சரத் யாதவுக்கு ஜேடி(யு) கட்சியின் 14 மாநிலப் பிரிவுகளின் ஆதரவு உள்ளது

மாநிலங்களவை ஐக்கிய ஜனதா தளம் (ஜேடி(யு)) எம்.பி.க்கள் குழுத் தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட சரத் யாதவுக்கு அக்கட்சியின் 14 மாநிலப் பிரிவுகளின் ஆதரவு இருப்பதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மாநிலங்களவை ஐக்கிய ஜனதா தளம் (ஜேடி(யு)) எம்.பி.க்கள் குழுத் தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட சரத் யாதவுக்கு அக்கட்சியின் 14 மாநிலப் பிரிவுகளின் ஆதரவு இருப்பதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக சரத் யாதவுக்கு மிகவும் நெருக்கமானவராக கருதப்படும் அருண் ஸ்ரீவாஸ்தவா கூறியதாவது:
சரத் யாதவுக்கு 2 மாநிலங்களவை எம்.பி.க்கள் மற்றும் கட்சியின் சில தேசிய அளவிலான நிர்வாகிகளும், 14 மாநிலப் பிரிவுகளும் தங்களது ஆதரவு கடிதங்களை அளித்துள்ளன. நிதீஷ் குமார் வருவதற்கு முன்பே, ஐக்கிய ஜனதா தளத்துக்கு தலைவராக இருந்தவர் சரத் யாதவ். அதன்பிறகுதான், தனது சமதா கட்சியை ஐக்கிய ஜனதா தளத்தில் நிதீஷ் குமார் இணைத்தார். கட்சியில் இருந்து நாங்கள் விலக மாட்டோம். பிகாருக்கு வெளியே கட்சிக்கு செல்வாக்கு இல்லை என்று நிதீஷ் தெரிவித்து வருகிறார். அப்படியெனில், அவர் புதிதாக கட்சித் தொடங்கட்டும். எனவே, தேசிய அளவிலான கட்சியாக இருக்கும் ஐக்கிய ஜனதா தளத்தை கைப்பற்ற நிதீஷ் முயற்சிக்கக் கூடாது என்றார் அவர்.
பிகாரில் லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரீய ஜனதா தளத்துடனான கூட்டணியை முறித்துவிட்டு, பாஜகவுடன் கூட்டணி சேர்ந்து நிதீஷ் குமார் ஆட்சியமைத்ததை சரத் யாதவ் எதிர்த்தபோது, அவரை மாநிலங்களவை எம்.பி.க்களான அலி அன்வர் அன்சாரியும், வீரேந்திர குமாரும் ஆதரித்தனர். அவர்களில், தில்லியில் நடைபெற்ற எதிர்க்கட்சிக் கூட்டத்தில் கலந்து கொண்ட அலி அன்வாரி அன்சாரி அக்கட்சியிலிருந்து அண்மையில் இடைநீக்கம் செய்யப்பட்டார். இதேபோல், கட்சி விரோத செயல்களில் ஈடுபட்ட குற்றச்சாட்டின்கீழ், மாநிலங்களவை ஜேடி(யு) எம்.பி.க்கள் குழுத் தலைவர் பதவியிலிருந்து சரத் யாதவ் சனிக்கிழமை நீக்கப்பட்டார்.
இதைத் தொடர்ந்து, நிதீஷ் குமாருக்கு பதிலடி கொடுக்கும் வகையில் கருத்து வெளியிட்ட சரத் யாதவ், ஐக்கிய ஜனதா தளம் என்பது நிதீஷ் குமார் மட்டுமல்ல; நானும்தான் என்று குறிப்பிட்டிருந்தார். பிகாரில் 2 ஐக்கிய ஜனதா தளம் இருப்பதாகவும், அதில் ஒரு ஐக்கிய ஜனதா தளம் ஆட்சியிலிருப்பதாகவும் (நிதீஷை விமர்சித்தார்), மற்றொரு ஐக்கிய ஜனதா தளம், பிகார் மக்களுடன் இருப்பதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
முன்னதாக, தில்லியில் அண்மையில் பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா ஆகியோரை நிதீஷ் குமார் நேரில் சந்தித்துவிட்டு செய்தியாளர்களிடம் பேசியபோது, சரத் யாதவ் தனது அரசியல் பாதையை சுதந்திரமாகத் தேர்வு செய்யலாம் என்று குறிப்பிட்டிருந்தார்.
அடுத்தடுத்து நடைபெற்ற இந்தச் சம்பவங்கள், நிதீஷ் குமார், சரத் யாதவ் இடையே பிளவை மேலும் அதிகரித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com