'நீட்' தேர்வு விலக்கு விவகாரம் :அவசரச் சட்ட முன்வரைவுக்கு 3 அமைச்சகங்கள் ஒப்புதல்

'நீட்' தேர்வுக்கு விலக்கு கோரும் ஓராண்டு அவசரச் சட்ட முன்வரைவுக்கு மத்திய சட்ட அமைச்சகம் உள்பட மூன்று அமைச்சகங்கள் புதன்கிழமை இரவு ஒப்புதல் அளித்தன.
'நீட்' தேர்வு விலக்கு விவகாரம் :அவசரச் சட்ட முன்வரைவுக்கு 3 அமைச்சகங்கள் ஒப்புதல்

'நீட்' தேர்வுக்கு விலக்கு கோரும் ஓராண்டு அவசரச் சட்ட முன்வரைவுக்கு மத்திய சட்ட அமைச்சகம் உள்பட மூன்று அமைச்சகங்கள் புதன்கிழமை இரவு ஒப்புதல் அளித்தன.
'நீட்' தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கும் வகையில், மாநில சட்டப்பேரவையில் சட்ட முன்வடிவு நிறைவேற்றப்பட்டு குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக மத்திய அரசுக்கு கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு அனுப்பிவைக்கப்பட்டது. ஆனால், அதற்கு இதுவரை ஒப்புதல் அளிக்கப்படவில்லை.
இந்நிலையில், 'நீட்' தேர்வில் இருந்து நிகழாண்டுக்கு மட்டும் விலக்கு பெறும் வகையில் தமிழக அரசு அவசரச் சட்டம் இயற்றினால் அதற்கு மத்திய அரசு ஒத்துழைக்கும்' என்று மத்திய இணையமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்திருந்தார்.
இதையடுத்து, இதற்கான அவசரச் சட்ட முன்வரைவு மத்திய உள்துறையிடம் அளிக்கப்படும் என தமிழக சுகாதார துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்திருந்தார். இதையடுத்து, தமிழக அரசின் 5 பேர் கொண்ட அதிகாரிகள் குழு தில்லியில் மத்திய உள்துறையிடம் திங்கள்கிழமை அவசரச் சட்ட முன்வரைவை சமர்ப்பித்தது.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மற்றும் உயரதிகாரிகள் தில்லி வந்தனர். பின்னர், புதன்கிழமை காலை மத்திய உள்துறை, சுகாதாரத் துறை, மனித வள மேம்பாட்டுத் துறை, சட்டத் துறை ஆகிய அலுவலகங்களுக்கு தமிழக உயரதிகாரிகள் தனித்தனியாக நேரில் சென்று 'நீட்' தேர்வுக்கு விலக்கு பெறும் அவசரச் சட்ட முன்வரைவுக்கு வலுச்சேர்ப்பதற்கான கூடுதல் தகவல்களை அளித்தனர்.
இது குறித்து பெயர் வெளியிட விரும்பாத மத்திய அரசு உயரதிகாரி கூறுகையில், 'மத்திய அரசின் தலைமை வழக்குரைஞர் கே.கே. வேணுகோபாலுடன் ஆலோசனை நடத்தி, தமிழக அரசின் அவசரச் சட்ட முன்வரைவுக்கு மத்திய சட்ட அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் ஒப்புதல் அளித்துள்ளார். இந்த அவசரச் சட்ட முன்வரைவானது அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு மட்டுமே பொருந்தும்; தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு அல்ல' என்றார். இதேபோன்று, மத்திய சுகாதார அமைச்சகம், மனித வள மேம்பாட்டு அமைச்சகம் ஆகியவையும் 'நீட்' தேர்வு விலக்கு அவசரச் சட்ட முன்வரைவுக்கு ஒப்புதல் அளித்துள்ளன.
விரைவில் நல்ல முடிவு: இந்நிலையில், நீட் தேர்வு விலக்கு விவகாரத்தில் தமிழக மாணவர்களுக்கு விரைவில் நல்ல முடிவு வரும் என்று மக்களவைத் துணைத் தலைவர் மு.தம்பிதுரை, தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர் ஆகியோர் தெரிவித்தனர்.
இந்த விவகாரம் தொடர்பாக புதன்கிழமை காலையில் மக்களவைத் துணைத் தலைவர் மு.தம்பிதுரை, தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் ஆகியோர் மத்திய சட்டம், நீதி, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் பி.பி. சௌத்ரியை நேரில் சந்தித்து தமிழகத்துக்கு 'நீட்' தேர்வில் இருந்து விலக்கு அளிப்பது தொடர்பாக வலியுறுத்தினர்.
பின்னர் தமிழ்நாடு இல்லத்தில் செய்தியாளர்களுக்கு தம்பிதுரை, விஜயபாஸ்கர் கூட்டாக அளித்த பேட்டி:
மத்திய இணை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கேட்டுக் கொண்டதற்கு இணங்க ஓராண்டுக்கு விலக்கு அளிப்பதற்கான அவசரச் சட்ட முன்வரைவு தமிழக அரசால் மத்திய அரசிடம் அளிக்கப்பட்டது. அவசரச் சட்டம் பிறப்பிக்கும் வகையில் மத்திய அரசின் பரிசீலனைக்குத் தேவையான கூடுதல் விவரங்கள் சம்பந்தப்பட்ட துறைகளிடம் வழங்கப்பட்டுள்ளன. மேலும், மத்திய இணையமைச்சர் பி.பி.சௌத்ரியையும் நேரில் சந்தித்து வலியுறுத்தினோம். பெரும் முயற்சிகள் எடுத்துள்ளதால் தமிழக மாணவர்களுக்கு விரைவில் ஒரு நல்ல முடிவை மத்திய அரசு அறிவிக்கும் என்று எதிர்பார்க்கிறோம் என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com