தேர்தல்களில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் வேறு நபர் மூலம் வாக்களிக்க அனுமதி

இந்தியாவில் நடைபெறும் தேர்தல்களில் வாக்களிக்க விரும்பும் வெளிநாடு வாழ் இந்தியர்கள், இந்தியாவில் இருக்கும் வேறு நபர் மூலம் வாக்களிக்க அனுமதியளிப்பது தொடர்பான

இந்தியாவில் நடைபெறும் தேர்தல்களில் வாக்களிக்க விரும்பும் வெளிநாடு வாழ் இந்தியர்கள், இந்தியாவில் இருக்கும் வேறு நபர் மூலம் வாக்களிக்க அனுமதியளிப்பது தொடர்பான திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இதுகுறித்து தேர்தல் ஆணைய வட்டாரத் தகவல்கள் கூறியதாவது:
இந்தியத் தேர்தல்களில் வாக்களிக்க விரும்பும் வெளிநாடு வாழ் இந்தியர்கள் தங்களது பெயர்களை பதிவு செய்வதற்காக தேர்தல் ஆணையம் தனி இணையதளத்தை தொடங்கியுள்ளது. அதில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் 24,348 பேர் தங்களது பெயர்களைப் பதிவு செய்துள்ளனர். அவர்களில் அதிகப்பட்சமாக வெளிநாடுகளில் வாழும் கேரள மாநிலத்தைச் சேர்ந்த 23,556 பேர் பெயர்களை பதிவு செய்துள்ளனர். பஞ்சாப் மாநிலத்தவர் 364 பேர், குஜராத் மாநிலத்தவர் 14 பேரும் தங்களது பெயர்களை பதிவு செய்துள்ளனர்.
வெளிநாடு வாழ் இந்தியர், இந்திய குடிமகனாக இருத்தல் வேண்டும். அவர் நிச்சயம், வெளிநாட்டு குடியுரிமையை பெற்றிருக்கக் கூடாது ஆகிய நிபந்தனைகளும் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு விதிக்கப்பட்டுள்ளது. இணையதளத்தில் பெயர்களை பதிவிடும்போது, தங்களது கடவுச்சீட்டு விவரத்தை குறிப்பிட வேண்டும். அவ்வாறு குறிப்பிடப்படும் கடவுச்சீட்டில் தெரிவிக்கப்பட்டிருக்கும் முகவரி இருக்கும் தொகுதியில் நடைபெறும் தேர்தலில் அவர்கள் வாக்களிக்க அனுமதிக்கப்படுவர்.
தேர்தல் ஆணைய இணையதளத்தில் அவர்கள் பெயர்களைப் பதிவு செய்ததும், அதன்மீது தேர்தல் ஆணையம் பரிசீலனை நடத்தி, ஒப்புதல் அளிப்பது குறித்து முடிவெடுக்கும். அந்த நபருக்கு தேர்தலில் வாக்களிக்க ஒப்புதல் அளித்தால், அதுகுறித்து வெளிநாட்டில் வாழும் இந்தியரின் முகவரிக்கு தபால் மூலம் தேர்தல் ஆணையம் தெரியப்படுத்தும். எனினும், அவர்களுக்கு இந்திய வாக்காளர்களுக்கு அளிக்கப்படுவது போன்று, புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அட்டை வழங்கப்பட மாட்டாது. தேர்தலில் வாக்களிக்க வாக்குச்சாவடி அவர் வரும்போது, தங்களது கடவுச்சீட்டை அங்கிருக்கும் தேர்தல் அதிகாரியிடம் காண்பித்தே வாக்களிக்க வேண்டும்.
இதற்கு முன்பு தேர்தல் ஆணைய இணையதளத்தில் பதிவு செய்த நபர்களில், 10 ஆயிரம் முதல் 20 ஆயிரம் பேர் வரையிலேயே, இந்தியாவுக்கு வந்து தேர்தலில் வாக்கைப் பதிவு செய்துள்ளனர். எஞ்சியவர்கள் வரவில்லை. பணத்தை செலவழித்து, இந்தியாவுக்கு வந்து வாக்களிக்க விரும்பாததே இதற்கு காரணம். இதை கவனத்தில் கொண்டு, தில்லியில் கடந்த 2}ஆம் தேதி நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒரு முடிவு எடுக்கப்பட்டது. அதாவது, தேர்தலில் வாக்களிக்க விரும்பும் வெளிநாடு வாழ் இந்தியர்கள், இந்தியாவில் இருக்கும் தங்களுக்கு தெரிந்தவர்கள் மூலம் வாக்களிக்க அனுமதிப்பது தொடர்பான திட்டத்துக்கு கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இதன்மூலம், தேர்தலில் வாக்களிக்க வெளிநாடு வாழ் இந்தியர்கள், இந்தியாவுக்கு நேரில் வர வேண்டியதில்லை. வேறு ஒரு நபரைத் தேர்வு செய்து, அவர் மூலம் வாக்களிக்கலாம். ஆனால், இதிலும் ஒரு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இந்த வசதியை பயன்படுத்தி வாக்களிக்கும் நபர், ஒவ்வொரு தேர்தலிலும் தங்களுக்கு வாக்களிக்க புதிய நபரைத் தேர்வு செய்து, அதை தேர்தல் ஆணையத்திடம் தெரியப்படுத்த வேண்டும். மத்திய ஆயுதப்படை வீரர்களுக்கு மட்டுமே, இந்த வசதி முன்பு அளிக்கப்பட்டது. தற்போது இந்த வசதியை வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கும் அளிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது என்று தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com