கோடை காலத்தில் கர்நாடகம் தண்ணீர் தருவதில்லை: காவிரி வழக்கில் தமிழக அரசு வாதம்

கோடை காலத்தில் தமிழகத்துக்கு தேவையான நீரை கர்நாடகம் திறந்து விடுவதில்லை என்று உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் காவிரி வழக்கு இறுதி விசாரணையின் போது தமிழக அரசு

கோடை காலத்தில் தமிழகத்துக்கு தேவையான நீரை கர்நாடகம் திறந்து விடுவதில்லை என்று உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் காவிரி வழக்கு இறுதி விசாரணையின் போது தமிழக அரசு குற்றம்சாட்டியது.
காவிரி நதி நீர்ப் பங்கீடு தொடர்பாக 2007-இல் காவிரி நடுவர் மன்றம் அளித்த இறுதித் தீர்ப்பு குறித்து தமிழகம், கர்நாடகம், கேரளம் ஆகிய மாநிலங்கள் மனுக்களைத் தாக்கல் செய்துள்ளன. இந்த மனுக்கள் மீது உச்ச நீதிமன்றத்தில் இறுதி விசாரணை நடைபெற்று வருகிறது. இதில் 16-ஆவது நாளாக வியாழக்கிழமை நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, அமிதவா ராய், ஏ.எம். கான்வில்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணை நடைபெற்றது.
அப்போது, தமிழக அரசு சார்பில் மூத்த வழக்குரைஞர் சேகர் நாப்டே ஆஜராகி முன்வைத்த வாதம்: ஜூன் 1 முதல் மே 31-ஆம் தேதி வரை தண்ணீர் ஆண்டாகவும், ஜூன் 1 முதல் ஜனவரி 31-ஆம் தேதி வரை பாசன ஆண்டாகவும் குறிப்பிட்படுகிறது. இதுபோன்ற சூழலில் ஜனவரி 31-ஆம் தேதிக்குப் பிறகும் அணைகளிலுள்ள நீரை கர்நாடகம் ஆண்டுதோறும் பாசனத்துக்குப் பயன்படுத்தி வருகிறது. இது போன்ற நீரை கேழ்வரகு போன்ற அங்கீகாரமற்ற பயிர் பாசனத்துக்கு பயன்படுத்துவது நெறிமுறையற்றது.
கோடை காலம் வரும் போது, தமிழகத்துக்குத் தேவையான நீரை திறந்துவிடுமாறு கோரினால், அணைகளில் நீரில்லை என கர்நாடகம் கைவிரிக்கிறது. மேலும், தமிழகத்துக்கு ஆண்டுதோறும் போதுமான அளவு நீர் திறந்துவிடப்பட்டுள்ளது என்ற கர்நாடகத்தின் வாதத்திலும் உண்மையில்லை. கர்நாடகத்தில் எப்போதெல்லாம் அதிக மழை பெய்து, அணைகள் நிரம்பி வழிகின்றனவோ, அப்போதெல்லாம் வேறு வழியின்றி தண்ணீரை தமிழகத்துக்குத் திறந்துவிடுகிறது என்றார் சேகர் நாப்டே.
அப்போது குறுக்கிட்ட கர்நாடக அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் ஃபாலி எஸ். நாரிமன், 'மழை நீரைச் சேமித்து வைக்க கர்நாடகத்தில் போதுமான அணைகள் இல்லை. இதைக் கருத்தில் கொண்டு தமிழகம் - கர்நாடக எல்லையில் மேகே தாட்டூ அணை கட்டும் திட்டத்துக்குத் தமிழகம் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது' என்றார்.
இதைத் தொடர்ந்து, தமிழக அரசு சார்பில் வழக்குரைஞர் சேகர் நாப்டே, 'மேகேதாட்டூ அணை கட்டுவதை தமிழகம் எதிர்க்கவில்லை. இவ்வாறு கட்டப்படும் அணை மூன்றாவது அமைப்பின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும். எப்போது தண்ணீரைத் திறந்துவிடுவது, எவ்வளவு தண்ணீரை தேக்கி வைப்பது ஆகியவை குறித்து அந்த மூன்றாவது அமைப்புதான் முடிவு எடுக்க வேண்டும்' என்றார்.
அப்போது நீதிபதிகள், 'தமிழகத்தின் தண்ணீர் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில், கர்நாடகம் - தமிழக எல்லையில் அணையை கட்டுவதனால், காவிரி நீர்ப் பற்றாக்குறை பிரச்னைக்குத் தீர்வு ஏற்படுமா? கர்நாடகத்தின் அணைகள் முழுவதும் வற்றிவிடாமல் இருக்கும் வகையில், தண்ணீரைத் தேக்கி வைக்குமாறு கர்நாடகத்தை அறிவுறுத்துவோம்' என்றனர்.
அப்போது குறுக்கிட்ட கர்நாடக அரசின் சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் ஃபாலி எஸ். நாரிமன், 'அப்படியென்றால் மேட்டூர் அணையின் கட்டுப்பாடும் மூன்றாவது அமைப்புக்கு வழங்கப்படுமா?' என்றார். இதற்கு தமிழகத்தின் சார்பில் ஆஜரான வழக்குரைஞர் சேகர் நாப்டே, 'கர்நாடகத்தில் உள்ள கிருஷ்ணராஜ சாகர் அணையின் கட்டுப்பாடும் மூன்றாவது அமைப்புக்கு வழங்கப்படுமா? நீர்ப் பங்கீட்டில் சமத்துவக் கொள்கைகளில் நம்பிக்கை வைத்திருக்கிறோம்' என்றார்.
பின்னர் பிற்பகல் நடைபெற்ற விசாரணையின் போது பெங்களூரு குடிநீர்ப் பயன்பாடு குறித்து வழக்குரைஞர் சேகர் நாப்டே வாதங்களை முன்வைத்தார். அப்போது அவர் வாதிடுகையில், 'பெங்களூருவின் மூன்றில் ஒரு பங்கு பகுதி மட்டும்தான் காவிரிப்படுகையில் உள்ளது. அதற்கு மட்டும்தான் காவிரி நீர் வழங்கப்பட வேண்டும். ஆனால், காவிரிப் படுகையில் இல்லாத பகுதிகளுக்கும் கர்நாடகம் காவிரி நீரை வழங்கி வருகிறது. தேசிய நீர்க் கொள்கைக்கு எதிராக கர்நாடகம் செயல்பட்டு வருகிறது. மேலும், தொழிற்சாலைப் பயன்பாட்டு நீரை கர்நாடகம் மறுசுழற்சி செய்வதில்லை. இதனால், தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் கழிவுகள் காவிரியில் கலக்கின்றன.
இது தொடர்பான வழக்கும் இதே நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. சென்னையின் குடிநீர்த் தேவையைப் பூர்த்திச் செய்ய மிகவும் தொலைவில் உள்ள கிருஷ்ணா நதியிலிருந்து கால்வாய் மூலம் தண்ணீர் பெறப்பட்டு வருகிறது' என்றார். இதைத் தொடர்ந்து வாதங்களைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை வரும் செவ்வாய்க்கிழமைக்கு (ஆகஸ்ட் 22) ஒத்திவைத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com