ராஜிநாமா கடிதம் அளித்தாலும் ஓராண்டு பணியாற்ற வேண்டும்: விமானிகளுக்கு புதிய உத்தரவு

விமானிகள், பணியில் இருந்து விலகுவதாக ராஜிநாமா கடிதம் கொடுத்தாலும், ஓராண்டு கட்டாயம் பணியாற்ற வேண்டும் என்று விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ) தெரிவித்துள்ளது

விமானிகள், பணியில் இருந்து விலகுவதாக ராஜிநாமா கடிதம் கொடுத்தாலும், ஓராண்டு கட்டாயம் பணியாற்ற வேண்டும் என்று விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ) தெரிவித்துள்ளது. இந்தப் புதிய நடைமுறை உடனடியாக அமலுக்கு வருவதாகவும் டிஜிசிஏ தெரிவித்துள்ளது.
இதுவரை, விமானிகள் தங்களது பணியை ராஜிநாமா செய்ய விரும்பினால், 6 மாதத்துக்கு முன்பு தாங்கள் பணிபுரியும் நிறுவனத்திடம் தெரிவித்தால் போதுமானதாக இருந்தது.
இதுதொடர்பாக, விமானப் போக்குவரத்து இயக்குநரகம், புதனகிழமை வெளியிட்ட சுற்றறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
ஒரு விமான நிறுவனத்தில் பணி புரியும், கமாண்டர் நிலையிலான அதிகாரி பதவி விலக விரும்பினால், ராஜிநாமா கடிதம் கொடுத்த பிறகு 12 மாதங்கள் வரையிலும், சக விமானிகள் 6 மாதங்கள் வரையிலும் அந்த விமான நிறுவனத்தில் கட்டாயம் பணியாற்ற வேண்டும். ஒருவேளை விமான நிறுவனம் விரும்பினால் சம்பந்தப்பட்ட விமானி, முன்கூட்டியே பணியில் இருந்து விலகுவதற்கு அனுமதி அளித்து, அவரது ராஜிநாமாவை உடனடியாக ஏற்கலாம்.
ஓராண்டு அறிவிப்புக் காலத்தில், விமானிக்கு கொடுக்க வழங்கப்படும் பணிகளை, அவர் ஏற்க மறுக்கக் கூடாது. அதே நேரத்தில், விமானிக்கு வழங்கப்படும் சலுகைகளை விமான நிறுவனம் குறைக்கவோ, ரத்து செய்யவோ கூடாது என்று அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, விமானிகள் பணி விலகுவதை முன்கூட்டியே தெரிவிப்பதற்கான காலக்கெடுவை ஓராண்டாக நீட்டிக்க வேண்டும் என்று டிஜிசிஏவிடம் விமான நிறுவனங்கள் கோரிக்கை விடுத்தன. மேலும், விமானிகளுக்குப் பயிற்சி அளிக்க நீண்ட காலமும், அதிக முயற்சிகளும் எடுத்துக் கொள்வதாகவும் விமான நிறுவனங்கள் முறையிட்டன.
ஆனால், அந்த கோரிக்கைக்கு பல்வேறு விமான ஊழியர்கள் சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தன. ஓராண்டுக்கு முன்பே விமான நிறுவனத்திடம் தெரிவிக்க வேண்டும் என்பது உழைப்பைச் சுரண்டும் நடவடிக்கை என்றும், அந்தக் காலகட்டத்தில் விமான நிறுவனங்கள் பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபடும் என்றும் விமான ஊழியர்கள் சங்கங்கள் குற்றம் சாட்டியிருந்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com