சிகிச்சை மறுப்பால் உயிரிழந்த தமிழரின் குடும்பத்துக்கு உதவி: கேரள முதல்வர் உறுதி

கேரளத்தில் சாலை விபத்தில் படுகாயமடைந்து, மருத்துவமனைகளில் சிகிச்சை மறுக்கப்பட்டதால் உயிரிழந்த தமிழக தொழிலாளியின் குடும்பத்துக்கு அனைத்து உதவிகளும் அளிக்கப்படும் என்று
சிகிச்சை மறுப்பால் உயிரிழந்த தமிழரின் குடும்பத்துக்கு உதவி: கேரள முதல்வர் உறுதி

கேரளத்தில் சாலை விபத்தில் படுகாயமடைந்து, மருத்துவமனைகளில் சிகிச்சை மறுக்கப்பட்டதால் உயிரிழந்த தமிழக தொழிலாளியின் குடும்பத்துக்கு அனைத்து உதவிகளும் அளிக்கப்படும் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் உறுதியளித்தார்.
திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த தொழிலாளி முருகன் (30) கேரளத்தில் பால் வியாபாரம் செய்து வந்தார். இந்நிலையில், கொல்லத்தில் கடந்த 6-ஆம் தேதி நிகழ்ந்த சாலை விபத்தில் அவர் படுகாயமடைந்தார். பின்னர் ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். எனினும், அவருடன் இருந்து கவனிக்க யாரும் இல்லை என்பது உள்பட பல்வேறு காரணங்களைக் கூறி கொல்லம், திருவனந்தபுரத்தில் உள்ள 5 தனியார் மருத்துவமனைகளும், திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையும் அவரை சிகிச்சைக்கு அனுமதிக்க மறுத்துவிட்டன. இதனால், ஆம்புலன்ஸிலேயே முருகன் உயிரிழந்துவிட்டார்.
இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து, கேரளப் பேரவையில் முதல்வர் பினராயி விஜயன் மன்னிப்புக் கோரினார். முருகனுக்கு சிகிச்சை மறுக்கப்பட்டது குறித்து கேரள போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், முருகனின் மனைவி, திருவனந்தபுரத்தில் உள்ள கேரள சட்டப் பேரவையில் முதல்வர் பினராயி விஜயனை சந்தித்துப் பேசினார். அப்போது, அவருக்கு ஆறுதல் கூறிய பினராயி விஜயன், முருகனின் குடும்பத்துக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதாக உறுதியளித்தார். முருகனின் மனைவி, முதல்வரிடம் கோரிக்கை மனு அளித்தார். அதில் எனது குடும்பத்தில் கணவர் மட்டுமே வருமானம் ஈட்டி வந்தார். எனக்கு 6 மற்றும் 4 வயதில் இரு குழந்தைகள் உள்ளனர். கணவர் இறந்துவிட்டதால் இப்போது வருவாய் இன்றி சிரமப்பட்டு வருகிறோம். எனவே, எனது குழந்தைகளின் கல்விக்கு அரசு உதவ வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ள பினராயி விஜயன், 'உயிரிந்தவரின் குடும்பத்தின் துயரத்தை நாம் பகிர்ந்து கொள்ள வேண்டும். இனிமேல் இதுபோன்ற துயரம் மாநிலத்தில் வேறு யாருக்கும் ஏற்படக் கூடாது என்று அரசு உறுதிபூண்டுள்ளது' என்று தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com