வேற்று மொழி ஆக்கிரமிப்பை சகித்துக் கொள்ள மாட்டோம்: சுதந்திர தின விழாவில் சித்தராமையா உறுதி

கர்நாடகத்தில் வேற்று மொழி ஆக்கிரமிப்பை சகித்துக் கொள்ள மாட்டோம் என அந்த மாநில முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.
வேற்று மொழி ஆக்கிரமிப்பை சகித்துக் கொள்ள மாட்டோம்: சுதந்திர தின விழாவில் சித்தராமையா உறுதி

கர்நாடகத்தில் வேற்று மொழி ஆக்கிரமிப்பை சகித்துக் கொள்ள மாட்டோம் என அந்த மாநில முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.
பெங்களூரு மானக்ஷா அணிவகுப்புத் திடலில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற 71-ஆவது சுதந்திர தின விழாவில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து சித்தராமையா பேசியது:
நமது நாட்டின் சுதந்திரம் எளிதாக வந்தது அல்ல. பலரின் தியாகத்தால் நமது நாட்டிற்கு சுதந்திரத்தைப் பெற்றோம். நாம் இன்று இல்லங்களில் சுதந்திரமாகவும், அச்சமின்றி வாழவும், ராணுவ வீரர்களின் பங்களிப்பு முக்கியம். அவர்களுக்கு நாம் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளோம். நமது நாட்டின் கூட்டாட்சித் தத்துவதில் அனைவருக்கும் நம்பிக்கை உள்ளது.
அனைத்து மொழிகள், கலாசாரத்தை ஏற்றுக் கொள்ளும் பக்குவத்தை வளர்த்துக் கொண்டுள்ளோம். ஆனால், எந்த காரணத்திற்காகவும் மாநில மொழியை விட்டுத்தர மாட்டோம். மாநிலத்தில் வேற்று மொழி ஆக்கிரமிப்பு செய்ய முயன்றால் அதனை ஒரு போதும் சகித்துக் கொள்ள மாட்டோம். மாநில மொழியைப் பாதுகாக்கவும், வேற்று மொழிகளைக் கற்றுத் தரும் கூட்டாட்சி தத்துவத்தின் மீதான கொள்கையில் மாநில அரசு நம்பிக்கை கொண்டுள்ளது.
எனவே, வேற்று மொழியைத் திணிக்க யாரும் முயற்சிக்கக் கூடாது. அதனை ஒரு போதும் நாங்கள் ஏற்றுக் கொள்ள மாட்டோம்.
கன்னட மொழி மற்றும் கலாசாரத்தை பேணி காப்பதில் அரசு உறுதி கொண்டுள்ளது. கன்னட மொழியின் பெருமையை உலகிற்கு பறைசாற்ற தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். நிகழாண்டில் 3-ஆவது சர்வதேச கன்னட மாநாடு நடத்தவும் தீர்மானித்துள்ளோம்.
மேலும், பசியில்லாத கர்நாடகத்தை உருவாக்குவதோடு, கர்ப்பிணிகளுக்கு, பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவு திட்டம், ஹைதராபாத் கர்நாடகத்தில் கல்விக்கு முன்னுரிமை, சமையல் எரிவாயு இணைப்பில்லாத ஏழை குடும்பங்களுக்கு இலவச எரிவாயு இணைப்பு திட்டத்தை வழங்க அரசு திட்டமிட்டுள்ளது.
வேளான் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிப்பது, விவசாயிகளுக்கு பூஜ்ய வட்டியில் கடன், குடிசை இல்லாத மாநிலத்தை உருவாக்குவது, விளையாட்டில் ஆர்வம் உள்ள இளைஞர்களை ஊக்குவிப்பது, குழந்தை மரணத்தை தடுப்பது, தலித் மற்றும் பழங்குடியினர் மேம்படுத்துவது, சிறுபான்மை மக்களின் வளர்ச்சி, நீர்பாசன திட்டங்களுக்கு முக்கியத்துவம் அளிப்பது உள்ளிட்ட பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்த அரசு முடிவு செய்துள்ளது.
காவிரி ஆற்றில் குறுக்கே கட்டப்பட்டுள்ள பழைமையான அணைகளைப் புனரமைப்பது, மக்களின் சுகாதாரத்தை மேம்படுத்தவது, கிராமப் பஞ்சாயத்துகளுக்கு கம்பியில்லா இணையதள இணைப்பு வசதி, தொழில் வளர்ச்சி உள்ளிட்டவைகளில் அதிகம் கவனம் செலுத்த முடிவு செய்துள்ளோம்.
கடந்த 4 ஆண்டுகளாக பெங்களூரின் வளர்ச்சிக்குத் தேவையான நடவடிக்கையை மாநில அரசு மேற்கொண்டு வருகிறது. பெங்களூரில் உள்ள குடிசைப் பகுதிகளுக்கு மாதந்தோறும் 10 ஆயிரம் லிட்டர் தண்ணீரை இலவசமாக வழங்கி வருகிறோம். 2020-ஆம் ஆண்டுக்குள் பெங்களூரு மாநகரில் 100 சதம் தூய குடிநீரை வழங்கவும் திட்டமிட்டுள்ளோம். மாநில அளவில் சுற்றுலாவை மேம்படுத்தவும் திட்டமிட்டுள்ளோம் என்றார்.
சுதந்திர தின விழாவையொட்டி சிறப்பாக பணி செய்த 21 போலீஸாருக்கு குடியரசுத் தலைவர் பதக்கங்களை அணிவித்த முதல்வர், ராணுவ வீரர்கள் உள்ளிட்ட பல்வேறு பிரிவின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.
நிகழ்ச்சியில் அமைச்சர் கே.ஜே.ஜார்ஜ், மேயர் ஜி.பத்மாவதி, மாநகராட்சி ஆணையர் மஞ்சுநாத் பிரசாத், மாநகர காவல் ஆணையர் சுனில்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com