பிரியங்காவுக்கு செயல் தலைவர் பதவி?: பத்திரிகையில் வெளியான செய்திக்கு காங்கிரஸ் மறுப்பு

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மகள் பிரியங்காவுக்கு செயல் தலைவர் பதவி அளிக்கப்படலாம் என்று பத்திரிகையில் வெளியான செய்திகளை அக்கட்சி மறுத்துள்ளது.
பிரியங்காவுக்கு செயல் தலைவர் பதவி?: பத்திரிகையில் வெளியான செய்திக்கு காங்கிரஸ் மறுப்பு

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மகள் பிரியங்காவுக்கு செயல் தலைவர் பதவி அளிக்கப்படலாம் என்று பத்திரிகையில் வெளியான செய்திகளை அக்கட்சி மறுத்துள்ளது.
'வெள்ளையனே வெளியேறு இயக்கம்' தொடங்கப்பட்டதன் 75-ஆவது ஆண்டு நினைவு தினத்தையொட்டி, தில்லியில் காங்கிரஸ் காரியக் கமிட்டி கூட்டம் கடந்த 8-ஆம் தேதி நடைபெற்றது. இக்கூட்டத்தை சுட்டிக்காட்டி, ஆங்கில நாளிதழில் திங்கள்கிழமை செய்தி வெளியாகியிருந்தது.
அந்தச் செய்தியில், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட மூத்த தலைவர்களுக்கு கட்சியில் முக்கியப் பொறுப்பு அளிப்பது குறித்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பிற தலைவர்களிடம் கருத்து கேட்டதாகவும், அப்போது தனது மகள் பிரியங்காவை கட்சியின் செயல் தலைவராக்குவது குறித்து கருத்து தெரிவிக்குமாறு கூறியதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவராக இருக்கும் ராகுல் காந்தியை கட்சியின் தலைவராக்க வேண்டும் என்று அக்கட்சியைச் சேர்ந்த சில தலைவர்கள் வெளிப்படையாக கருத்துகளை வெளியிட்டனர். இதை ஏற்க மறுக்கும் சில தலைவர்கள், பிரியங்கா காந்தியை கட்சியின் தலைவராக்கி, அடுத்த மக்களவைத் தேர்தலை காங்கிரஸ் எதிர்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். இந்த சூழ்நிலையில், ஆங்கில நாளிதழில் வெளியான இந்தச் செய்தி, காங்கிரஸ் கட்சி வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து தில்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் ஊடகப் பிரிவின் தலைவர் ரன்தீப் சுர்ஜேவாலாவிடம் கேள்வியெழுப்பப்பட்டது. அதற்கு அவர், 'அந்த செய்தி முழுவதும் பொய்யானது, அடிப்படை முகாந்திரமில்லாதது. விஷமத் தனம் மற்றும் தேவையில்லாத வதந்தியை ஏற்படுத்தும் வகையில் வெளியாகியிருக்கும் பொய்ச் செய்தியாகும்' என்றார்.
காங்கிரஸ் கட்சியின் மூத்த செய்தித் தொடர்பாளர் ஆனந்த் சர்மா கூறியதாவது: தனது செயல்படாத்தன்மை, வாக்குறுதிகளை நிறைவேற்றாதது, அதிகரித்து வரும் பயங்கரவாதத் தாக்குதல்கள், பாதுகாப்புப் படை வீரர்களின் உயிரிழப்புகள், கோரக்பூரில் குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் போன்ற அரசின் தோல்விகள் குறித்து விவாதம் நடத்துவதை மத்திய அரசு விரும்பவில்லை. ஆதலால் இதுபோன்ற செய்திகளை திட்டமிட்டு மத்திய அரசு பரப்பி வருகிறது.
இதுவொரு விஷமத்தனமான மற்றும் கற்பனைத்தனமான செய்தி; அதை காங்கிரஸ் நிராகரிக்கிறது. தனது தோல்விகளில் இருந்து நாட்டு மக்களின் கவனத்தை திசை திருப்புவதற்காக மத்திய அரசு திட்டமிட்டு வெளியிட்டிருக்கும் கட்டுக்கதையாகும். இதுபோன்று திட்டமிட்டு வெளியிடப்படும் செய்திகளுக்கு ஊடகம் முக்கியத்துவம் கொடுக்கக் கூடாது. அவ்வாறு செய்வது, நாட்டில் நடக்கும் சம்பவத்தில் இருந்து மக்களின் கவனத்தை திசை திருப்பச் செய்து விடும் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com