பாக். பிரதமரின் சுதந்திர தின உரை: இந்தியா மீது குற்றச்சாட்டு

பாகிஸ்தானின் 70-ஆவது சுதந்திர தினத்தையொட்டி அந்நாட்டு பிரதமர் ஷாஹித் காகான் அப்பாஸி ஆற்றிய உரையில் இந்தியா மீது குற்றம்சாட்டியுள்ளார்.
பாக். பிரதமரின் சுதந்திர தின உரை: இந்தியா மீது குற்றச்சாட்டு

பாகிஸ்தானின் 70-ஆவது சுதந்திர தினத்தையொட்டி அந்நாட்டு பிரதமர் ஷாஹித் காகான் அப்பாஸி ஆற்றிய உரையில் இந்தியா மீது குற்றம்சாட்டியுள்ளார்.
ஊழல் குற்றச்சாட்டில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை அடுத்து பாகிஸ்தான் பிரதமராக இருந்த நவாஸ் ஷெரீஃப் பதவி விலகினார். இதையடுத்து, பெட்ரோலியத் துறை அமைச்சராக இருந்த ஷாஹித் காகான் அப்பாஸி கடந்த 1-ஆம் தேதி தாற்காலிக பிரதமராகப் பொறுப்பேற்றார்.
இந்நிலையில், பாகிஸ்தான் சுந்திர தினத்தையொட்டி (ஆகஸ்ட் 14) அவர் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது இந்தியாவை விமர்சித்து அவர் கூறியதாவது:
இரு தரப்பை உறவை மேம்படுத்தும் விஷயத்தில் இந்தியா எப்போதும் முட்டுக்கட்டை போட்டு வருகிறது. பிற நாட்டுப் பகுதியிலும் தங்கள் ஆதிக்கத்தை செலுத்த வேண்டும் என்ற நோக்கில் இந்தியா செயல்படுவதுதான் இரு தரப்பு உறவில் பெரும் பிரச்னையாக உள்ளது.
அனைத்து நாடுகளுடனும் சிறப்பான நல்லுறவைப் பேண வேண்டும் என்றுதான் பாகிஸ்தான் விரும்புகிறது. இந்தியாவுடன் அர்த்தமுள்ள வகையில் பேச்சு நடத்தி அனைத்துப் பிரச்னைகளுக்கும் தீர்வுகாண வேண்டும் என்பதுதான் பாகிஸ்தானின்நோக்கமாக உள்ளது. ஆனால், இந்தியாவின் தவறான மனப்போக்குதான் பிரச்னைகள் தொடர்வதற்குக் காரணமாக உள்ளது.
பிராந்திய அளவில் எழும் பிரச்னைகளைத் தீர்க்க சர்வதேச சமூகம் முன்வர வேண்டும். முக்கியமாக காஷ்மீர் விவகாரத்தில் சர்வதேச தலையீடு தேவை என்றார் அவர்.
பாகிஸ்தான் அதிபர் மம்னூன் ஹுசைன் தனது உரையில், 'பாகிஸ்தானை வளர்ந்த நாடாக மாற்ற மக்களிடையே ஒற்றுமை தேவை. நமக்கு இடையே உள்ள வேற்றுமைகளை மறந்து அரசமைப்புச் சட்டப்படி ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்' என்றார்.
பாகிஸ்தான் சுதந்திர தின நிகழ்ச்சியில் சீன துணைப் பிரதமர் வாங் யாங் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். அவர் பேசுகையில், 'பாகிஸ்தானின் வளர்ச்சிக்கும் முன்னேற்றத்துக்கும் சீனா எப்போதும் துணை நிற்கும். பாகிஸ்தானுடனான சீனாவின் நட்பு இரும்பைவிட உறுதியானது; தேனைவிட இனிமையானது' என்றார்.
400 அடி உயரத்தில் தேசியக் கொடி: 70-ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்திய-பாகிஸ்தான் எல்லைப் பகுதியான அட்டாரி-வாகா எல்லையில் 400 அடி உயர கொடிக்கம்பத்தில் பாகிஸ்தான் தேசியக் கொடி ஏற்றப்பட்டது. 120 அடி நீளமும், 80 அடி உயரமும் கொண்ட இந்தக் கொடி, பாகிஸ்தானின் மிகப்பெரிய கொடியாகும். மேலும், 400 அடி உயரத்தில் கொடி ஏற்றப்பட்டதன் மூலம் தெற்காசியாவில் மிக உயரத்தில் பறக்கும் தேசியக் கொடி என்ற பெருமையும் கிடைத்துள்ளது. சர்வதேச அளவில் இது 8-ஆவது மிக உயரமான கொடியாகும்.
பாகிஸ்தான் ராணுவத் தளபதி கமர் ஜாவேத் பாஜ்வா ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவுக்குப் பிறகு இந்தக் கொடியை ஏற்றி வைத்தார். இதையடுத்து பாகிஸ்தான் முழுவதும் சுதந்திர தினக் கொண்டாட்டம் தொடங்கியது.
'பாகிஸ்தானை பலவீனப்படுத்த யார் முயற்சித்தாலும், நமது ராணுவம் முழுபலத்துடன் அவர்களை எதிர்கொண்டு வெற்றி பெறும்' என்று ஜாவேத் தனது உரையில் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com