'நீட்' விலக்கு விவகாரம்: மத்திய உள்துறையிடம் கூடுதல் ஆவணங்கள் ஒப்படைப்பு!

நீட் தேர்வில் தமிழகத்துக்கு ஓராண்டு விலக்கு அளிக்க வகை செய்யும் விவகாரத்தில், அவசர சட்ட முன்வரைவுடன், மத்திய அரசு கோரிய கூடுதல் ஆவணங்களை தமிழகம் தாக்கல் செய்துள்ளது. 
'நீட்' விலக்கு விவகாரம்: மத்திய உள்துறையிடம் கூடுதல் ஆவணங்கள் ஒப்படைப்பு!

புதுதில்லி: நீட் தேர்வில் தமிழகத்துக்கு ஓராண்டு விலக்கு அளிக்க வகை செய்யும் விவகாரத்தில், அவசர சட்ட முன்வரைவுடன், மத்திய அரசு கோரிய கூடுதல் ஆவணங்களை தமிழகம் தாக்கல் செய்துள்ளது. 

நீட் தேர்வில் இருந்து, தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு ஓராண்டு விலக்கு அளிக்க மத்திய அரசு ஒத்துழைப்பு வழங்கும் என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்னையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) தெரிவித்தார். இதையடுத்து முதல்வர் பழனிசாமியுடன் அவரது இல்லத்தில், தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர் அவசர ஆலோசனை நடத்தினார்.

நீட் தேர்வில் ஓராண்டு விலக்கு அளிக்கும் அவசர சட்டத்திற்கான முன்வரைவு திங்கள்கிழமை (ஆக.14) காலை 10 மணியளவில் மத்திய உள்துறை அமைச்சகத்திடம் வழங்கப்படும். சட்டத்திற்கு நிச்சயம் ஒப்புதல் பெற்று விடுவோம் என்ற நம்பிக்கை உள்ளது. மாணவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் தகவலை அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டுள்ளார். இதற்காக அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

இதையடுத்து சுகாதாரத்துறை முதன்மைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன், திட்டங்கள் மற்றும் சிறப்பு முயற்சிகள் துறை முதன்மைச் செயலர் எஸ்.கிருஷ்ணன், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்க கூடுதல் இயக்குநர் செந்தில்ராஜ் ஆகிய 3 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை தில்லி சென்றனர்.

இந்நிலையில் இன்று மத்திய உள்துறை அமைச்சத்திடம் நீட் தேர்வில் தமிழகத்துக்கு ஓராண்டு விலக்கு அளிக்க வகை செய்யும் அவசர சட்ட முன்வரைவு மற்றும் ஆவணங்களை, தமிழக சுகாதாரத்துறை முதன்மைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் சமர்ப்பித்தார்.

அதனைத் தொடர்ந்து ஆவணங்களை பரிசீலித்த மத்திய உள்துறை அமைச்சகம், தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் படி நிரப்பக் கூடிய இடங்கள் தொடர்பான விபரங்கள் அடங்கிய கூடுதல் ஆவணங்களை சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொண்டது.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் தகவல் தெரிவித்த சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், கூடுதல் ஆவணங்கள் தமிழகத்திலிருந்து பெறப்பட்டு இன்று மாலை உள்துறை அமைச்சகத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று தெரிவித்தார்,

அதன்படி கூடுதல் ஆவணங்கள் தமிழகத்தில் இருந்து வருவிக்கப்பட்டு மத்திய உள்துறை அமைச்சகத்தில் ஒப்படைக்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com