தேசப் பாதுகாப்பில் எந்த சவாலையும் சந்திக்க தயார்: பிரதமர் மோடி சுதந்திர தின உரை

தேசத்தின் பாதுகாப்பு தொடர்பான விஷயத்தில் எந்தவிதமான சவாலையும் சந்திக்க இந்தியா தயாராக உள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி தனது சுதந்திர தின உரையில் தெரிவித்தார்.
தில்லி செங்கோட்டையில் செவ்வாய்க்கிழமை தேசியக் கொடியை ஏற்றி வைத்து உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி.
தில்லி செங்கோட்டையில் செவ்வாய்க்கிழமை தேசியக் கொடியை ஏற்றி வைத்து உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி.

தேசத்தின் பாதுகாப்பு தொடர்பான விஷயத்தில் எந்தவிதமான சவாலையும் சந்திக்க இந்தியா தயாராக உள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி தனது சுதந்திர தின உரையில் தெரிவித்தார்.
சீனாவுடன் எல்லைப் பிரச்னை நீடித்து வரும் நிலையில் அந்நாட்டின் பெயரை நேரடியாகக் குறிப்பிடாமல் மோடி இவ்வாறு பேசியுள்ளார்.
நாட்டின் 71-ஆவது சுந்திர தினத்தை முன்னிட்டு தில்லி செங்கோட்டையில் மோடி செவ்வாய்க்கிழமை தேசியக் கொடியை ஏற்றினார். பைஜாமா, குர்தா, ராஜஸ்தான் மாநில பாரம்பரியத் தலைப்பாகை அணிந்து மோடி இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
அவர் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரை:
கடந்த ஆண்டு எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் இருந்த பயங்கரவாத முகாம்களை துல்லியத் தாக்குதல் மூலம் இந்திய ராணுவம் அழித்தது. இதன் மூலம் இந்திய ராணுவத்தின் திறமையை உலகம் உணர்ந்து கொண்டது. தேசப் பாதுகாப்புக்கு நாம் மிகுந்த முக்கியத்துவம் அளித்து வருகிறோம் என்பதை இது காட்டுகிறது.
அச்சுறுத்தலை முறியடிப்போம்: நிலம், கடல், வான் வழி மட்டுமின்றி இணைய வழியில் இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டாலும் அதனை எதிர்கொண்டு முறியடிக்க நமது நாடு தயாராக உள்ளது.
நமது முப்படையில் உள்ள வீரர்கள் சூழ்நிலைக்கு ஏற்ப தங்கள் திறமையை முழு அளவில் வெளிப்படுத்தும் வல்லமை உடையவர்கள். உள்நாட்டில் நக்ஸல் அமைப்பினரின் தாக்குதல்கள், பயங்கரவாதிகளின் சதிச் செயல்கள், எல்லைக்கு அப்பால் இருந்து ஊடுருவும் பயங்கரவாதிகள் என அனைவரையும் நமது பாதுகாப்புப் படை வீரர்கள் தொடர்ந்து எதிர்கொண்டு முறியடித்து வருகின்றனர்.
ஆயுதத்தைக் கைவிட வேண்டும்: பயங்கரவாதிகள் மீதும், பயங்கரவாத இயக்கங்கள் மீதும் அரசு மென்மையான அணுகுமுறையைக் கையாளாது. அதே நேரத்தில் பயங்கரவாதிகள் ஆயுதங்களைக் கைவிட்டு தேசிய நீரோட்டத்தில் இணைய அரசு எப்போதும் வாய்ப்பளித்து வருகிறது. பயங்கரவாதக் கொள்கைகளைக் கைவிட்டு, ஜனநாயகப் பாதைக்குத் திரும்புங்கள்; அதுதான் அனைவரது வாழ்க்கையையும் வளமாக்கும் என்ற அறிவுரையை, ஆயுதம் ஏந்துபவர்களுக்கு அரசு தொடந்து வழங்கி வருகிறது.
பயங்கரவாதத்துக்கு எதிராக நாம் தனியாகப் போராடவில்லை. பல்வேறு நாடுகளும் நம்முடன் இணைந்து போராடி வருகின்றன. இதனால், பயங்கரவாதிகளின் செயல்பாடுகள் குறித்த தகவல்கள் நமது நாட்டுக்கு உடனுக்குடன் கிடைக்கின்றன. ஹவாலா பணப்பரிமாற்றம் குறித்த தகவல்களையும் பல நாடுகள் நமக்கு அளித்து வருகின்றன. பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் இந்தியாவுக்கு உதவும் அனைத்து நாடுகளுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
காஷ்மீர் விவகாரம்: துப்பாக்கித் தோட்டாக்களாலும், தொடர் வன்முறைகளாலும் காஷ்மீர் பிரச்னைக்குத் தீர்வுகாண முடியாது. காஷ்மீர் மக்களை அரவணைத்துச் செல்வதன் மூலம்தான் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். காஷ்மீரில் செயல்பட்டு வரும் பிரிவினைவாதிகள், மாநிலத்தில் அமைதியைச் சீர்குலைக்க அனைத்து வழிகளிலும் முயல்கின்றனர். ஆனால், காஷ்மீரை மீண்டும் சொர்க்க பூமியாக மாற்றும் நோக்கில் மத்திய அரசு செயல்பட்டு வருகிறது.
