கேரள பள்ளியில் தடையை மீறி தேசியக் கொடி ஏற்றிய ஆர்எஸ்எஸ் தலைவர்: வழக்குப்பதிவு செய்ய காவல்துறைக்கு உத்தரவு

கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளியில் தடை உத்தரவை மீறி ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பாகவத் தேசியக் கொடியை ஏற்றியது குறித்து வழக்குப்பதிவு செய்யும்படி

கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளியில் தடை உத்தரவை மீறி ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பாகவத் தேசியக் கொடியை ஏற்றியது குறித்து வழக்குப்பதிவு செய்யும்படி காவல்துறைக்கு அரசு நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
கேரள மாநிலத்தில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் சுற்றுப்பயணம் செய்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார்.
பாலக்காட்டில் அரசு நிதியுதவியுடன் செயல்படும் கர்ணகி அம்மன் பள்ளியில் சுதந்திர தினத்தையொட்டி அவர் தேசியக் கொடி ஏற்ற இருப்பதாக திங்கள்கிழமை தகவல் வெளியானது. இதற்கு பாலக்காடு மாவட்ட ஆட்சியர் பி. மரியகுட்டி திங்கள்கிழமை தடை விதித்தார். இதுதொடர்பாக அவர் திங்கள்கிழமை பிறப்பித்த உத்தரவில், அரசு நிதியுதவியுடன் இயங்கும் கர்ணகி அம்மன் பள்ளியில் மக்களால் தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதிகள் அல்லது பள்ளி அதிகாரிகள் மட்டுமே தேசியக் கொடியை ஏற்ற வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
எனினும், அந்தப் பள்ளியில் தடையை மீறி ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் தேசியக் கொடியை செவ்வாய்க்கிழமை ஏற்றினார்.
இதையடுத்து, அவருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கும்படி காவல்துறைக்கு மாவட்ட ஆட்சியர் பி. மரியகுட்டி உத்தரவிட்டுள்ளார்.
முன்னதாக, பள்ளியில் தேசியக் கொடியை ஏற்றி மாணவர்கள் மத்தியில் மோகன் பாகவத் பேசுகையில், 'நாட்டின் சுதந்திரத்துக்காக தியாகங்கள் செய்தோரையும், தீவிரமாகப் பணியாற்றியோர் மற்றும் தங்களது உயிர்களைத் தியாகம் செய்தோரையும் நினைவு கூர வேண்டியது நமது கடமையாகும்; நமக்கு அளிக்கப்பட்ட சுதந்திரம், மிகவும் புனிதமானதாகும்.
அதை நாம் பாதுகாக்க வேண்டும். கடந்த 1857-ஆம் ஆண்டு முதல் 1947-ஆம் ஆண்டு வரையிலும் நமது தலைவர்கள், நாட்டின் சுதந்திரத்துக்காக தீவிரமாகப் போராடினார்கள்; சுதந்திரத்துக்காக அனைத்தையும் அவர்கள் தியாகம் செய்தார்கள்' என்றார் மோகன் பாகவத்.
கேரளத்தில் ஆர்எஸ்எஸ் அமைப்பினருக்கும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தொண்டர்களுக்கும் இடையே மோதல் சம்பவங்கள் நடைபெற்று வரும் நிலையில், அந்த மாநிலத்தில் மோகன் பாகவத் திங்கள்கிழமை முதல் 2 நாள் சுற்றுப்பயணத்தைத் தொடங்கினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com