ஜம்மு-காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசின் கொள்கை சரியானதல்ல

ஜம்மு-காஷ்மீர் விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி அரசின் கொள்கை சரியானதல்ல என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டினார்.
ஜம்மு-காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசின் கொள்கை சரியானதல்ல

ஜம்மு-காஷ்மீர் விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி அரசின் கொள்கை சரியானதல்ல என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டினார்.
பெங்களூரு நேஷனல் கல்லூரியில் புதன்கிழமை நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் பங்கேற்று அவர் பேசியது:
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் வெறுப்பு மற்றும் கோபம் நிலைத்திருக்கும் சூழ்நிலையை பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு உருவாக்கியுள்ளது. வன்முறை மற்றும் வெறுப்பால் பயனடைவோர் பாகிஸ்தானியர்கள் மட்டுமே. முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் ஆட்சியில் அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங், மத்திய அமைச்சர்கள் ப.சிதம்பரம், ஜெய்ராம் ரமேஷ் ஆகியோருடன் இணைந்து ஜம்மு-காஷ்மீர் விவகாரத்தில் பங்காற்றியிருக்கிறேன்.
தற்போதைய மத்திய பாஜக அரசு நடத்தும் நாடகம் அல்லது நிகழ்த்தும் நகைச்சுவைக் காட்சிகளைப் போல அல்லாமல், ஜம்மு-காஷ்மீர் விவகாரத்தை முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு பொறுப்புடன் கையாண்டது. ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் அமைதியை நிலைநாட்ட 10 ஆண்டுகளாக ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு மேற்கொண்ட முயற்சியை பிரதமர் மோடி தலைமையிலான அரசு ஒரே மாதத்தில் சீரழித்துள்ளது.
காஷ்மீர் மாநிலத்தில் அமைதியை நிலைநாட்டியதோடு, பஞ்சாயத்துத் தேர்தலையும் நடத்தினோம். அதுமட்டுமன்றி, வேலைவாய்ப்புகளை உருவாக்க முனைந்தோம். அம் மாநிலத்தின் பெண்களை ஒருங்கிணைத்து, வங்கியோடு இணைத்தோம். காஷ்மீர் மாநிலத்தில் அமைதி மற்றும் நல்லிணக்கத்தை நிலைநாட்ட வேண்டும் என்பதற்காகவே இதுபோன்ற வேலைகளில் நாங்கள் ஈடுபட்டோம்.
ஜம்மு- காஷ்மீர் மாநில மக்களை தழுவிக் கொள்ள முனைந்தோம்; அதேபோல, அம் மாநில மக்களும் எங்களை தழுவிக் கொள்ள விரும்பினர். அங்கு அமைதியை உருவாக்க முனைந்து, அதில் வெற்றியும் பெற்றோம். நிலையான அமைதி இருந்தால் ஜம்மு-காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தானால் ஒன்றும் செய்ய முடியாது. அமைதியை நிலைநாட்டியதன் மூலம் பாகிஸ்தானின் சிறுபிள்ளைத்தனமான வேலைக்கு முடிவு கட்டினோம்.
ஜம்மு-காஷ்மீரில் அமைதி நிலைத்திருப்பது பாகிஸ்தான் நாட்டுக்கு ஒவ்வாததாகும். 10 ஆண்டு கால ஆட்சிக் காலத்தில் உருவாக்கியிருந்த அமைதியை, பிரதமர் மோடி தலைமையிலான அரசு ஒரே மாதத்தில் சீர்குலைத்துவிட்டது. ஜம்மு-காஷ்மீர் விவகாரத்தில் பிரதமர் மோடி கடைப்பிடித்து வரும் கொள்கை, அம் மாநிலத்தில் பாகிஸ்தான் மோசமான செயல்களில் ஈடுபட வழிவகுத்துள்ளது.
பிரதமர் மோடியின் வெளிநாட்டுக் கொள்கை மோசமானதாக உள்ளது. மோடி அரசின் வெளிநாட்டுக் கொள்கையால் ரஷியா உள்ளிட்ட அண்டை நாடுகளும் நம்மை விட்டு விலகும் நிலை உருவாகியுள்ளது. ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் பாகிஸ்தான் மற்றும் சீனா தவிர பிற அண்டை நாடுகள் இந்தியாவுக்குச் சாதகமாக இருந்தன.
ஆனால், பிரதமர் மோடி அண்டை நாடுகளை நம்மிடம் இருந்து விலகிச் செல்லும் சூழ்நிலையை உருவாக்கியுள்ளார். வரலாற்றில் முதல்முறையாக, பாகிஸ்தானுக்கு ரஷியா ஆயுதங்களை விற்றுள்ளது. அந்தளவுக்கு நமது வெளிநாட்டுக் கொள்கை மோசமடைந்துள்ளது என்றார்.
இந்த மாநாட்டில் முதல்வர் சித்தராமையா, மக்களவை காங்கிரஸ் குழுத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, கர்நாடக காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர்கே.சி.வேணுகோபால், மாநிலத் தலைவர் ஜி.பரமேஸ்வர், செயல் தலைவர்கள் தினேஷ் குண்டுராவ், எஸ்.ஆர்.பாட்டீல், அமைச்சர்கள் கே.ஜே.ஜார்ஜ், ராமலிங்க ரெட்டி, டி.கே.சிவக்குமார் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com