நீட் அவசரச் சட்ட முன்வரைவு: மத்திய உள்துறை ஒப்புதல் எப்போது?

'நீட்' தேர்வில் இருந்து ஓராண்டுக்கு விலக்கு கோரும் அவசரச் சட்ட முன்வரைவுக்கு மத்திய உள்துறையிடமிருந்து வெள்ளிக்கிழமை ஒப்புதல் கிடைத்துவிடும் என்று நம்புவதாக தமிழக சுகாதாரத் துறை அமைச்சர்

'நீட்' தேர்வில் இருந்து ஓராண்டுக்கு விலக்கு கோரும் அவசரச் சட்ட முன்வரைவுக்கு மத்திய உள்துறையிடமிருந்து வெள்ளிக்கிழமை ஒப்புதல் கிடைத்துவிடும் என்று நம்புவதாக தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
'நீட்' தேர்வில் இருந்து தமிழகத்துக்கு நிகழாண்டுக்கு மட்டும் விலக்கு கோரும் அவசரச் சட்ட முன்வரைவை மத்திய உள்துறையிடம் தமிழக அரசின் 5 பேர் கொண்ட அதிகாரிகள் குழு திங்கள்கிழமை சமர்ப்பித்தது. இந்த அவசரச் சட்ட முன்வரைவுக்கு மத்திய அரசின் சட்டம், மனிதவளம், சுகாதாரம் ஆகிய அமைச்சகங்கள் புதன்கிழமை இரவு ஒப்புதல் வழங்கியதாக தகவல்கள் வெளியாகின. ஆனால், சுகாதாரத் துறையிடமிருந்து ஒப்புதல் வழங்க வேண்டியிருப்பதாக வியாழக்கிழமை கூறப்பட்டது.
இதைத் தொடர்ந்து, அவசரச் சட்ட முன்வரைவு தொடர்பாக சுகாதாரத் துறை, உள்துறை அமைச்சகங்களிடம் ஒப்புதல் பெறுவதற்கான முயற்சிகளை தமிழக அரசின் உயரதிகாரிகள் தீவிரமாக மேற்கொண்டனர். இதுதொடர்பாக குடியரசுத் துணைத் தலைவரும் மாநிலங்களவைத் தலைவருமான எம்.வெங்கய்ய நாயுடுவை தமிழக அமைச்சர் சி.விஜயபாஸ்கர், மக்களவைத் துணைத் தலைவர் மு.தம்பிதுரை ஆகியோர் நேரில் சந்தித்துப் பேசினர்.
இதுகுறித்து தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறுகையில், 'நீட் தேர்வு விலக்கு தொடர்பான அவசரச் சட்ட முன்வரைவில் மத்திய அரசிடம் ஒப்புதல் பெறுவதற்கான தமிழக அரசின் முயற்சிகள் சரியான திசையில் சென்று கொண்டிருக்கின்றன. மத்திய உள்துறை , சுகாதாரத் துறை அமைச்சக அதிகாரிகளை வெள்ளிக்கிழமை சந்தித்து அவசரச் சட்ட முன்வரைவுக்கு ஒப்புதல் பெற்றுவிடுவோம் என நம்புகிறோம்' என்றார்
மக்களவைத் துணைத் தலைவர் மு.தம்பிதுரை கூறுகையில், 'நீட்' தேர்வில் நிகழாண்டுக்கு விலக்கு அளிக்கும் வகையில் அவசரச் சட்ட முன்வரைவை தமிழக அரசு கொண்டு வந்து மத்திய அரசிடம் அளித்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பான வழக்கு விசாரணையின் போது 'இந்த அவசரச் சட்டத்தை தடுக்க முடியாது. விரைவில் இரண்டு, மூன்று தினங்களில் முடிவாகிவிடும் என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசும் கூறியிருக்கிறது' என்றார்.
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரிக்க விசாரணை ஆணையம் அமைக்கப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியிருப்பது குறித்து அவரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு 'முதல்வர் வெளியிட்ட அறிவிப்புகள் மக்கள் மனத்தின் பிரதிபலிப்பாகும். இது வரவேற்கத்தக்க ஒன்றுதான்' என்றார் தம்பிதுரை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com