அமைதி, ஒற்றுமை, நல்லிணக்கம் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. ஜாதியவாதம், மதவாதம் ஆகியவை விஷம் போன்றவை. அவை நாட்டின் வளர்ச்சிக்கு உதவாது. ஏதோ ஒரு நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டு வன்முறையில் ஈடுபடுவது நமது தேசத்தில் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.
முத்தலாக் முறையால் பாதிக்கப்பட்ட பெண்கள் மேற்கொண்ட முயற்சியால் இப்போது, அந்த விவாகரத்து முறைக்கு எதிரான சூழ்நிலை நாட்டில் ஏற்பட்டுள்ளது. இதற்கான முயற்சியை மேற்கொண்ட பெண்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஜிஎஸ்டி, ரூபாய் நோட்டு வாபஸ்: சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) அறிமுகப்படுத்தப்பட்டதன் மூலம் கூட்டாட்சித் தத்துவம் நிலைநாட்டப்பட்டுள்ளது. மாநிலங்களுக்கு இடையிலான வணிக வரிச் சாவடிகள் மூடப்பட்டதால் கோடிக்கணக்கான ரூபாய் மிச்சமாகியுள்ளது.
கடந்த நவம்பர் மாதம் மேற்கொள்ளப்பட்ட ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கையால் கணக்கில் காட்டப்படாமல் இருந்த ரு.3 லட்சம் கோடி ரூபாய் வங்கிகளுக்கு வந்துவிட்டது. வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த 18 லட்சம் பேர் அரசின் கண்காணிப்பின்கீழ் வந்துவிட்டனர். ரூ.1.25 லட்சம் கோடி கருப்புப் பணம் பிடிபட்டுள்ளது.
ஏழை மக்களையும், தேசத்தையும் கொள்ளையடித்து பணம் சேர்த்தவர்கள் இப்போது நிம்மதியாகத் தூங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கருப்புப் பணத்துக்கு எதிரான மத்திய அரசின் நடவடிக்கைகள் தொடரும்.
சில நேரங்களில் இயற்கைப் பேரிடர்கள் நாட்டுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தி விடுகின்றன. இப்போது சில மாநிலங்கள் மழை, வெள்ளத்தால் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளன. அங்குள்ள மக்களுக்கு அனைத்து உதவிகளையும் அரசு அளித்து வருகிறது. சில நாள்களுக்கு முன்பு (உத்தரப் பிரதேச) மருத்துவமனையில் அப்பாவிக் குழந்தைகள் பலர் உயிரிழந்துவிட்டனர். குழந்தைகளை இழந்த குடும்பத்தினருக்கு நாட்டில் உள்ள 125 கோடி மக்களும் ஆறுதலாகத் துணை நிற்கிறார்கள்.
புதிய இந்தியா: பால கங்காதர திலகர் சுயராஜ்ஜியத்தை முன்வைத்து போராடினார். அதனை அடைந்து விட்ட நிலையில் இப்போது நல்ல நிர்வாகத்தை நோக்கிப் பயணிக்கிறோம். 2022-ஆம் ஆண்டில் புதிய இந்தியாவை அடையும் நோக்கில் செயல்பட்டு வருகிறோம். இதனை பின்னால் இருந்து இயக்கும் சக்தியாக நாட்டு மக்கள் உள்ளனர்.
1942 முதல் 1947-ஆம் ஆண்டு வரை நாட்டு மக்கள் ஒருங்கிணைந்து சுதந்திரத்துக்காக மிகத் தீவிரமாகப் போராடினர். இப்போது வரும் 2022-ஆம் ஆண்டில் புதிய இந்தியாவை உருவாக்க அதே உறுதியுடன் மக்கள் செயல்பட வேண்டும். நமது நாட்டில் அனைவரும் சமமானவர்கள்தான்.
மங்கள்யான் விண்கலத்தை 9 மாதங்களில் தயாரிக்கும் திறமை உள்ள நமது நாட்டில்தான், சில இடங்களில் ரயில் பாதை அமைக்கும் திட்டங்கள் 40 ஆண்டுகளாக நிறைவடையாமல் உள்ளன. இது மக்களுக்கு ஏமாற்றமளிக்கிறது. அரசுப் பணிகள் தொடர்பான முடிவுகளை உடனுக்குடன் எடுக்க மத்திய அரசு முனைப்பு காட்டி வருகிறது.
கனவுகள் நிறைவேறும்: புதிய இந்தியாவில் ஏழைகள் அனைவருக்கும் வீடு, குடிநீர், மின்சாரம் கிடைக்கும். விவசாயிகள் தங்கள் விலை பொருள்களுக்கு இப்போதுள்ளதைவிட இருமடங்கு விலை பெற்று கவலையின்றி இருப்பார்கள். இளைஞர்களும், யுவதிகளும் தங்கள் கனவுகளை நிறைவேற்றிக் கொள்ள அனைத்து வாய்ப்புகளும் இருக்கும். பயங்கரவாதம், மதவாதம், ஜாதியவாதம், ஊழல் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டிருக்கும். நாடு தூய்மையாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும் என்று மோடி பேசினார்.
முன்னாள் பிரதமர்கள் மன்மோகன் சிங், தேவ கெளடா, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா, மத்திய அமைச்சர்கள் உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com