லடாக் பகுதியில் நடைபெற்ற ஊடுருவல் குறித்து தெரியாது: சீனா

இந்தியாவின் லடாக் பிரதேசத்துக்குள் சீன துருப்புகள் ஊருருவியதாக வெளியான தகவல்கள் குறித்து தங்களுக்கு தெரியாது என்று சீனா தெரிவித்துள்ளது.

இந்தியாவின் லடாக் பிரதேசத்துக்குள் சீன துருப்புகள் ஊருருவியதாக வெளியான தகவல்கள் குறித்து தங்களுக்கு தெரியாது என்று சீனா தெரிவித்துள்ளது.
சிக்கிம் எல்லையில் இருக்கும் டோக்லாம் பகுதியை நோக்கி சீன வீரர்கள் சாலை அமைத்து வந்தனர். அந்தப் பகுதியில் சீன வீரர்களை சாலை அமைக்க அனுமதித்தால், வடகிழக்கு மாநிலங்களுடன் நாட்டின் பிற பகுதி முழுவதும் துண்டிக்கப்பட்டு விடும். அங்கு சீன வீரர்களின் ஆதிக்கம் நிலவத் தொடங்கும். இது இந்தியாவின் பாதுகாப்புக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் என்பதால், சாலை அமைக்கும் பணியை இந்திய வீரர்கள் தடுத்து நிறுத்தினர்.
இதையடுத்து, டோக்லாம் பகுதியில் இந்தியா, சீனா ஆகிய இரு நாடுகளுமே தங்களது படை வீரர்களை குவித்துள்ளன. இதனால், 2 நாடுகளுக்கும் இடையே டோக்லாம் பகுதியில் கடந்த 50 நாள்களுக்கும் மேலாக மோதல் நிலவி வருகிறது.
இந்நிலையில், இந்தியப் பகுதியான லடாக் பிரதேசத்தில் இருக்கும் பேங்காங் நதிக்கரையோரம் சீனப் படையினர் செவ்வாய்க்கிழமை திடீரென ஊடுருவினர். இதை அங்கிருந்த இந்திய ராணுவ வீரர்கள் கண்டுபிடித்து, அவர்களை விரட்டியடித்தனர்.
இதன்மூலம், அங்கு நடைபெறவிருந்த சீன ஊடுருவல் முயற்சியை இந்திய ராணுவம் வெற்றிகரமாக முறியடித்தது. எனினும், இந்திய வீரர்கள் மீது சீன வீரர்கள் கற்களை வீசித் தாக்குதல் நடத்தினர். பதிலுக்கு இந்திய வீரர்களும் கற்களை வீசியதில், இருதரப்பிலும் சிலர் காயமடைந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து, சீன தலைநகர் பெய்ஜிங்கில் செய்தியாளர்களைச் சந்தித்த அந்நாட்டு வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஹு சுன்யிங்கிடம் கேள்வியெழுப்பப்பட்டது. அதற்கு அவர் அளித்த பதில் வருமாறு:
அந்தத் தகவல் குறித்து எனக்கு எதுவும் தெரியாது. எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டுப் பகுதியில் சீன வீரர்கள் கண்காணிப்புப் பணியிலேயே ஈடுபட்டுள்ளனர். அமைதியை பேணவும், சீனா-இந்தியா எல்லைப் பகுதியை அமைதியான பகுதியாக வைத்து இருப்பதற்கும் எங்கள் நாடு உறுதிபூண்டுள்ளது.
எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டுப் பகுதியையும், இருநாடுகளுக்கும் இடையேயான மரபுகளையும் தொடர்ந்து மதித்து நடக்க வேண்டும் என்று இந்தியாவை சீனா வலியுறுத்துகிறது என்றார் ஹு சுன்யிங்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com