நீட் விலக்குக்கு அனுமதித்தது ஏன்? தலைமை வழக்குரைஞர் விளக்கமளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

தமிழகத்தில் நீட் அடிப்படையில் மருத்துவக் கலந்தாய்வு நடத்தக் கோரிய வழக்கில், மத்திய அரசின் தலைமை வழக்குரைஞர் நேரில் ஆஜராகி விளக்கமளிக்கும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
நீட் விலக்குக்கு அனுமதித்தது ஏன்? தலைமை வழக்குரைஞர் விளக்கமளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு


புது தில்லி : தமிழகத்தில் நீட் அடிப்படையில் மருத்துவக் கலந்தாய்வு நடத்தக் கோரிய வழக்கில், மத்திய அரசின் தலைமை வழக்குரைஞர் நேரில் ஆஜராகி விளக்கமளிக்கும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

நீட் தேர்வுக்கு ஆதரவு தெரிவிக்கும் மாணவர்கள் சார்பில் வழக்குரைஞர் நளினி சிதம்பரம் தொடர்ந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் இன்று இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

மேலும், மருத்துவக் கலந்தாய்வை நடத்துவதில் தாமதம் ஏன் என்றும் உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

தமிழகத்துக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க எதன் அடிப்படையில் மத்திய அரசு இசைவு தெரிவித்தது என்று இன்று மதியம் 2 மணியளவில் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று மத்திய அரசின் தலைமை வழக்குரைஞர் கே.கே வேணுகோபாலுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த வழக்கில், தமிழக அரசின் செயல்பாட்டில் எங்களுக்கு உடன்பாடு கிடையாது என்று மத்திய அரசின் கீழ் செயல்படும் இந்திய மருத்துவக் கவுன்சில் தனது கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளது.

மேலும், அனைத்து மாநிலங்களும் நீட் தேர்வை ஏற்றுக் கொண்டிருக்கும் நிலையில், தமிழகம் மட்டுமே எதிர்ப்பைத் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு மட்டுமே விலக்கு அளிக்க முடியும் என்று திட்டவட்டமாகக் கூறிய நிலையிலும், இந்த ஆண்டு மீண்டும் விலக்குக் கோரியுள்ளது என்றும் இந்திய மருத்துவக் கவுன்சில் உச்ச நீதிமன்றத்தில் கூறியுள்ளது.

மேலும், மருத்துவக் கலந்தாய்வை நடத்த தமிழக அரசுக்கு கூடுதல் கால அவகாசம் வழங்கக் கூடாது என்றும் இந்திய மருத்துவக் கவுன்சில் வலியுறுத்தியுள்ளது.

நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்கும் தமிழக அரசின் சட்ட முன்வரைவுக்கு, மத்திய அரசின் 3 துறைகள் அனுமதி அளித்துள்ள நிலையில் இந்திய மருத்துவக் கவுன்சில் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com