தற்கொலைக்குத் தூண்டும் புளூவேல் விளையாட்டுக்கு மத்திய அரசு தடை

சிறுவர்களை தற்கொலை செய்து கொள்ளத் தூண்டும் அபாயகரமான புளூவேல் இணையதள விளையாட்டுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.
தற்கொலைக்குத் தூண்டும் புளூவேல் விளையாட்டுக்கு மத்திய அரசு தடை

சிறுவர்களை தற்கொலை செய்து கொள்ளத் தூண்டும் அபாயகரமான புளூவேல் இணையதள விளையாட்டுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. இவ்விளையாட்டுக்கான இணையத் தொடர்பை (லிங்க்) நீக்கி விடுமாறு கூகுள், முகநூல், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்-ஆப், மைக்ரோசாஃப்ட், யாஹூ உள்ளிட்ட நிறுவனங்களை அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
இணையதளத்தில் அண்மைக்காலமாக புளூவேல் என்ற இணையதள விளையாட்டு உலக அளவில் சிறுவர்களிடையே பிரபலமாகி வருகிறது. இதில் பங்கேற்போர் தங்களது உடலைத் தாங்களே சித்திரவதை செய்து கொள்ள வேண்டும் என்பது விதிமுறையாகும்.
இந்த விளையாட்டின் காலகட்டம் 50 நாள்களாகும். அதன்படி, விளையாட்டை இணையதளம் மூலம் நடத்துவோரின் உத்தரவுப்படி, பங்கேற்போர் தங்கள் கைகளில் கத்தியால் கீறிக் கொள்வது உள்ளிட்ட கொடூரமான செயல்களில் ஈடுபடுமாறு பணிக்கப்படுகின்றனர். அதன் கடைசிக் கட்டமாக தற்கொலை செய்து கொள்ளுமாறு உத்தரவிடப்படுகிறது. அதை ஏற்று வெளிநாடுகளில் சுமார் 130 சிறுவர்கள் தற்கொலை செய்து கொண்டனர்.
அதன் தொடர்ச்சியாக, நம் நாட்டிலும் புளூவேல் விளையாட்டு சிறுவர்களை ஈர்க்கத் தொடங்கியது. அண்மையில், மும்பையில் ஒரு 14 வயது சிறுவன் 7ஆவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
அதேபோல், மேற்கு வங்கத்தில் ஒரு பள்ளி மாணவரும், மணிப்பூரில் ஒரு சிறுவனும் தற்கொலைசெய்து கொண்டதற்கு இந்த விளையாட்டுதான் காரணம் என்று கூறப்படுகிறது.
மேலும், மத்தியப் பிரதேசத்தில் அண்மையில் புளூவேல் விளையாட்டில் ஈடுபட்டு, பள்ளிக் கட்டடத்தில் ஏறி தற்கொலைக்கு முயன்ற ஒரு மாணவரை சக மாணவர்கள் தடுத்து நிறுத்தி காப்பாற்றி விட்டனர்.
ஆபத்தான இந்த விளையாட்டுக்கு உடனடியாகத் தடை விதிக்குமாறு கேரள முதல்வர் பினராயி விஜயன் சில தினங்களுக்கு முன் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதினார்.
இந்நிலையில், புளூவேல் விளையாட்டுக்குத் தடை விதிப்பதற்கான உத்தரவை மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தலைமையிலான மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் வெளியிட்டுள்ளது. கடந்த 11-ஆம் தேதியிட்ட அந்த உத்தரவில், இந்த விளையாட்டு அல்லது இதற்கு இணையான விளையாட்டுகளுக்கான இணையத் தொடர்பை உடனடியாக நீக்கி விடுமாறு கூகுள், முகநூல், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்-ஆப், மைக்ரோசாஃப்ட், யாஹூ உள்ளிட்ட நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:
இந்தியாவில் புளூவேல் சேலஞ்ச் என்ற இணையதள விளையாட்டில் ஈடுபட்டு சிறுவர்கள் தற்கொலை செய்து கொள்வது தொடர்பான செய்திகள் வெளிவந்துள்ளன. இணையதளத்தில் இத்தகைய விளையாட்டு கிடைப்பது குறித்து அரசு கவலையடைந்துள்ளது.
தங்களைத் தாங்களே காயப்படுத்திக் கொள்வதற்கும், தற்கொலை செய்து கொள்ளவும் சிறுவர்களை இந்த விளையாட்டு தூண்டுகிறது. இந்த விளையாட்டை நிர்வகிப்பவர்கள் சிறுவர்களை இதில் பங்கேற்கச் செய்யவும், தூண்டிவிடவும் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துகின்றனர். எனவேதான், கூகுள், முகநூல் போன்ற இணையதளங்கள் நடவடிக்கை எடுக்கக் கோரப்படுகிறது என்று அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
இந்த உத்தரவின் நகல்கள் மத்திய உள்துறை அமைச்சகத்துக்கும், பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகத்துக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. முன்னதாக, இந்த விளையாட்டுக்குத் தடை விதிக்குமாறு பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சர் மேனகா காந்தி, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்துக்கு அண்மையில் கடிதம் எழுதியிருந்தது குறிப்பிடத்தக்கது.

விளையாட்டு தொடங்கியது எங்கே?
அபாயகரமான புளூவேல் விளையாட்டு முதன் முதலில் ரஷியாவில்தான் தொடங்கியது. இதை உருவாக்கிய 22 வயதாகும் ஃபிலிப் புடேய்கின் என்ற இளைஞர் தற்போது சைபீரிய சிறையில் மூன்றாண்டு தண்டனையை அனுபவித்து வருகிறார்.

கேரள மாணவர் தற்கொலைக்கு புளூவேல் காரணமா?


கேரளத்தின் திருவனந்தபுரம் அருகில் உள்ள விலாபிலசாலா பகுதியைச் சேர்ந்த மனோஜ் என்ற 16 வயது மாணவர் கடந்த மாதம் 26-ஆம் தேதி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக அவரது தாயார், தொலைக்காட்சி சேனல் ஒன்றில் கூறியதாவது:
எனது மகன் புளூவேல் விளையாட்டை கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பதிவிறக்கம் செய்தார். அவன் கணக்குப் பாடத்துக்குப் பயன்படும் காம்பஸ் உபகரணத்தால் தன து உடலைக் காயப்படுத்திக் கொண்டான். அவனுக்கு நீச்சல் தெரியாதபோதிலும் நதியில் குதித்துவிட்டான். எனினும், அப்போது அவனை மீட்டு விட்டோம்.
அதன் பின் ஒரு முறை என்னிடம் பேசும்போது, 'புளூவேல் விளையாட்டின் கடைசிக் கட்டமாக தற்கொலையோ, கொலையோ செய்ய வேண்டும்' என்று தெரிவித்தான். இதனால் பயந்துபோன நான், அந்த விளையாட்டை விளையாட வேண்டாம் என்று கேட்டுக் கொண்டேன்.
அதன் பின், தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பாக அந்த விளையாட்டை தனது செல்லிடப்பேசியில் இருந்து அவன் நீக்கி விட்டான் என்று அந்த மாணவரின் தாய் தெரிவித்தார்.
இந்நிலையில், மாணவர் மனோஜின் இறப்பு குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார், புளூவேல் விளையாட்டுதான் அவரது இறப்புக்குக் காரணமா? என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com