கார்த்தி சிதம்பரத்துக்கு எதிராக போதிய ஆதாரம் இருந்தால்.. கைது செய்யலாம்: உச்ச நீதிமன்றம்

கார்த்தி சிதம்பரத்துக்கு எதிராக போதிய ஆதாரம் இருந்தால் அவரை சிபிஐ கைது செய்யலாம் என்று உச்ச நீதிமன்றம் ஆலோசனை வழங்கியுள்ளது.
கார்த்தி சிதம்பரத்துக்கு எதிராக போதிய ஆதாரம் இருந்தால்.. கைது செய்யலாம்: உச்ச நீதிமன்றம்


புது தில்லி: கார்த்தி சிதம்பரத்துக்கு எதிராக போதிய ஆதாரம் இருந்தால் அவரை சிபிஐ கைது செய்யலாம் என்று உச்ச நீதிமன்றம் ஆலோசனை வழங்கியுள்ளது.

முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம், வரும் 23ம் தேதி சிபிஐ தலைமை அலுவலகத்தில் நேரில் ஆஜராகி விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் அவரை, கண்காணிக்கப்படும் நபராக மத்திய அரசு அறிவித்ததற்கு, சென்னை உயர் நீதிமன்றம் விதித்த தடை உத்தரவுக்கும் உச்ச நீதிமன்றம் ஏற்கனவே தடை விதித்தது. இந்த தடையை விலக்கிக் கொள்ள மறுத்துவிட்டது.

ஐஎன்எக்ஸ் நிறுவனம் தொடர்பான வழக்கு விசாரணையின் போது, தன்னை கண்காணிக்கப்படும் நபராக அறிவித்தது குறித்து கார்த்தி சிதம்பரம் தரப்பில் குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டது. அது குறித்து நீதிபதி சிபிஐயிடம் கேள்வி எழுப்பினார். அதாவது, கார்த்திக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸை பிறப்பித்தது ஏன்? கார்த்தி சிதம்பரம் விசாரணைக்கு ஆஜரானால் லுக் அவுட் நோட்டீஸை என்ன செய்வீர்கள்? என்று கேட்டார். மேலும், கார்த்தி சிதம்பரம் சந்தேகப்படும் நபரே தவிர குற்றம் நிரூபிக்கப்பட்டவர் அல்ல என்றும் குறிப்பிட்டார்.

இதற்கு பதிலளித்த சிபிஐ, ஏற்கனவே 3 முறை நோட்டீஸ் பிறப்பித்தும் அவர் நேரில் ஆஜராகவில்லை. இவ்வாறு செய்வதால், ஒருவர் மீது நம்பகத் தன்மை குறைந்துவிடும் என்று கூறியது.

இதைக் கேட்ட கார்த்தி சிதம்பரத்தின் வழக்குரைஞர், உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ கூறிய கருத்துகளால் சமூகத்தில் கார்த்தி மீதான மாண்பைக் குறைத்துவிட்டதாகவும் வாதிட்டார். மேலும், தான் ஏற்கனவே ஏர்செல்-மேக்ஸிஸ் வழக்கில் ஆஜராகியிருக்கிறேன். இதுவரை வழக்கில் ஆஜராகவில்லை என்று கூறுவது தவறு என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இதனைக் கேட்ட உச்ச நீதிமன்ற நீதிபதி, கார்த்தி சிதம்பரத்துக்கு எதிராக போதிய ஆதாரம் இருந்தால் அவரை கைது செய்யலாம் என்று கூறினார்.

அதற்கு விளக்கம் அளித்த சிபிஐ, இந்த வழக்கில் தற்போது தான் விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணை ஆரம்பக் கட்டத்தில்தான் இருக்கிறது. மேலும், இதுபோன்ற வழக்குகளில், சம்பந்தப்பட்டவர்கள், விசாரணை ஆரம்பக் கட்டத்தில் இருக்கும்போதே, நாட்டை விட்டுத் தப்பிச் சென்ற கசப்பான அனுபவங்கள் இருப்பதால் தான் லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டதாகக் கூறியது.

இதையடுத்து, கார்த்தி சிதம்பரத்துக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட லுக் அவுட் நோட்டீஸுக்கு தடை விதிக்கவும் உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.


லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது குறித்து உச்ச நீதிமன்றம் சில கருத்துகளையும் தெரிவித்துள்ளது. அதாவது, வழக்கு விசாரணை ஆரம்பக் கட்டத்தில் இருக்கும் போதே சிலர் தப்பிச் சென்று விடுவதால் இதுபோன்ற லுக் அவுட் நோட்டீஸ்கள் பிறப்பிக்கப்படுவதாகவும் கூறியுள்ளது.

கார்த்தி சிதம்பரத்துக்கும் உச்ச நீதிமன்றம் கேள்வியை முன் வைத்தது. சிபிஐ முன் ஆஜராகி விளக்கம் அளிக்க என்ன தயக்கம்? என்று கேள்வி எழுப்பியது. அதோடு, வரும் 23ம் தேதி கார்த்தி, தில்லியில் உள்ள சிபிஐ தலைமை அலுவலகத்தில் நேரில் ஆஜராகி வழக்குத் தொடர்பாக விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.


மத்திய நிதியமைச்சராக ப.சிதம்பரம் பதவி வகித்தபோது, மோரீஷஸ் போன்ற வெளிநாடுகளில் இருந்து முதலீடுகளைப் பெறுவதற்காக, அந்நிய முதலீட்டு ஊக்குவிப்பு வாரியத்திடம் (எஃப்ஐபிபி) இருந்து ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்துக்கு சட்ட விரோதமாக, கார்த்தி சிதம்பரம் அனுமதி பெற்றுத் தந்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

மேலும், அதற்காக, அந்த நிறுவனத்திடம் இருந்து கார்த்தி சிதம்பரம் லஞ்சம் வாங்கியதாகவும், அந்த நிறுவனத்தை மறைமுகமாக தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்ததாகவும் கூறப்படுகிறது.

அதையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த சிபிஐ, கடந்த மே மாதம், அவருடைய வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை நடத்தியது.

இந்த விவகாரம் தொடர்பாக, விசாரணை நடத்துவதற்கு, சிபிஐ அடுத்தடுத்து நோட்டீஸ் அனுப்பியும், கார்த்தி சிதம்பரம் ஆஜராகவில்லை.

அதையடுத்து, அவரை கண்காணிக்கப்படும் நபராக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com