வரும் 31-ஆம் தேதிக்கு முன்பாக, ஆதாருடன் பான் அட்டைகளை வருமான வரித்துறை தொடர்ந்து இணைக்கும் பணியில் ஈடுபடும். ஆதாருடன் பான் எண்ணை இணைக்காமல் வருமான வரி கணக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தால், ஆதாருடன் பான் இணைக்கப்படும் வரையில், வருமான வரி கணக்கு தாக்கல் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட மாட்டாது என்று அந்த அதிகாரி கூறினார்.
வருமான வரி கணக்கைத் தாக்கல் செய்ய ஆதாருடன் பான் அட்டையை கட்டாயம் இணைக்க வேண்டும் என்றும், ஜூலை 1ஆம் தேதி முதல் புதிய பான் அட்டையை வாங்குவதற்கு ஆதாரை கட்டாயம் அளிக்க வேண்டும் என்றும் மத்திய அரசு அறிவித்தது. இதுதொடர்பாக வருமான வரித்துறை வெளியிட்ட அறிவிப்பில், வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய ஆதார் எண்ணையோ அல்லது ஆதாருக்கு பதிவு செய்யப்படும்போது வழங்கப்படும் பதிவு எண்ணையோ அளிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆதாருடன் பான் அட்டையை இணைப்பதற்கு இணையதள வசதி, குறுஞ்செய்தி வசதி உள்ளிட்ட பல்வேறு புதிய வசதிகளையும் வருமான வரித்துறை அறிமுகப்படுத்தியது.
இதனிடையே, மக்களவையில் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி அண்மையில் பேசியபோது, ஆதாருடன் பான் அட்டையை இணைப்பதற்கு குறிப்பிட்ட காலக்கெடு எதையும் அரசு நிர்ணயிக்கவில்லை என்று தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com