தாஜ்மஹாலை அழிக்க நினைக்கிறீர்களா?: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் சரமாரியான கேள்வி

தாஜ்மகாலை சுற்றி உள்ள மரங்களை வெட்டுவதற்கு அனுமதி கோரிய மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
தாஜ்மஹாலை அழிக்க நினைக்கிறீர்களா?: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் சரமாரியான கேள்வி

புதுதில்லி: தாஜ்மகாலை சுற்றி உள்ள மரங்களை வெட்டுவதற்கு அனுமதி கோரிய மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில், முகலாய மன்னர் ஷாஜகான், தன் காதல் மனைவி மும்தாஜ் நினைவாக 1631 ஆம் ஆண்டு தாஜ்மகாலை கட்டினார். தாஜ்மகால், உலக அதிசயமாக திகழ்ந்து வருகிறது. ஐ.நா. அமைப்பான யுனெஸ்கோ, உலக பாரம்பரிய சின்னமாக தாஜ்மகாலை அறிவித்துள்ளது.

உலக அதசியங்களில் ஒன்றான தாஜ்மஹாலுக்கு அருகில் உள்ள மரங்களை அழிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், காற்று மாசு மற்றும் மரங்கள் அழிப்பில் இருந்து தாஜ்மகாலை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிடுமாறும், தாஜ்மஹாலுக்கு அருகில் நிறுவப்படும் கட்டுமான பணிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து சுற்றுச்சூழல் நிபுணர் எம்.சி.மேத்தா என்பவர் பொதுநல வழக்கு ஒன்று தொடுக்கப்பட்டது. இதையடுத்து தாஜ்மஹாலின் அழகியலை பாதிக்கும் எந்த நடவடிக்கைகளையும் அரசு மேற்கொள்ளக்கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்ததுடன், தாஜ்மகாலை சுற்றி உள்ள வளர்ச்சி பணிகளையும் கண்காணித்து வருகிறது.

இந்நிலையில், உத்தரபிரதேச மதுரா நகரில் இருந்து டெல்லுக்கு நிறுவப்படும் ரயில் பாதையை அமைக்க தாஜ்மஹாலை சுற்றியுள்ள 400க்கும் மேற்பட்ட மரங்களை வெட்டுவதற்கு அனுமதி கோரி அரசுத்தரப்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் மதன் பி.லோகுர், தீபக் குப்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது கோபமடைந்த நீதிபதிகள், “உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹாலை அழித்துவிட நினைக்கிறீர்களா..? தாஜ்மகாலின் சமீபத்திய படங்களை பார்த்து இருக்கிறீர்களா? பார்க்காவிட்டால், இணையதளத்தில் போய் பாருங்கள்.

அதன்பிறகும் நீங்கள் விரும்பினால், தாஜ்மகாலை அழிக்க இந்திய அரசு விரும்புகிறது என்று பிரமாண பத்திரமோ, எழுத்துப்பூர்வமான ஆவணம் தாக்கல் செய்துவிடுங்கள் என கடுமையாக விமர்சித்தனர்.

இதையடுத்து வழக்கு விசாரணையை அடுத்த மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது.  

கடந்த சில ஆண்டுகளாக தாஜ்மஹாலை சுற்றியுள்ள மரங்கள் வெட்டப்படு வருவதால் அப்பகுதி முழுவதும் பொலிவிழந்து காணப்படுகிறது. மேலும், அந்த பகுதியில் பெருகியுள்ள தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் புகைகளாலும் தாஜ்மஹாலின் அழகில் பாதிக்கப்பட்டுள்ளது.

தாஜ்மஹால் உள்பட ஆக்ராவில் உள்ள பல்வேறு வரலாற்றுச் சின்னங்கள் சுற்றுச்சூழல் மாசுபாட்டில் இருந்து இப்போதுவரை பாதுகாக்கப்படவில்லை. இது தொடர்பாக 23 ஆண்டுகளுக்கு முன்பே உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அப்போது, தாஜ்மஹால் பகுதியைச் சுற்றியுள்ள சுற்றுச்சூழலை பாதிக்கும் தொழிற்சாலைகளை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் அல்லது அவற்றை மூட வேண்டும் உச்ச நீதிமன்றம் கூறியது. இது விஷயத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

மேலும், இப்போது ஆக்ராவில் அதிகரித்து வரும் வாகன எண்ணிக்கை, கிராமத்தில் இருந்து வரும் மக்கள் அதிகம் வருவதால் நகரம் விரிவடைந்து செல்வது போன்ற காரணங்களால் நகரின் சுற்றுச்சூழல் வெகுவாகப் பாதிக்கப்படுகிறது என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் குற்றம்சாட்டி இருந்த நிலையில், ரயில்பாதை அமைப்பதற்காக 400க்கும் மேற்பட்ட மரங்களை வெட்ட அரசு முனைவதால் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் பெரும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com