டார்ஜீலிங் போராட்டம்: மம்தா பானர்ஜிக்கு ராஜ்நாத் சிங் அறிவுறுத்தல்

தனி மாநிலம் கோரி டார்ஜீலிங்கில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் கோர்க்கா அமைப்புகளுடன் பேச்சுவார்த்தையை முன்னெடுக்குமாறு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்
டார்ஜீலிங் போராட்டம்: மம்தா பானர்ஜிக்கு ராஜ்நாத் சிங் அறிவுறுத்தல்

தனி மாநிலம் கோரி டார்ஜீலிங்கில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் கோர்க்கா அமைப்புகளுடன் பேச்சுவார்த்தையை முன்னெடுக்குமாறு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிவுறுத்தியுள்ளார்.
மேற்கு வங்கத்தில் டார்ஜீலிங் உள்ளிட்ட மலைப்பிரதேசங்கள் அடங்கிய கோர்க்காலாந்து பிராந்தியத்தை தனி மாநிலமாக அறிவிக்கக் கோரி, கோர்க்கா ஜனமுக்தி மோர்ச்சா உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் கடந்த ஜூன் 18-ஆம் தேதி முதல் போராட்டம் நடத்தி வருகின்றன. இந்தப் போராட்டங்களில் அவ்வப்போது வன்முறைச் சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன. மேலும், இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி கோர்க்கா அமைப்புகள் அழைப்பு விடுத்ததன் பேரில், டார்ஜீலிங்கில் கடந்த 60 நாள்களாக வேலைநிறுத்தப் போராட்டமும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்தப் போராட்டங்களால் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழல் காரணமாக, டார்ஜீலிங்கில் போக்குவரத்து முற்றிலுமாக முடங்கியுள்ளதுடன், உணவுப்பொருள்கள், மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களுக்கும் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. இதன் காரணமாக அங்குள்ள பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், டார்ஜீலிங்கில் அமைதி சூழல் திரும்ப போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தையை முன்னெடுக்குமாறு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை ராஜ்நாத் சிங் அறிவுறுத்தியுள்ளார். இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
தொடர் போராட்டம் காரணமாக டார்ஜீலிங்கில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழல் மிகுந்த கவலையளிக்கிறது. இரண்டு மாதங்களாக நடைபெற்று வரும் இந்தப் போராட்டம் காரணமாக ஏற்பட்டிருக்கும் உயிரிழப்புகளும், மக்கள் சந்தித்து வரும் பிரச்னைகளும் வேதனையளிப்பதாக உள்ளது. எந்தவொரு பிரச்னைக்கும் வன்முறை தீர்வாகாது. ஜனநாயக நாட்டில், ஒரு பிரச்னையை பேச்சுவார்த்தை மூலமாக எளிதில் தீர்த்துக் கொள்ள முடியும். எனவே, டார்ஜீலிங்கில் போராட்டக்காரர்கள் தங்களின் போராட்டத்தை கைவிட முன்வர வேண்டும். அதேபோல், கோர்க்கா அமைப்புகளுடன் ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தையை மேற்கு வங்க அரசும், அந்த மாநில முதல்வர் மம்தா பானர்ஜியும் முன்னெடுக்க வேண்டும் என அந்த அறிக்கையில் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
கோர்க்கா ஒருங்கிணைப்புக் குழுடன் பேச்சு: முன்னதாக, டார்ஜீலிங் தனி மாநிலம் கோரி போராட்டங்களை முன்னெடுத்து வரும் அமைப்புகளுக்கு தலைமை வகிக்கும் கோர்க்காலாந்து இயக்க ஒருங்கிணைப்புக் குழுவுடன் (ஜிஎம்சிசி) மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஞாயிற்றுக்கிழமை பேச்சுவார்த்தை நடத்தினார்.
தில்லியில் உள்ள மத்திய உள்துறை அமைச்சக அலுவலகத்தில் நடைபெற்ற இந்தப் பேச்சுவாரத்தையில், கோர்க்காலாந்து ஜனமுக்தி மோர்ச்சா கட்சியின் தலைவர் ஸ்வராஜ் தப்பா உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர்.
இந்தப் பேச்சுவார்த்தையின்போது, டார்ஜீலிங்கில் நடைபெற்று வரும் போராட்டங்களை முடிவுக்குக் கொண்டு வருமாறு கோர்க்கா தலைவர்களிடம் ராஜ்நாத் சிங் வேண்டுகோள் விடுத்ததாக மத்திய உள்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அப்போது, டார்ஜீலிங் மலைப்பிரதேச மக்களின் உரிமைகளை மேற்கு வங்க அரசு நசுக்குவதாகவும், எனவே, தனி மாநிலம் ஒன்றே நிரந்தரத் தீர்வாக அமையும் என்றும் கோர்க்கா தலைவர்கள் தெரிவித்ததாகத் தெரிகிறது.
இதனைத் தொடர்ந்து, தங்கள் கோரிக்கைகள் அடங்கிய மனுவை, ராஜ்நாத் சிங்கிடம் கோர்க்கா தலைவர்கள் வழங்கினர்.
இதுகுறித்து கோர்க்கா ஜனமுக்தி மோர்ச்சா கட்சித் தலைவர் ஸ்வராஜ் தப்பா கூறியதாவது:
டார்ஜீலிங்கில் நடைபெறும் போராட்டங்களை முடித்துக் கொள்ளுமாறு ராஜ்நாத் சிங் வேண்டுகோள் விடுத்தார். அவரிடம், கோர்க்காலாந்து தனி மாநிலம் அமைக்க வேண்டியதன் அவசியம் குறித்து நாங்கள் எடுத்துரைத்தோம். மேலும், தனி மாநிலத்தை அமைப்பதற்கான நடவடிக்கையை எடுக்குமாறும் அவரிடம் வலியுறுத்தினோம் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com