சுதந்தர தினம்: மோடி உரையில் பணமதிப்பிழப்பு குறித்த விளக்கம் இடம்பெற்றதா? 

பணமதிப்பிழப்பு விவகாரத்தின் போது மோடியின் கதை முடிந்தது என்று நினைத்தவர்களுக்கு எல்லாம் சுதந்தர தின விழா உரையில் பதிலளித்துள்ளார் பிரதமர் மோடி.
சுதந்தர தினம்: மோடி உரையில் பணமதிப்பிழப்பு குறித்த விளக்கம் இடம்பெற்றதா? 


புது தில்லி: பணமதிப்பிழப்பு விவகாரத்தின் போது மோடியின் கதை முடிந்தது என்று நினைத்தவர்களுக்கு எல்லாம் சுதந்தர தின விழா உரையில் பதிலளித்துள்ளார் பிரதமர் மோடி.

சுமார் 56 நிமிடங்களைக் கொண்ட உரையில், பயங்கரவாதம், ஜம்மு காஷ்மீர், ஆதார், கோரக்பூர் சம்பவம் என பல்வேறு விஷயங்கள் அடங்கியதாக இருந்தது.

நாடு முழுவதும் 71ஆவது சுதந்திர தின விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. 

இதை முன்னிட்டு தில்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசியக் கொடியை ஏற்றினார். விழாவில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

முன்னதாக பிரதமர் மோடிக்கு முப்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. தொடர்ந்து அவர் நாட்டு மக்களுக்கு சுதந்திர தின உரை நிகழ்த்தினார்

பணமதிப்பிழப்பு மற்றும் ஊழல் குறித்து அவர் பேசியதாவது, இந்தியாவில் பினாமி சொத்துகள் ரூ.800 கோடி மதிப்புள்ள - இதுவரை யாருமே தொடாத -சொத்துகள் கைப்பற்றப்பட்டுள்ளன. நாட்டைக் கொள்ளை அடித்தவர்கள் இனி நிம்மதியாக தூங்க முடியாது. ஊழல்வாதிகள் தலைதெறிக்க ஓடும்நிலை ஏற்பட்டுள்ளது என்றார்.

மேலும், பணமதிப்பிழப்பு விவகாரத்தின் போது பல தலைவர்கள் மோடியின் கதை முடிந்தது என்று விமரிசித்தார்கள்.

ஆனால், பணமதிப்பிழப்பு விவகாரத்தினால் 3 லட்சம் கோடி ரூபாய் பணம் வங்கிப் பரிமாற்றத்துக்குள் வந்துள்ளது. ரூ.1.75 லட்சம் கோடி அளவுக்கு சந்தேகத்துக்குரிய முதலீடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், ரூ.2 லட்சம் கோடி அளவுக்கு கருப்புப் பணம் வங்கியை வந்து அடைந்தது.

கடந்த ஆண்டைக் காட்டிலும் வருமான வரி ரூ.34 லட்சம் அளவுக்கு உயர்ந்தது.

வருவாய்க்கு அதிகமாக சொத்து சேர்த்து வைத்திருந்த 18 லட்சம் பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதில் 4.5 லட்சம் பேர் தங்களது தவறுகளை ஒப்புக் கொண்டுள்ளனர். இந்த 18 லட்சம் பேரில் 1 லட்சம் பேர் இதுவரை வருமான வரியே செலுத்தாதவர்கள்.

பணமதிப்பிழப்பு மூலமாக கருப்புப் பணத்தை வைத்து பினாமி பெயரில் வியாபாரம் செய்து வந்தவர்கள் முடக்கப்பட்டுள்ளனர். இதுபோன்று சுமார் 3 லட்சம் கம்பெனிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஏழைகளின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டுதான், கருப்புப் பணம் மற்றும் ஊழலுக்கு எதிராக ஒரு பெரிய போரைத் தொடங்கினேன்.

அதன் பயனாக, டிஜிட்டல் பரிமாற்றம் 34 சதவீதம் உயர்ந்தது. நாடு குறைந்த பணநடமாட்டம் கொண்டதாக மாறும் வழியில் சென்று கொண்டிருக்கிறது என்று கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com