உண்மை இந்தியாவே மக்களின் எதிர்பார்ப்பு: ராகுல்

பிரதமர் மோடி தூய்மை இந்தியா குறித்துப் பேசுகிறார். ஆனால், உண்மை இந்தியா வேண்டும் என்பதே நாட்டு மக்களின் எதிர்பார்ப்பு என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
தில்லியில் வியாழக்கிழமை நடைபெற்ற எதிர்க்கட்சிகளின் கூட்டத்தில் ராகுல் காந்தியை வரவேற்ற சரத் யாதவ். உடன், ராஷ்ட்ரிய லோக் தளம் பொதுச் செயலாளர் ஜெயந்த் செளதரி முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்,
தில்லியில் வியாழக்கிழமை நடைபெற்ற எதிர்க்கட்சிகளின் கூட்டத்தில் ராகுல் காந்தியை வரவேற்ற சரத் யாதவ். உடன், ராஷ்ட்ரிய லோக் தளம் பொதுச் செயலாளர் ஜெயந்த் செளதரி முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்,

பிரதமர் மோடி தூய்மை இந்தியா குறித்துப் பேசுகிறார். ஆனால், உண்மை இந்தியா வேண்டும் என்பதே நாட்டு மக்களின் எதிர்பார்ப்பு என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
'நமது பன்முக கலாசாரத்தைக் காப்போம்' என்ற தலைப்பில் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் அதிருப்தி தலைவர் சரத் யாதவ் தில்லியில் வியாழக்கிழமை எதிர்க்கட்சிகளின் கூட்டத்தை நடத்தினார்.
இதில், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் தேசியச் செயலாளர் டி.ராஜா, ராஷ்ட்ரிய லோக் தளம் (ஆர்எல்டி) பொதுச் செயலாளர் ஜெயந்த் செளதரி, சமாஜவாதி, பகுஜன் சமாஜ், தேசியவாத காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சிகளின் தலைவர்கள் பலர் பங்கேற்றனர்.
இதில், பாஜகவும், மோடியும் பொய்களை மட்டுமே பேசுவதாக குற்றம்சாட்டி ராகுல் காந்தி பேசியதாவது:
கடந்த மக்களவைத் தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகள் எதையும் பாஜக நிறைவேற்றவில்லை. முக்கியமாக, வெளிநாட்டில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கருப்புப் பணத்தை மீட்பது, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்குவது உள்ளிட்டவற்றில் மத்திய அரசு முழுமையாகத் தோல்வியடைந்துவிட்டது.
இந்தியாவில் உருவாக்குவோம் என்ற திட்டத்தை மத்திய அரசு தொடங்கியது. ஆனால், இன்று நமது நாட்டில் கிடைக்கும் பொருள்கள் பெரும்பாலானவை சீனாவில் தயாரிக்கப்பட்டவையாக உள்ளன.
பிரதமர் மோடி எங்கு சென்றாலும் பொய்களைத்தான் பேசி வருகிறார். தூய்மை இந்தியாவை உருவாக்கப்போவதாக மோடி கூறி வருகிறார். ஆனால், உண்மையான இந்தியா வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
நமது அரசமைப்புச் சட்டத்தை தங்களுக்கு ஏற்ப வளைக்க வேண்டுமென்று ஆர்எஸ்எஸ் முயலுகிறது. இந்த நாடு எங்களுக்குரியது என்று அவர்கள் (ஆர்எஸ்எஸ்) கூறுகிறார்கள். நாம் அனைவரும் இந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்று நாங்கள் (காங்கிரஸ்) கூறுகிறோம். இதுதான் அவர்களுக்கும், எங்களுக்கும் உள்ள வேறுபாடு என்றார் ராகுல் காந்தி.
உள்நாட்டில் இருந்து அச்சுறுத்தல்- ஃபரூக் அப்துல்லா: கூட்டத்தில் தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவர் ஃபரூக் அப்துல்லா பேசியதாவது:
சீனாவில் இருந்தும் பாகிஸ்தானில் இருந்தும் எவ்வித அச்சுறுத்தல் வந்தாலும் அதனை எதிர்கொண்டு வெல்லும் வலிமை நமது நாட்டுக்கு உள்ளது. ஆனால், துரதிருஷ்டவசமாக அச்சுறுத்தல் நாட்டுக்கு வெளியில் இருந்து வராமல், நாட்டுக்கு உள்ளிருந்தே வருகிறது. நமது வீட்டுக்குள்ளேயே திருடன் அமர்ந்து கொண்டு அனைத்தையும் கெடுத்து வருகிறான் என்றார்.
இப்போது, காஷ்மீரிகளின் தேசியவாதம் குறித்து சிலர் கேள்வி எழுப்புகின்றனர். தேசப் பிரிவினையின்போது இந்தியாவுடன் இணைவதா? அல்லது பாகிஸ்தானுடன் செல்வதா? என்ற கேள்வி எழுந்தபோது, இந்தியாவில் சமதர்மம் இருக்கும் என்று உறுதியளிக்கப்பட்டது.
எனவே, காஷ்மீரிகளான நாங்கள் பாகிஸ்தானை ஒதுக்கிவிட்டு, இந்தியாவுடன் இணைந்தோம். நான் ஓர் இந்திய முஸ்லிம் என்பதை பெருமையுடன் கூறிக்கொள்கிறேன். எங்களுடைய தேசியவாதம் குறித்து யாரும் கேள்வி எழுப்ப முடியாது.
அவர்கள் மக்களை ஒன்றிணைப்பது குறித்து பேசுகிறார்கள். ஆனால், அதற்கான சூழ்நிலையை உருவாக்குகிறார்களா? அவர்கள் நிறையப் பேசுவார்கள். ஆனால், செயலில் எதையும் பார்க்க முடியவில்லை. நாங்கள் தேசத்துக்கு உண்மையாகத்தான் இருக்கிறோம். ஆனால், அவர்களுக்கு பெரிய மனது இல்லை என்பதை வேதனையளிக்கிறது. காஷ்மீரில் வன்முறை ஏற்பட்டதை அடுத்து வருகை தந்த அனைத்துக் கட்சிக் குழு, அங்கு மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கை குறித்து ஓர் அறிக்கையை அளித்தது. ஆனால், அது தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை' என்றார்.
சீதாராம் யெச்சூரி பேசியதாவது: முன்பு, இந்து, முஸ்லிம் தலைவர்கள் இணைந்து பிரிட்டிஷ் அரசுக்கு எதிராகப் போராடினார்கள். இப்போது, அத்தகைய ஒற்றுமைக்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. பிரிவினைவாத அரசியலுக்கு எதிராக நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்றார்.
'மக்கள் ஒன்றிணைந்துவிட்டால், ஹிட்லர் போன்றவர்கள் கூட எதிர்த்து நிற்க முடியாது' என்று சரத் யாதவ் குறிப்பிட்டார்.
'அரசின் ஒவ்வொரு செயல்பாட்டின் பின்னணியிலும் ஆர்எஸ்எஸ் அமைப்பு உள்ளது. எந்த வகையிலாவது தேர்தல்களில் வென்றுவிட வேண்டுமென்ற நோக்கில் செயல்பட்டு வரும் பாஜக, இந்தியாவின் பன்முகத்தன்மையை சீர்குலைத்து மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்த முயற்சிக்கிறது' என்று டி.ராஜா பேசினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com